கற்பிட்டி பள்ளிவாசல்துறை ரெட்பானா வீதியில் நேற்று (04) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கற்பிட்டி கண்டல்குழி, அஷரப் நகரைச் சேர்ந்த முஹம்மது அகீல் (வயது 19) எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என கற்பிட்டி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஈ.ஏ.டபிள்யூ. எஸ். எதிரிசிங்க தெரிவித்தார். 

கொழும்பில் வேலை செய்யும் குறித்த இளைஞர், விடுமுறையில் வீட்டுக்கு வந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார். 

நேற்று தேவை நிமித்தம் குறித்த இளைஞன் பள்ளிவாசல்துறையிலிருந்து ரெட்பானா பிரதேத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியை கடக்க முற்பட்ட கழுதை ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக ௯றப்படுகிறது. 

இவ்விபத்தில் சிறு காயங்களுடன் அந்த இளைஞன் அங்கிருந்து மீண்டும் வீட்டுக்குச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு வீட்டுக்குச் சென்ற குறித்த இளைஞனுக்கு கடும் வயிற்று வலியுடன், அதிகமாக வயிற்றோட்டமும் போயுள்ளது. இதனையடுத்து, உறவினர்கள் அந்த இளைஞனை உடனடியாக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞன் அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . 

இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகள் என்பனவும் இடம்பெற்றன. 

கற்பிட்டி, புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணைகளை நடத்தினார். 

விபத்து இடம்பெற்ற போது உடல் முழுவதிலும் இரத்தம் பரவியமையால் ஏற்பட்ட திடீர் மரணம் என தீர்ப்பு வழங்கி சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். 

இதேவேளை, பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது உயிரிழந்த குறித்த இளைஞனின் வயிற்றில் சுமார் இரண்டு கிலோ கிராம் நிறையுள்ள புற்றுநோய்க் கட்டி ஒன்று உடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கற்பிட்டி, புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(AdaDerana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.