கம்பஹா மாவட்டத்தின் மிகப்பெரிய மற்றும் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மாவட்டச் செயலக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “அக்ரா” (Agra) கேட்போர் கூடம், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் இன்று (15) முற்பகல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. சர்வ மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, அமைச்சர் நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்ததுடன், கேட்போர் கூடத்தின் நினைவுப் புத்தகத்தில் விசேட குறிப்பொன்றையும் பதிவிட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்கள், கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்த பல திட்டங்களை தற்போது மீண்டும் ஆரம்பிக்க முடிந்துள்ளதாகவும், இந்த கேட்போர் கூடம் அரச சேவையை வலுப்படுத்துவதற்கும் அரச நிறுவனங்களின் பணிகளை மிகவும் தரமானதாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுப்பதற்கும் உதவும் என்றும் தெரிவித்தார். மேலும் "வளமான நாடு - அழகான வாழ்வு" கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் பண்புள்ள மனிதனை உருவாக்கும் நோக்கில் கலாசார மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், சியனே கோரளையின் கலாசார மறுமலர்ச்சிக்கு இக்கட்டிடம் பெரும் பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 712 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடம், 1000 பேர் அமரக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது. இதில் 24 மீற்றர் நீளம் மற்றும் 12 மீற்றர் அகலமுடைய பிரம்மாண்ட மேடை, நவீன ஒலி மற்றும் மேடை ஒளி அமைப்புகள், ஆடியோ-விஷுவல் வசதிகள் மற்றும் மொழிபெயர்ப்பு வசதிகள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. நாடக மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காக 360 பாகை காட்சிகளை வழங்கக்கூடிய 'சைக்ளோராமா' (Cyclorama) அகலத்திரை வசதி இதன் விசேட அம்சமாகும். அத்துடன் பிரமுகர் ஓய்வறை, ஒப்பனை அறைகள் மற்றும் மேல் மாடியில் கலைக்கூடம் போன்ற நவீன வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் தொழிலாளர் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவி ஹேமாலி வீரசேகர, அமைச்சுக்களின் செயலாளர்கள், கம்பஹா மாவட்டச் செயலாளர் லலிந்த கமகே, கலைஞர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். பழமையான அக்ரா கட்டிடத்தில் இயங்கிய மாவட்டச் செயலகத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ், மாவட்டத்தின் கலை மற்றும் கலாசாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இப்புதிய கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.










