ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் - அ.இ.ஜ.உலமா ஊடகப் பிரிவு சந்திப்பு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகப் பிரிவினருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று 2026 ஒக்டோபர் 15அன்று உலமா சபை தலைமையகத்தில் நடைபெற்றது.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் ஜம்இய்யாவின் ஊடக செயற்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, ஆலிம்களுக்கான ஊடகப் பயிற்சிக் கருத்தரங்குகளை நடத்தல், சமூக வலைத்தளங்களை முறையாக பயன்படுத்துவது குறித்த வழிகாட்டல் கோவை தயாரித்தல், பிற சமூக ஊடகவியலாளர்களோடு நல்லுறவை பேணுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில முக்கிய தீர்மானங்களும் எட்டப்பட்டன.
இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பில் அதன் தலைவர் எம்.பீ.எம். பைரூஸ், செயலாளர் ஷம்ஸ் பாஹிம் மற்றும் உப தலைவர் ஷிஹார் அனீஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில், ஊடகப் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், பிரிவின் செயலாளர் எம்.எஸ்.எம். தாஸிம், பிரதம நிறைவேற்று அதிகாரி வை.எல்.எம். நவவீ, பொது முகாமையலாளர் எஸ். ஜவாஹிர் சாலி ஆகியோருடன் ஊடகப் பிரிவின் ஆளணியினரும் கலந்துகொண்டனர்.

