42வது தேசிய மீலாதுன் நபி நிகழ்வுக்கு இணையாக சர்வமத தலைவர்கள் பங்குபற்றுதலுடன் நீர்கொழும்பு, காமச்சோடை ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன

Rihmy Hakeem
By -
0

 42-வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக மரக்கன்று நடும் திட்டம் காமச்சோடை மஸ்ஜிதில்  நடைபெற்றது


23-08-2026



42-வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாம் நாள் திட்டமாக, இந்த மரக்கன்று நடும் திட்டம் இன்று (ஆகஸ்ட் 23) நீர்கொழும்பு, காமச்சோடை பிரதான ஜும்மா மஸ்ஜித் வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. நேற்று (ஆகஸ்ட் 22) போருதொட்ட பிரதான ஜும்மா தொழுகை இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளைத் தொடர்ந்து, வெற்றிகரமான இரத்த தான முகாமோடு ஆரம்பமான இந்த இணைந்த கொண்டாட்டத் தொடரின் இரண்டாம் கட்டமாக இது செயல்படுத்தப்பட்டது.


சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மௌலவிகள், கத்தோலிக்க துறவிகள் மற்றும் குருக்கள் உள்ளிட்ட பல மதத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, நீர்கொழும்பு மாநகர முதல்வர் துலிப் சாமர, பிரதி மாநகர முதல்வர் முகமது பசீர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அப்ரூஸ் அஹமட் உள்ளிட்ட அதிகாரிகள், பிரதேச அரசியல்வாதிகள், காமச்சோடை பள்ளிவாசல் நிர்வாக சபை, பிரதேசவாசிகள் மற்றும் அனைத்து மத சகோதரர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.


புனித அல்குர்ஆன் பாராயணத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் பிரதி மாநகர முதல்வர் முகமது பசீர் ஆகியோர் உரையாற்றியதுடன், பரூத் மௌலவி அவர்களினால் விசேட மத சொற்பொழிவொன்றும் நிகழ்த்தப்பட்டது.


அங்கு உரையாற்றிய மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள் தெரிவித்ததாவது, “ இஸ்லாமிய மார்க்கத்தின்படி ஒரு மரக்கன்றை நடுவது என்பது பெரும் புண்ணியத்தைத் தேடித்தரும் 'ஸதகா' (தர்மம்) ஆகும். ஒரு மரத்தை நடுவது மனிதர்களுக்கு மட்டுமல்ல, சூழலில் வாழும் ஏதுமற்ற விலங்குகளுக்கும் பெரும் நிவாரணத்தையும் நிழலையும் வழங்கும் ஒரு செயலாகும். எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக நீண்டகால நோக்கில் சிந்தித்து, இவ்வாறான சூழல் நட்புத் திட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக காமச்சோடை பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு எனது விஷேட பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."


இந்நிகழ்வின் இறுதி அங்கமாக, எதிர்கால சந்ததிக்காக அடையாள ரீதியாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு, வருகை தந்திருந்த அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் அழைப்பாளர்கள் அனைவரினதும் பங்கேற்புடன் நடைபெற்றது.


முஷாரிப் மொஹிதீன்

ஊடகச் செயலாளர்,

சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர்.








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)