கலாநிதி றவூப் ஸெய்ன்

ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பர். 20 ஆம் நூற்றாண்டில் தகவல் தொடர்பாடலில் ஏற்பட்ட வெடிப்பும் புரட்சிகரமான மாற்றங்களும் தேசங்களையும் சமூகங்களையும் ஒன்றி ணைப்பதில் பெரும் பங்கு வகித்தன. 21 ஆம் நூற்றாண்டில் டிஜிட்டல் யுகம் கோப்ரேட் கம்பனிகளால் கட்டுப்படுத் தப்படுகின்றது. இதனால் ஜிட்டல் சர்வதி காரம் (Digital Dictatorship) தோன்றியது. ஊடகத்துறை பெரும் முதலீட்டுக் கம்பனிகளாக மாறின. அதற்கேயுரிய அரசியலுடனும் பொருளாதாரத்துடனும் அவை செயல்பட ஆரம்பித்தன.

முதலீடு செய்யும் முதலாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப உலகத்தைப் பற்றிய விம்பம் கட்டமைக்கப்படுகின்றது. விடியும் ஒவ்வொரு நாளிலும் உலக மக்களின் பொது அபிப்பிராயம் எப்படி அமைய வேண்டும் என்பதை ஊடக ஜாம்பவான்களே தீர்மானிக்கின்றனர். ஊடகம் குறித்து மக்கள் கொண்டுள்ள உளவியலை இந்தப் பெரு முதலீட்டு நிறுவனங்கள் துஷ்பிரயோகம் செய்கின் றன. உலகத்தை தாம் காட்டும் கோணத் திலிருந்தே எல்லோரும் பார்க்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அவை திணிக்கின்றன. ஆட்சிக் கட்டிலை அசைத்துப் பார்க்கும் ஆற்றலுடன் அவை செயல்படுகின்றன. 

இதனால்தான் இன்று உண்மைக்குப் பிந்திய அரசியல் என்ற சொற்பிரயோ கத்தை அரசியல் ஆய்வாளர்கள் வெகுவாகப் பயன்படுத்துகின்றனர். 2016 அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது டொனால்ட் ட்ரம்ப் அவரை எதிர்த்து நின்ற ஹிலாரி கிளின்டனுக்கு நியூயோர்கில் சிறுவர் துஷ்பிரயோக நிலைய மொன்று உள்ளதாக உணர்ச்சிப் பெருக்கோடு தெரிவித்த வாக்கியங்கள் அமெரிக்க யூத ஊடகங்களால் அடிக்கொரு முறை ஒளிபரப்பப்பட்டது.

இந்தச் செய்தியின் தாக்கம் ஒரு சில வாரங்களிலேயே வெளிப்பட்டது. அமெரிக்காவின் 50 மாநிலங்களுள் ஒன்றான வடகரோலினாவிலிருந்து ஒரு துப்பாக்கி மனிதர் நியூயோர்கிற்கு விரைந்து வருகிறார். அங்கு ஹிலாரியால் நடத்தப்படும் சிறுவர் துஷ்பிரயோக நிலையம் அமைந்துள்ளதாகக் கூறப்பட்ட இடத்தை நோக்கி சரமாரியாக சுட்டுத் தீர்க்கிறார். அதில் பலர் படுகாயமடைந்து ஒரு சிலர் உயிரிழக்கின்றனர்.

பொலிஸார் துப்பாக்கி நபரைக் கைதுசெய்து விசாரித்தபோது இந்தச் செய்தியே தன்னை இவ்வாறு செய்ய வைத்தது என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்கிறார். உலக அரசியலில் கோப்ரேட் கம்பனிகளின் திருகு தாளங்களை மறைப்பதில், வணிக விளம்பரங்களில் ஊடகங்கள் வகித்து வரும் பாத்திரம் சொல்லில் மாளாதவை. இதனால் தான் ஊடகங்களின் செல்நெறிகள் குறித்து விமர்சனபூர்வமான ஆய்வுகளை பலர் மேற்கொண்டுள்ளனர். அவர்களுள் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர் நோம் சொம்ஸ்கி மற்றும் எட்வேர்ட் ஹேமன் ஆகியோர் வெளியிட்ட Manufacturing Concern, The Political Economy of Mass Media  எனும் நூல் ஊடகங்களின் அடுத்த பக்கம் குறித்து ஆழமாக அலசுகின்றது.

1970 களில் இலங்கை அரசாங்கம் ITN  தொலைக்காட்சியை ஆரம்பித்தது. பின்வந்த தசாப்தங்களில் தனியார் வானொலி அலைவரிசைகள் படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன. 1990 களில் சில தொலைக் காட்சி அலைவரிசைகளும் களத்திற்கு வந்தன. அரச ஊடகங்கள் பொதுவாக மாறி மாறி வரும் கட்சி அரசாங்கங்களின் கொள்கைகளையும் அரசியல் செயற்பாடுகளையும் பிரச்சாரம் செய்யவும் நியாயம் காணவும் கையாளப்பட்டு வந்துள்ளன. இற்றை வரையும் அரச ஊடகங்களைப் பொறுத்தவரையில் இதுவே உண்மை யாகும்.

அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து தப்பித் தவறியேனும் விமர்சிக்கும் எவரும் அரச ஊடகமொன்றில் செயல்பட முடியாது என்பதுதான் எழுத்தில் இல்லாத சட்டம். எனவே, அரசாங்கங்களின் உண்மையான போக்குகள் குறித்து அறிய விரும்பும் மக்கள் தனியார் ஊடகங்கள் பக்கம் திரும்புவது இயல்பானது.

தொடக்கத்தில் தனியார்த் துறை பத்திரிகைகள், வானொலிகள், தொலைக் காட்சிகள் பக்கம் மக்கள் கவனம் திரும்பு வதற்கு இதுதான் பிரதான காரணியாக இருந்தது. ஆனால், இன்று தனியார் துறை இலத்திரனியல் ஊடகங்கள் அனைத்தும் போல் வணிக அரசியலோடு தமது தனிப்பட்ட நிறுவன அரசியலைக் கையாண்டு வருவது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளிக்கின்றது. தமக்குத் தேவையான வகையில் செய்திகளை முன்னிலைப்படுத்தும் இவ்வூடகங்கள் சமநிலையற்று செயல்படுகின்றன என்பதே உண்மையாகும்.

தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள் என்ற கோஷத்துடன் வெளியிடும் செய்திகள் ஏற்கனவே தீர்மானித்ததைத் தான் செய்தியாக வெளியிடுகிறார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொள்வதிலிருந்தும் மக்களைத் தடுக்கின்றது.

சர்வதிகார ஆட்சி நடைபெறும்போது வாய் பொத்தி அடக்கி வாசிக்கும் இந்தத் தனியார் ஊடகங்கள் ஓரளவு நெகிழ்ச்சியான அரசியல் சூழலில் குறிப்பிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளை தாறு மாறாக விமர்சிப்பதோடு, போதாக் குறைக்கு புள்ளிவிபரங்களையும் அள்ளி வீசுகின்றன. மகாராஜா ஊடக வலையமைப்பிலுள்ள தொலைக்காட்சி அலை வரிசைகள் இதற்குச் சிறந்த உதாரணங்களாக உள்ளன.

51 நாள் மைத்திரி ஆடிய அரசியல் பித்தலாட்டத்தில் இடையில் ஒழிந்திருந்த மஹிந்த, பிரதமர் ஆனது முதல் ரணில் மீண்டும் பதவி பெறும் வரையிலான நிகழ்வுகளை இலங்கையின் அனைத்துத் தனியார் ஊடகங்களும் அறிக்கைப்படுத்திய விதம் குறைந்தபட்ச ஜனநாயகப் பெறுமானமும் அற்றவை. தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காகவும் நிறுவன நலன்களுக்காகவுமே அவை செயல்பட்டன.

நாட்டின் கொதிப்பான அரசியல் சூழலில், மக்களுக்கு உண்மையை முன்வைப்பது ஊடகங்களின் பொறுப்பாகும். அதற்கு நடுநிலைத் தன்மையும் வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் அவசியம். ஆனால், இத்தகைய குறைந்தபட்ச ஊடக தர்மங்களை மதிக்கும் வகையில் தனியார் தொலைக்காட்சிகளின் செய்தி அறிக்கைகளோ செய்தியோ ஒளிபரப்பப்படவில்லை.

உதாரணமாக திடீரென்று பிரதமராக்கப்பட்ட மஹிந்தவும் அவரது பக்தர் களும் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஒவ்வொரு அரசியல்வாதியும் தெரிவித்த கருத்துக்கள் விரிவாக ஒளிபரப்பப்பட்டன. மைத்ரியின் முடிவுக்கான நியாயங்களை அவர்கள் அள்ளிக் கொட்டினர். ஆனால், அவை அனைத்தும் அரசியல் அமைப்புக்கு மாற்றமானவை என்ற உண்மையை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்துவதற்கு முன்னதாகவே சக்தி, சிரச, தெரண, சுவர்ணவாஹினி ஆகிய ஊடகவியலாளர்கள் ஒன்றும் அறியாதது அல்ல.

இதேவேளை, சட்டபூர்வமான ஒரு பிரதமரும் அவரது அமைச்சரவையும் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பதில் அநேகமானவற்றை அவர்களின் குரல் களை மௌனமாக்கியே இந்த ஊடகங்கள் காட்சிப்படுத்தின. சக்தி மற்றும் சிரச ஊடகங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்கள். தமது அரசியல் தேவைக்கேற்ப பொதுமக்கள் அபிப்பிராயத்தைக் கட்டமைக்கும் முனைப்பில் இத்தகைய ஊடகங்கள் உணர்ச்சிமயமான அணுகுமுறை (Sensational Media) ஒன்றையே கையாண்டன.

ரணில் மீதான தனிப்பட்ட வெறுப் பினை உமிழும் அவசரத்தில் ஒட்டு மொத்த ஊடக தர்மங்களையே அவை கேள்விக்குள்ளாக்கின. இலங்கையில் அன்றாடம் நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகளை செய்தியாக்கும் தனியார் ஊடகங்கள், ஒரே நிகழ்வையே தமது தலைப்புச் செய்தியாக்குவதில்லை. ஒவ்வொன்றினது தலைப்புச் செய்தியும் அல்லது பிரதான செய்தியும் ஏனைய வற்றிலிருந்து வேறுபடுகின்றது. ‘செய்தியை நாம் பொறுக்குகின்றோம்’ என்பது இங்குதான் பிழைத்துப் போகின்றது.

மாறாக, ஊடகங்கள் செய்தியைத் தெரிவுசெய்கின்றன. இந்த உண்மை தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு மட்டுமன்றி, வானொலிகள் மற்றும் நாளேடுகளுக்கும் பொருந்தும். இதனூடாக நாம் புரிந்துகொள்வதென்ன? ஊடகங்கள் தமது அரசியல் நோக்கங்களுக்காகவும் வணிக நோக்கங்களுக்காக வுமே செயல்படுகின்றன.

இலங்கையின் நல்லாட்சி, ஊழல் மோசடியற்ற ஆட்சி இயந்திரம், சுதந்திரமான கட்சி நடவடிக்கைகள், போதை யற்ற தேசம், ஒழுக்கமான சமூகம் போன்ற பொதுக் குறிக்கோள்களை வளர்த்தெடுக்கும் வகையில் ஊடகங்கள் செயலாற்ற வேண்டும். இன்னொரு புறம் இலங்கை ஒரு பன்மைப் பாங்கான நாடு. கலாசாரம், மதம், இனம், மொழி என பன்மைத்துவத்தின் கூறுகள் பல. இனங்களுக்கிடையில் அமைதியையும் சமாதானத்தையும் வளர்ப்பதில்தான் ஊடகங்கள் குறியாய் இருக்க வேண்டும். அதுவே, ஊடகங்களின் பிரதான அக்கறைக்குரிய விடயம்.

துரதிஷ்டவசமாக தமிழ் பேசும் மக்களுக்கான ஊடகம் என்ற ஒரு பொதுத் தளம் இல்லாம் போயிருப்பது கவலைக்குரியது. தமிழ் முஸ்லிம் மக்களின் அடிப்படைப் பிரச்சினையை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டுவருவது, தீர்வு காண்பது போன்ற பொது இலக்குகளுக்காக ஊடகங்கள் செயலாற்ற வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும், தமிழ் ஊடகங்கள் அனைத்தும் போல் தமிழர்களின் ஊடகங்களாக மாத்திரமே செயல்படுகின்றன. அதற்கு மேல் சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராகவும் அவை திருப்பப்படுகின்றன. திருகோணமலை சண்முகா வித்தியாலயம், ஏறாவூரில் நடந்த அசம்பாவிதம், கிழக்கு முதலமைச்சர் விவகாரம், இவற்றை சமீப நாட்களில் தமிழ் ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பது கவலைக்கிடமானது. தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை செய்தியாக்கும்போது ஒரு பக்கம் சாய்வதே இவற்றின் வழக்கமாகும்.

நீண்டகாலமாக சக்தி தொலைக்காட்சியில் ரங்கா நடத்தி வரும் மின்னல் தமிழ்- முஸ்லிம் நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக புதிய இனவாதச் சூறாவளியைத்தான் உருவாக்க முனைந்தது. முஸ்லிம்களின் மட்டந் தட்டலையும் அவர்களை வியாபாரிகளாகக் காட்டுவதுமே ரங்காவின் உள்நோக்கம். நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதனைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் இதுவே உண்மையாகும்.

சக்தி தொலைக்காட்சி ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் ஊடகம் என்பதை விட தமிழர்களின் தனி ஊடகம் என்பதையே அவர்கள் நிறுவி வருகின்றது. மகாராஜா ஊடகக் கம்பனியின் தனிப்பட்ட ஒரு அரசியல் அஜன்டாவுடன் சக்தி, சிரச தொலைக்காட்சிகள் நகர்கின்றன. இதில் பணியாற்றும் முஸ்லிம் அறிவிப்பாளர்கள் மிகுந்த அனுதாபத்திற்குரியவர்கள். முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி, அவர்களை சீண்டிப் பார்க்கும் தோரணையிலேயே இத்தகைய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

இதே பாணியில்தான் சிரசவும் இயங்குகின்றது. இதனால்தான் அவ்வப் போது சிங்கள மக்களாலும் நடுநிலை அரசியல் செயற்பாட்டாளர்களாலும் சிரச ஊடகவியலாளர்கள் களத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள். 51 நாள் அரசியல் களேபரத்தில் இது தெளிவாகத் தெரிந்தது.

சிரச தொலைக்காட்சி ஒரு காலத்தில் போர் நடந்துகொண்டிருந்தபோது, கொட்டி சிரச என்று முத்திரை குத்தப்பட் டது. சந்திரிக்கா மற்றும் மஹிந்தவின் ஆட்சியில் கொட்டி சிரச போஸ்டர்கள் கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் பெருமளவு ஒட்டப்பட்டிருந்தன. அரச ஆதரவாளர்கள் இத்தகைய போஸ்டர்களை ஒட்டி சிரச மீதான மக்கள் எதிர்ப்பைத் திரட்டினர். சிரச ரணிலுக்கு ஆதரவளித்தமையாலேயே சிரச இந்தப் பெயரை வாங்கியது. ஏனெனில், அப்போது ரணில் தமிழ்ப் புலிகள் சார்பாக இயங்குகிறார் என்று ஆளும் மஹிந்த அரசாங்கத்தினால் கருதப்பட்டவர். அன்று ரணிலை ஆதரித்த சிரச இன்று அதே ரணிலுக்கு எதிராக இயங்குகின்றது.

ஊடகவியலாளர்களும் கட்சிக்காரர் களைப் போல் நிலையான கொள்கையோ கோட்பாடுகளோ இல்லாதவர்கள் என்பதை இதன் மூலம் உணர்த்துகின்றனர். சிரச ஊடக வலையமைப்பு என்று பெரிதாகப் பிதற்றிக் கொள்ளும் கோப்ரேட் நிறுவனம், தம்மைப் பற்றி பெரிய விம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைப்பதற்கு அவ்வப்போது நிகழும் இயற்கை அனர்த்தங்களை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றது. தமது ஊடகப் பிரச்சாரத்தால் மக்களிடமிருந்து திரட்டும் நிவாரணப் பொருட்களை தமது ஊடக விளம்பரப் பதாகைகளுடன் பகிர்ந்தளித்து தமக்கான மக்கள் அங்கீகாரத்தைத் தக்கவைக்க அவை முயல்கின்றன. அதில் கூட முஸ்லிம்கள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. ஏதோ தமது சொந்தப் பணத்தினால் மக்கள் நலப் பணி ஆற்றுவது போல் இவை செயல்படுவது கவலைக்குரியது.

ரமழான் காலத்தில் இப்தார் மற்றும் விசேட சஹர் நிகழ்ச்சி என்ற பெயரில் முஸ்லிம் சார்பு ஊடகம்போல் நடிக்கும் இத்தகைய நிறுவனங்கள் தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டின்போது தமிழ்த் தரப்பை ஊதிப் பெருப்பிக்கும் உளவியலை அரங்கேற்றுகின்றது.

மொத்தமாக இலங்கையின் தனியார் ஊடகங்கள் அரசியல் யதார்த்தங்களைப் பேசுவதற்கப்பால், தமது தனிப்பட்ட நிறுவன நலன்களுக்கே குடைபிடிக்கின்றன. அவற்றின் செய்தி அறிக்கைகளிலிருந்து நாட்டின் உண்மையான அரசியல் காலநிலையைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை.

ஒரு ஜனநாயக நாட்டில் அதுவும் மிகச் சிறியதொரு நாட்டில் சமூகங்களை இணைப்பதிலும் நல்லாட்சியை உருவாக்குவதிலும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனக் கருதப்படும் ஊடகங்கள் மிகப் பெரிய பங்களிப் பினை ஆற்ற முடியும். ஆனால், தற் போதைய சூழ்நிலையில் தனியார் ஊடகங்களுக்கு இந்த அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், ஒரு மாற்று ஊடக கலாசாரம் குறித்து விவாதிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.