நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று மே 15ஆம் திகதி காலை 6:30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அத்தனகல்ல ஓயாவின் நீர்மட்டம் சிறு வெள்ள நிலையை எட்டியுள்ளது.
துனாமல அளவீட்டு நிலையத்தில் இன்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 4.70 மீற்றராகப் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு 4.65 மீற்றராகக் காணப்பட்ட நீர்மட்டம் தற்போது அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகின்றது. கடந்த 21 மணித்தியாலங்களில் இப்பகுதியில் 179.4 மில்லிமீற்றர் என்ற மிக அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையே இந்த நீர்மட்ட உயர்விற்குக் காரணமாகும்.
துனாமல பகுதியில் 4.40 மீற்றர் நீர்மட்டம் சிறு வெள்ள அபாய நிலையாகக் கருதப்படும் நிலையில், தற்போது நீர்மட்டம் அதனைத் தாண்டியுள்ளது. எனவே அத்தனகல்ல ஓயாவைப் பயன்படுத்தும் மக்களும் அதன் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

