கொழும்பு காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

( மினுவாங்கொடை நிருபர் )

   இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகைகளால், கொழும்பு - காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
   சனிக்கிழமை (26), ஞாயிற்றுக்கிழமை (27) நாட்களில் இந்த ஒத்திகை நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில்,  எதிர்வரும் 31 ஆம் திகதியன்றும் மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3 ஆம் திகதி வரையிலும் குறித்த ஒத்திகைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக,  போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதிப்  பாதுகாப்பு தொடர்பிலான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண  தெரிவித்துள்ளார். 
   காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை,  காலி முகத்திடலின் ஒரு பகுதி மூடப்படுவதுடன், கொள்ளுப்பிட்டி முச்சந்தி முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையிலான வீதியின் ஒரு பகுதியும்,  லோட்டஸ் வீதியின் செரமிக் சந்தியும், குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளது.
   இந்தக்  காலப்பகுதியில், காலி வீதியூடாக புறக்கோட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள்,  லிபர்ட்டி சுற்று வட்டம், பித்தளைச் சந்தி, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, அக்பர் வீதி, மலே வீதி, சிற்றம்பலம் கார்டனர் வீதி ஊடாக,  கொழும்பு புறக்கோட்டையைச் சென்றடைய முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
   அத்துடன்,  கொழும்பு, புறக்கோட்டையிலிருந்து காலி வீதிக்குச்  செல்லும் வாகனங்கள்,  மேற்குறிப்பிட்ட சிற்றம்பலம் கார்டனர் வீதி,ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஊடாக காலி வீதியைச்  சென்றடைய முடியும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.