பாடசாலை ஊடகக் கழகங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும் பாட ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் மாகாண மட்டப் பயிற்சி முகாம் நேற்று (ஜூன் 04) மட்டக்களப்பில் நடைபெற்றது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வழிகாட்டலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இந்த விசேட திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தரமான ஊடக அறிவுத்திறன் (Media Literacy) கொண்ட திறமையான இலங்கை பாடசாலை சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு, நேற்று முற்பகல் 8:30 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் திரு. ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களினால் இக்கருத்தரங்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி திரு. வி. ஜீவானந்தன் ஒருங்கிணைத்த இக்கருத்தரங்கில், துறைசார் வளவாளர்களினால் பின்வரும் தலைப்புகளில் முக்கிய அமர்வுகள் நடத்தப்பட்டன:
- தரமான ஊடக அறிவுத்திறனும் டிஜிட்டல் பொறுப்புணர்வும்: கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் துறையின் விரிவுரையாளர் திரு. ஜோயல் ஜெயரஸ்.
- மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியில் பாடசாலை ஊடகக் கழகங்களின் பங்கு (மூலோபாயத் திட்டமிடல்): அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரியும், சியனே ஊடக வட்டத்தின் (Siyane Media Circle) செயலாளருமான திரு. எஸ்.ஏ.எம். பவாஸ்.
- செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும் அதன் அடிமைத்தனமும்: உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ATI) தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவரும் உதவி விரிவுரையாளருமான திரு. கே. தேவரூபன்.
இக்கருத்தரங்கின் நிறைவு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திரு. ஜே.எஸ். அருள்ராஜ் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, பயிற்சிகளை நிறைவு செய்த ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.








