சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் மத மற்றும் கலாசார அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் அமுல்படுத்தக்கூடிய தெளிவான அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை உடனடியாக வெளியிடுமாறு கோரி, சமூக கற்கைகள் மையம் (Centre for Social Studies – CSS) சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கு அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் ஹிஜாப் மற்றும் தங்களது மத நம்பிக்கைக்கு ஏற்ப ஒழுக்கமான ஆடை அணிந்ததன் காரணமாக பணியில் ஈடுபடுவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தங்களது முறைப்பாடுகளை 2026 ஆகஸ்ட் 12 ஆம் திகதி சுகாதார அமைச்சரிடம் தனித்தனியாக சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு தனிப்பட்ட சம்பவமாக மட்டுமல்லாமல், கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரச வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் மீண்டும் மீண்டும் எதிர்கொண்டு வரும் ஒரு தேசியளவிலான பிரச்சினையாக மாறியுள்ளதாக சமூக கற்கைகள் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 10, 12 மற்றும் 14ஆம் உறுப்புரைகள் மதச் சுதந்திரம், சமத்துவம் மற்றும் கலாசார உரிமைகளை உறுதிப்படுத்துகின்றன என்பதையும், இவ்வுரிமைகள் நடைமுறையில் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பாகும் என்பதையும் சமூக கற்கைகள் மையத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சிராஜ் மஸ்ஹுர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, சுகாதார அமைச்சு வெளியிட வேண்டிய சுற்றறிக்கையில் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் தங்களது மத நம்பிக்கைக்கு ஏற்ப ஹிஜாப் மற்றும் ஒழுக்கமான ஆடைகளை அணிந்து கடமையாற்றும் உரிமை தெளிவாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு மற்றும் தொழில்முறை தரநிலைகளுக்கு முரணில்லாத வரையில் மத அல்லது கலாசார அடையாள ஆடைகளுக்கு எந்த அதிகாரியும் தடைவிதிக்க முடியாது என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், மதம், இனம், மொழி அல்லது கலாசார அடிப்படையில் எந்தவொரு உத்தியோகத்தரிடமும் பாகுபாடு காட்டுவது ஒழுக்காற்று நடவடிக்கைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், நாட்டிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளும் ஒரே மாதிரியான வழிகாட்டலின் கீழ் செயற்பட வேண்டும் என்றும் சமூக கற்கைகள் மையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயத்தில் உடனடி தலையீடு செய்து நாடு முழுவதும் அமுல்படுத்தக்கூடிய தெளிவான அமைச்சு சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சமூக கற்கைகள் மையம் தெரிவித்துள்ளது.

