மண்சரிவு காரணமாக போக்குவரத்துக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட அத்தனகல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட கஹட்டோவிட்ட வட்டாரம், குரவலான கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சார்லங்கா பள்ளிவாசல் பிரதான நுழைவாயில் பாதை தற்போது வெற்றிகரமாகச் சீரமைக்கப்பட்டுள்ளது.
இப்பாதை மண்சரிவு காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்து, பொதுமக்களின் நடமாட்டத்திற்கும் வாகனப் போக்குவரத்திற்கும் மிகவும் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்டது. இதனைக் கருத்திற்கொண்டு, குறித்த பாதையைப் பாதுகாத்து மக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் அதனை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் இன்ஷாபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், வட்டார சபைத் தலைவர் ஜவாதின் மேற்பார்வையின் கீழ் ரூ. 500,000 செலவில் பாதையைப் பாதுகாக்கும் தடுப்பணை நிர்மாணிக்கப்பட்டு, புனரமைப்புப் பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இப்பணிக்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும், இதுபோன்ற மக்களுக்கான சேவைகள் தொடரும் என்றும் கஹட்டோவிட்ட வட்டார சபைத் தலைவர் ஜவாத் தெரிவித்தார்.

