பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்

Rihmy Hakeem
By -
0

 

Pic - AI

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் போக்குவரத்து பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 


இதன்படி, தரம் 5 முதல் 13 வரையான மாணவர்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பி.ப 1.30 மணி வரை மாற்றமின்றி தொடரும்.


தரம் 6 முதல் தரம் 13 வரையான வகுப்புகளுக்கு ஒரு நாளைக்கு 7 பாடவேளைகள் ஒதுக்கப்படுவதுடன், ஒரு பாடவேளைக்காக 45 நிமிடங்கள் வழங்கப்படும். 2026ஆம் ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய தரங்களுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 


அந்த வகையில், தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும். தரம் 1 மாணவர்களை அறிமுகப்படுத்தும் பணிகள் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கும்.


தரம் 1 இற்கான செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் தரம் 6 இற்கான கற்றல் தொகுதிகள் (Learning Modules) அந்த வகுப்புகள் ஆரம்பமாவதற்கு முன்னரே வழங்கப்படவுள்ளன. ஏனைய தரங்களுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு முடிந்துள்ளன.


 அத்துடன், 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களைக் கொண்ட விரிவான சுற்றுநிருபம் ஜனவரி 2 ஆம் திகதி வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)