(NFGG ஊடகப் பிரிவு)

மாகாண சபைத் தேர்தலை இனியும் இழுத்தடிக்காமல், உடனடியாக நடத்த வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (ந.தே.மு) வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொறுப்பானவர்கள் எவரும்- குறிப்பாக  நாடாளுமன்றத்தினரும் ஜனாதிபதியும்- இதிலிருந்து தப்பிக்க முடியாது எனவும், மாகாண சபைத் தேர்தலைத் துரிதமாக நடத்துவதற்கு அவசியமான சட்டத் திருத்தங்களை உடனடியாகச் செய்யுமாறும் அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

நேற்று (12.01.2019) சனிக்கிழமை, ராஜகிரியவில் அமைந்துள்ள ந.தே.மு தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற, கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தின்போதே இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசேட சந்திப்பில் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திருத்தப்பட்ட புதிய தேர்தல் முறையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதால், பழைய விகிதாசார முறையில் தேர்தலை நடத்துமாறும் ந.தே.மு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வருடம் ஜூன் 30 இல், காத்தான்குடியில் இடம்பெற்ற கட்சியின் பேராளர் அவை ஒன்றுகூடலில், மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததையும் இந்த சந்தர்ப்பத்தில் ந.தே.மு. நினைவூட்டியுள்ளது.

மேலும், தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் இழுத்தடிப்பது ஜனநாயக விரோத செயல் என்பதை, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிய அனைவரும் மறந்து விடக் கூடாது எனவும் ந.தே.மு சுட்டிக் காட்டியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.