சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் கையொப்பத்துடன் ‘வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை இலக்கம் 08/2025 (iii)’ வெளியிடப்பட்டுள்ளது. 2026.01.22 திகதியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட வணிகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் கொடுப்பனவு விபரங்கள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளன
வழங்கப்படும் கொடுப்பனவு விபரங்கள்:
- பதிவு செய்யப்பட்ட வணிகங்களுக்கு (ரூ. 200,000):
- கைத்தொழில் அமைச்சில் அல்லது பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட தனிநபர், சிறிய மற்றும் நுண் தொழில் முயற்சிகளுக்கு ஒரு அலகுக்கு ரூ. 200,000 வழங்கப்படும்.
- பதிவு செய்யப்படாத நிலையான வணிகங்களுக்கு (ரூ. 50,000):
- நிரந்தர கட்டடத்தில் இயங்கும், பதிவு செய்யப்படாத வணிக தொழில் முயற்சிகளுக்கு ஒரு அலகுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.
- உற்பத்தி மற்றும் பசுமை இல்லங்களுக்கு (ரூ. 50,000):
- பதிவு செய்யப்படாத உற்பத்தித் தொழில்கள் மற்றும் பசுமை இல்லங்கள் (Green houses) போன்றவற்றிற்கு ஒரு அலகுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.
- நடமாடும் வியாபாரிகளுக்கு (ரூ. 25,000):
- பாதசாரிகள் மற்றும் நடமாடும் வியாபாரம் புரியும் உள்ளிட்ட தற்காலிக வர்த்தகங்களுக்கு ஒரு அலகுக்கு ரூ. 25,000 வழங்கப்படும்.
முக்கிய நிபந்தனைகள்:
- பதிவு செய்யப்பட்ட வணிகங்கள் (பிரிவு 8.1 மற்றும் 8.2) ஒவ்வொரு வணிக அலகுக்கும் ஒரு கொடுப்பனவை மட்டுமே பெற முடியும்.
- ஏனைய பிரிவுகளின் கீழ் (8.3, 8.4, 8.5) ஒன்றுக்கு மேற்பட்ட கொடுப்பனவுகளைப் பெற ஒரு பயனாளி தகுதி பெற்றிருப்பின், அந்த பிரிவுகள் ஒவ்வொன்றின் கீழும் ஒரு கொடுப்பனவை மட்டுமே கோர முடியும்.
- இந்தக் கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும்
பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



