இலங்கையின் 42ஆவது தேசிய மீலாதுன் நபி அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலும், கௌரவப் பங்கேற்புடனும் வரும் 2026 ஆகஸ்ட் 26 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நீர்கொழும்பு அல்-ஹிலால் முஸ்லிம் மத்திய கல்லூரியில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த தேசிய விழாவை ஏற்பாடு செய்துள்ளன. 1985 ஆம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம்.எச். முஹம்மட் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அரச அனுசரணையுடனான தேசிய விழா, இவ்வாண்டு கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி 42ஆவது முறையாக நடாத்தப்படுகின்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ டாக்டர். ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முளப்பர், அமைச்சின் செயலாளர் திரு. பிரின்ஸ் சேனாதீர மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. எம். எஸ். எம். நவாஸ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளன.
இவ்விழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள்:
- பள்ளிவாசல்கள் அபிவிருத்தி: கம்பஹா மாவட்டத்திலுள்ள 12 முஸ்லிம் பள்ளிவாசல்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு நிதியுதவியின் கீழ் ரூ. 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்கீழ் 8 பிரதான பள்ளிவாசல்களுக்கு தலா ரூ. 1 மில்லியனும், 4 பள்ளிவாசல்களுக்கு தலா ரூ. 5 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளன.
- வரலாற்று நூல் வெளியீடு: கம்பஹா மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் தொன்மை, வரலாறு மற்றும் பாரம்பரியத்தை விளக்கும் "கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் தொன்மை - வரலாறு பாரம்பரியம்" எனும் சிறப்பு நூல் வெளியிடப்படவுள்ளது.
- நினைவு முத்திரை வெளியீடு: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் பலகத்துறை ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றின் புகைப்படங்களைத் தாங்கிய சிறப்பு நினைவு முத்திரையை இலங்கை தபால் திணைக்களம் வெளியிடவுள்ளது.
- தேசிய அளவிலான போட்டிகள்: பாடசாலை மாணவர்கள், அரபுக் கல்லூரி மாணவர்களுக்காக பேச்சு, கிராஅத், ஹிப்ழ், சிறுகதை, கட்டுரை, அரபு எழுத்துக்கலை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடாத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற 1300க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல போட்டியாளர்களுக்கு பிரதான விழாவில் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.
- உலமாக்கள் கௌரவிப்பு: கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய அரபுக் கல்லூரி உஸ்தாத்மார்கள், உலமாக்கள் மற்றும் முஅத்தீன்கள் கம்பஹா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் ஒருங்கிணைப்பில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இணைந்த சமூக நலன்புரிச் செயற்பாடுகள்:
பிரதான நிகழ்வுக்கு இணைந்ததாக ஆகஸ்ட் 22 அன்று பலகத்துறை அல்-பலாஹ் கல்லூரியில் இராணுவ மற்றும் பொதுமக்களுக்கான இரத்த தான முகாமும், ஆகஸ்ட் 23 அன்று காமச்சோடை ஜும்ஆ பள்ளிவாசலில் மரநடுகை திட்டமும் நடாத்தப்படவுள்ளன. மேலும், ஆகஸ்ட் 24 அன்று பெரியமுல்லை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் "திறந்த பள்ளிவாசல்" (Open Masjid) திட்டமும், ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் மீலாத் கண்காட்சியும் நடைபெறவுள்ளன.
இவ்விழா நாட்டின் மார்க்க விழுமியங்களைப் பேணவும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வலுப்படுத்தவும் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


