2026 ரியாத் ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிகள் : இலங்கை சார்பாக களமிறங்குகிறார் ஃபஹத் நவாஸ்!
கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்டவை சேர்ந்த ஃபஹத் நவாஸ், சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ள '6 வது ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிகளுக்கு' (Asian Indoor and Martial Arts Games) இலங்கை சார்பாகப் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.
இதற்காக நடைபெற்ற தெரிவுப் போட்டிகளில், வென்குவிஷ் முஆய் தாய் (Vanquish Muay Thai) இன் அமான் மற்றும் ஷ்யாம் முஆய் தாய் (Shyam Muay Thai) இன் ஆஷிக் நஸீர் ஆகியோரை வீழ்த்தியே கஹட்டோவிட்ட UMC கழகத்தின் ஃபஹத் நவாஸ் இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
மினுவாங்கொடையை சேர்ந்த ஆஷிக் நஸீர் தாய்லாந்தில் இடம்பெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பதுடன், ஃபஹத் நவாஸ், அவரையும் வீழ்த்தியே ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளார்.
17 வயதான ஃபஹத் நவாஸின் இந்த மகத்தான வெற்றிக்கு, அவரது கடின உழைப்பு, சுயகட்டுப்பாடு மற்றும் விளையாட்டு மீதான அர்ப்பணிப்பு, பயிற்சியாளர் முஆத் இப்திகார் அவர்களின் சிறந்த வழிகாட்டல், அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான பயிற்சிகள் மூலம் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.
ஆசிய உள்ளக விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கப் பயணிக்கும் வீரர் ஃபஹத் நவாஸ் மற்றும் பயிற்சியாளர் முஆத் இப்திகார் ஆகியோருக்கு யூ.எம்.சி நிர்வாகம், விளையாட்டு ரசிகர்கள், ஊர் மக்கள் உட்பட பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

