42 வது தேசிய மீலாதுன் நபி பெருவிழாவை இம்முறை கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இம்முறை பிரதான அரச மீலாத் விழா நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய மகா வித்தியாலயத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த தேசிய விழாவின் ஏற்பாடுகள் மற்றும் திட்டமிடல்கள் குறித்த ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தலைமையில் இன்று (13) நீர்கொழும்பு, பெரியமுல்லை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த ஆரம்பகட்ட கலந்துரையாடலின் போது,பிரதேச மக்களுக்கு தெளிவூட்டல், விழாவின் முக்கியத்துவம் மற்றும் அதனை வெற்றிகரமாக நடாத்த ஊர் மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளல், விழா நடைபெறவுள்ள வளாகத்தின் வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை ஆராய்தல், நிகழ்ச்சி நிரல் போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச சமய தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள் மற்றும் பிரதேச பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.








