கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட நீர்கொழும்பு, களனி மற்றும் கம்பஹா ஆகிய காவல் துறைப் பிரிவுகளில் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 39 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவங்களில் சிலர் கர்ப்பம் தரித்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மேல் மாகாணத்தின் வட பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் அண் (26) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் களனி ஆகிய காவல் துறைப் பிரிவுகளின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், இச்சம்பவங்களுக்கு பிள்ளைகளின் பாதுகாப்பற்ற தன்மையே முதன்மைக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அயலவர்கள் மற்றும் பிள்ளைகளுடன் நெருங்கிப் பழகும் பெரியவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதால், பெற்றோர்களும் பாதுகாவலர்களும் பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், சமூக ஊடகங்கள், குறிப்பாக முகநூல் (Facebook) ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தி, சிறு வயதுடைய பிள்ளைகள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க, பிள்ளைகளின் இணையப் பயன்பாடு குறித்து பெற்றோர்கள் தீவிர அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இக்குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு காவல் துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(கம்பஹா நியூஸ் இணையம்)

