அலவல நிலையான சுற்றுலா கிராமம்: அத்தனகல்லவில் ஆரம்பம்

Rihmy Hakeem
By -
0




மேல் மாகாண சுற்றுலா சபையின் அபிவிருத்தித் திட்டமான அத்தனகல்ல சமூக அடிப்படையிலான நிலையான சுற்றுலா கிராமத் திட்டம் (FAM Tour), கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அலவல கிராம வளாகத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.


கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், தொழில் பிரதி அமைச்சருமான மகிந்த ஜயசிங்க அவர்களின் தலைமையில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.


ஒரே கிராமத்திற்குள் இலங்கையின் தனித்துவமான கலாசார அடையாளங்களை அனுபவிக்கும் வாய்ப்பை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இலங்கையில் ஒரே கிராமத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்து பல்வேறு சுற்றுலா அனுபவங்களைப் பெறக்கூடிய முதலாவது சுற்றுலா கிராமமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அங்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா முகவர்களுக்கு, கிராமத்தின் இயற்கை மற்றும் பாரம்பரிய கலை சார்ந்த விசேட அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.


சுமார் 14,000 ஆண்டுகள் பழமையான தொல்பொருள் சான்றுகளைக் கொண்ட அலவல குகையை மையமாகக் கொண்டே இந்த சுற்றுலா கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுற்றுலாப் பயணிகள் பின்வரும் அம்சங்களை பார்வையிட்டு அனுபவித்தனர்:


அலவல காரீய (Graphite) சுரங்கம், தேனீ வளர்ப்பு மற்றும் பாரம்பரிய மேளம் தயாரிக்கும் முறை.

மூங்கில் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய விவசாய உபகரணங்கள்.

மககந்த வனப்பகுதி மற்றும் ஆச்சிரமத்தைப் பார்வையிடல்.

கயிறு மூலம் மலை இறங்கும் (Abseiling) சாகச விளையாட்டுக்கள்.

மேலும், இந்த ஆரம்ப நிகழ்வின் ஒரு பகுதியாக கிராமப் பகுதியில் மரநடுகை வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், கம்பஹா மாவட்டத்திற்குள்ளேயே தமது முதல் சுற்றுலா அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்வதும், அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை அலவல கிராம மக்களுக்கு நேரடியாகப் பெற்றுக்கொடுப்பதும் இந்த வேலைத்திட்டத்தின் இலக்காகும்.


கம்பஹா மாவட்டச் செயலாளர் லலிந்த கமகேவின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக ஹெட்டியாராச்சி, ருவன் மாப்பலகம, மேல் மாகாண சுற்றுலா சபையின் தலைவர் கலாநிதி மகேஷ் பிரியதர்ஷன மற்றும் அத்தனகல்ல பிரதேச செயலாளர் எஸ்.பி. குணவர்தன உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஊடகப் பிரிவு - கம்பஹா









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)