இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கு நாட்டில் மீண்டும் இடமில்லை – நீர்கொழும்பில் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளிப்பு

Rihmy Hakeem
By -
0

 


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து மத போதகர்களும் வழிகாட்டிய அமைதி, கருணை மற்றும் மனிதநேயம் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும், நாட்டில் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் மீண்டும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.


​இன்று (26) பிற்பகல் நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய மகா வித்யாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாத்-உன்-நபி அரச விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


​அவர் மேலும் உரையாற்றுகையில்:

​"நாட்டை அபிவிருத்தியடைந்த, நல்லதொரு அரசாகக் கட்டியெழுப்புவதில் ஏனைய எந்த அதிகாரத்தையும் விட மக்கள் சக்தி மீது அரசாங்கம் பலத்த நம்பிக்கை கொண்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது. அதேபோன்று மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயார் இல்லை.


​நீதியின் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதும், நீதி வழங்கும் பொறிமுறையை விரைவுபடுத்துவதுமே புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் நோக்கமாகும். நாட்டின் மிக முக்கியமான அடித்தளமான தேசிய ஒற்றுமைக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. சர்வதேச அளவில் மதிப்பும் அங்கீகாரமும் கொண்ட ஒரு நாடாக இலங்கையை மீண்டும் உயர்த்தவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நபிகளாரின் போதனையை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது."


​கடந்த காலத்தில் ஏற்பட்ட இனமோதல்களினால் நாட்டின் வாலிப சமூகம் பெருமளவில் பாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த கசப்பான அனுபவங்களின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு எதிர்காலத்தில் இத்தகைய மோதல்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார். அத்துடன், சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தல், திறமையான அரச சேவை உருவாக்கம் மற்றும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றங்களை ஒழிப்பது ஆகியவற்றுக்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.


​புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.


​நிகழ்வின் சிறப்பம்சங்கள்:

  • ​கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த, தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியை ஆன்மீக சேவையில் கழித்த மெளலவிகள் மற்றும் மத தலைவர்களின் சேவையை பாராட்டி ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டனர்.

  • ​தேசிய மீலாத்-உன்-நபி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  • ​2026 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத்-உன்-நபி அரச விழாவை முன்னிட்டு நினைவுத் தபால்தலையும் முதல் நாள் உறையும் வெளியிடப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

  • ​கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றைக் கூறும் நூல் மற்றும் 2026 மீலாத்-உன்-நபி சிறப்பு மலர் என்பனவும் ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டன.

  • ​பிரதேச மக்களின் சார்பாக ஜனாதிபதிக்கான நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

​இவ்விழாவில் உரையாற்றிய புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, மீலாத் விழாவை முன்னிட்டு ரூ. 10 மில்லியன் செலவில் கம்பஹா மாவட்டத்திலுள்ள 12 பள்ளிவாசல்களின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் ஹஜ் யாத்திரைக்கான சட்டமூலம் தயார் செய்யப்பட்டுள்ளமை மற்றும் வக்ஃப் சபையின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.


​இவ்விழாவில் மதத் தலைவர்கள், பிரதி அமைச்சர்களான முனீர் முலஃபர், மஹிந்த ஜயசிங்ஹ, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிக், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2026-08-26

















கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)