கஹட்டோவிட்டவில் நீண்டநாள் அவதிக்கு முற்றுப்புள்ளி: நீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழிகளை செப்பனிடும் பணிகள் ஆரம்பம்!

Rihmy Hakeem
By -
0

 


கஹட்டோவிட்ட பிரதேசத்தின் பிரதான மற்றும் உள்ளூர் வீதிகளில் நீர் இணைப்புக்காகத் தோண்டப்பட்டு, நீண்ட நாட்களாக மூடப்படாமல் இருந்த குழிகளை செப்பனிடும் பணிகள் கடந்த புதன்கிழமை (அத்தனகல்ல) பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காபட் ரெடிமிக்ஸ் மற்றும் கொன்கிறீட் இட்டு இந்த வீதிகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன.


​மக்கள் எதிர்கொண்ட அசௌகரியங்கள்


​கஹட்டோவிட்ட பிரதான பாதை மற்றும் உள்ளூர் வீதிகளில் நீர் வழங்கல் சபையினால் குழாய்கள் பொருத்துவதற்காகப் பல மாதங்களுக்கு முன் குழிகள் தோண்டப்பட்டன. எனினும், அவை முறையாக மூடப்படாததால் வீதிகள் மோசமாக சேதமடைந்து காணப்பட்டன. இதனால், இப்பாதைகளைப் பயன்படுத்திய பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அன்றாடம் கடுமையான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.


​இழுபறியும் மக்கள் பிரதிநிதிகளின் முயற்சிகளும்


​இப்பிரச்சினை குறித்து ஆளும் தரப்பு பிரதேச சபை உறுப்பினர், அபிவிருத்திச் சபை மற்றும் வட்டார சபை மூலம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், பாதையை காபட் அல்லது கொன்கிறீட் இட்டு துரிதமாக புனரமைப்பது தொடர் இழுபறியாகவே இருந்து வந்தது.


​இதற்கிடையில், இப்பணிகளின் அவசியத்தை உணர்ந்த பிரதேச சபை உறுப்பினரும் சமூக சேவகருமான அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ், இப்பிரச்சினையை பிரதேச சபை தவிசாளர் மற்றும் நீர் வழங்கல் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக, நீர் இணைப்பு மற்றும் பாதை சேதங்களுக்காக மக்களிடம் அறவிடப்பட்ட கட்டணங்கள் குறித்தும், வேலைகள் தாமதமாவதற்கான காரணங்கள் குறித்தும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பிரதேச சபையிடம் அவர் கடிதம் மூலம் விளக்கம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


​களத்தில் இறங்கிய அத்தனகல்ல பிரதேச சபை


​நீண்ட நாட்களாகக் நீடித்த இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த புதன்கிழமை முதற்கட்ட பணிகள் தொடங்கின. அத்தனகல்ல பிரதேச சபையினால் காபட் ரெடிமிக்ஸ் கலவை அடங்கிய டிரக்டர் வண்டி, நவீன இயந்திர உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள் இப்பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


​கஹட்டோவிட்ட வட்டாரத்தின் ஆளும் தரப்பு பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் இன்சாப் தலைமையில், வட்டார சபை மற்றும் அபிவிருத்தி சபை உறுப்பினர்களின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலில் பிரதான பாதையின் குறுக்குவெட்டு குழிகளும், பாதையோரக் குழிகளும் காபட் ரெடிமிக்ஸ் இடப்பட்டு வெற்றிகரமாக மூடிச் செப்பனிடப்பட்டன.


​உள்ளூர் வீதிகளும் புனரமைப்பு


​பிரதான வீதி மட்டுமன்றி, மோசமாக சேதமடைந்திருந்த உள்ளூர் வீதிகளும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.


  • ​கஹட்டோவிட்ட அஷ்ரப் ஹாஜியார் மாவத்தை (அல் பத்ரியா) பாதையின் இறுதியில் குறுக்காக தோண்டப்பட்டிருந்த பகுதி.
  • ​அதற்கு மேலாக பாலிக்கா வீதிக்குச் செல்லும் பாதையின் அருகே வெட்டப்பட்டிருந்த குழிகள்.

​ஆகியன பிரதேச சபை உறுப்பினர் இன்சாப் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் செப்பனிட்டு முடிக்கப்பட்டன.


​வட்டார சபை தலைவரின் கருத்து

​இது குறித்து கஹட்டோவிட்ட வட்டார சபை தலைவர் ஜவாத் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்:

​"அரச தரப்பு உதவிகள் உடனடியாகக் கிடைப்பதில் சில காலதாமதங்கள் ஏற்படுவது வழமையே. எனினும், வட்டாரத்தில் உள்ள ஏனைய உள்ளூர் வீதிகளில் தோண்டப்பட்டுள்ள குழிகளும் மிக விரைவில் கொன்கிறீட் இடப்பட்டு முழுமையாக செப்பனிடப்படும்." என ஊர் மக்களுக்கு உறுதியளித்தார்.


நன்றி - கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல் 









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)