(பஸ்ஹான் நவாஸ்)
அரபு - முஸ்லிம் உலகில் நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞரும், சிந்தனையாளருமான செய்யித் ஹபீப் உமர் அல் ஜீலானி அவர்கள் காலமானார்கள். யெமன் நாட்டின் ஹழரமெளத் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், புனித மக்கா நகரில் வசித்து வந்த இவர்கள், புனித ஹரம் ஷரீபிலிருந்து 5 கி.மீ தூரத்தில்தான் வசித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமகால ஷாஃபிஈ சட்டவாக்கத்தின் (Shafi'i Jurisprudence) தவிர்க்க முடியாத ஆளுமையாகவே செய்யித் உமர் அல் ஜீலானி அவர்கள் கருதப்படுகிறார்கள் என்பது சமகால சட்டத்துறை நிபுணர்களின் கருத்தாகும்.
செய்யித் உமர் ஜீலானி அவர்கள், இமாம் அப்துல் காதிர் அல் ஜீலானி அவர்களின் குடும்ப வழித்தோன்றல் ஆவார். "வஸதிய்யா" (நடுநிலை) என்ற கோட்பாட்டை அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்திக் காட்டிய பெருமை இவரைச் சாரும். ஹதீஸ் துறையின் தற்கால முஹத்திஸீன்களுக்கு மத்தியில் இவர் மிக முக்கியமான ஒருவராகவும் அடையாளப்படுத்தப்படுகிறார்.
தனது இறுதிக்காலத்தில் துருக்கியில் ஹதீஸ் துறை கற்கை நிறுவகங்களில், குறிப்பாக மஹ்மூத் எஃபெண்டி (Mahmud Effendi) அவர்கள் நிர்மாணித்த கல்லூரிகளில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார்கள். அத்துடன் தூர கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு தஃவா பணிக்காகத் தனது பயணங்களை அமைத்துக்கொண்டார்கள். இவர் இலங்கைக்கும் பல தடவைகள் விஜயம் செய்துள்ளமை நினைவுகூரத்தக்கது.
இன்று பல அரபு மற்றும் மேற்குலகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள் செய்யித் ஹபீப் உமர் ஜீலானி அவர்களின் மாணவர்கள் ஆவர். அவர் தனது பயணங்களை மிகத் திட்டமிட்ட வகையில் பயன்படுத்திக்கொள்வார். வாகனங்களில் பயணிக்கும் போது உடனிருப்பவர்களுக்கு தஃவா செய்வது அல்லது பயணம் நிறைவடையும் வரை புதிதாக வெளியான புத்தகங்களை வாசிப்பது இவரது வழக்கமாகும்.
செய்யித் ஹபீப் உமர் ஜீலானி வஃபாத்தாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படமே இங்கு பகிரப்பட்டுள்ளது. மஸ்கட் நகரில் இருந்து ஜகார்தாவிற்கான பயணத்தின் போது, அவரது மாணவரும் அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான செய்யித் இஸ்மாயில் பஜ்ரி அல் அத்தாஸ் (Prof Ismail Fajrie Alatas) எழுதிய 'தாஜுல் அரூஸ் ஃபீ மனாகிபில் அவ்லியாஇ வஸ்ஸாலிஹீன்' (تاج العروس في مناقب الأولياء والصالحين) என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் போதே அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்.
அரபு உலகிற்கும் தூர கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள், ஷாஃபிஈ சட்டவாக்கத்தின் பணிகளும் செல்வாக்கும், இலக்கியத்துறை சார்ந்த பாஅலவிகளின் பங்களிப்புக்கள், டச்சுக் காலனித்துவவாதிகளிடமிருந்து மலாயா பகுதியை மீட்பதற்கு சூபி அறிஞர்கள் வழங்கிய பங்களிப்புக்கள் உட்பட பல்வேறு தலைப்புக்களைக் கொண்ட அப்புத்தகத்தின் மீதான வாசிப்பின் போதே அவர்கள் எம்மிடமிருந்து விடைபெற்றார்கள்.
உமர் ஜீலானி போன்ற ஆளுமைகள் தமிழ் பேசும் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டிய சமுத்திரங்கள். தஸவ்வுப் (ஆன்மீக) கலையின் முன்மாதிரிகளில் ஒருவர். வல்ல நாயன் செய்யித் ஹபீப் உமர் ஜீலானியின் பணிகளையும் தியாகங்களையும் அங்கீகரித்து, அவர்களுக்கு மேலான ஜன்னதுல் ஃபிர்தௌஸை வழங்குவானாக. ஆமீன்.

