நாளை (26) நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
குறிப்பாக, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.





