2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆற்றிய விசேட உரை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் ஒரு வாரத்தின் பின்னர் பேராயர் அவர்கள் நடாத்திய ஞாயிறு தெய்வ ஆராதனையிலும், அதே போன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய தெய்வ ஆராதனைகளிலும் நான் கலந்து கொண்டேன். இந்த வாரத்தினுள் குறித்த தாக்குதல் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதுடன் தாக்குதலுடன் தொடர்பான பலர் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிஹாத் எனும் பெயரில் பயங்கரவாதிகள் மேற்கொண்டு வருகின்ற இத்தாக்குதல்கள் தொடர்பில், சந்தேக நபர்களை உடனடியாக இனங்கண்டு, அவ்வனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டி உள்ளது. நாங்கள் அதற்காக உரிய தரப்பினருக்கு கட்டளையிட்டு இருக்கின்றோம். முழு அரசாங்கமும் அந்த கட்டளையினை விடுத்திருக்கின்றது. ஜனாதிபதி, நான் மற்றும் அமைச்சரவை இந்த கட்டளைகளை உரிய தரப்பினர்களுக்கு வழங்கி உள்ளது. மற்றுமொரு 30 வருட யுத்தம் ஏற்படுவதனை நாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிரான தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் போதிலேயே ஆரம்பிக்கப்பட்டன. குறித்த சம்பவம் நிகழ்ந்து ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே தெமட்டகொட பகுதியில் தங்கியிருந்த சந்தேக நபர்கள் சிலரை கைது செய்வதற்கு முடிந்தது. அதன் போது காவல் துறையினை சேர்ந்த மூன்று அதிகாரிகள் தமது உயிரையும் தியாகம் செய்தனர். அதற்கு மேலாக பாதுகாப்பு தரப்பினை சேர்ந்த ஒரு உயிர் கூட இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது இழக்கப்பட வில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உள்ள சில வீடுகளில் இருந்து பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றுவதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு முடிந்தது. இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள, அப்பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் பெற்றுக் கொடுத்த உளவுத் தகவல்களே பெரும் உதவியாக அமைந்தது. குண்டுகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற இரசாயன பதார்த்தங்கள் உட்பட மேலும் பல உபகரணங்கள் அந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்டது. ஒரு வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களது குடும்பம் சகிதம் தற்கொலை செய்து கொண்டனர். அந்த சுற்றிவளைப்பின் போது 15 பேர் உயிரிழந்தமை தொடர்பில் நாம் அறிவோம். மற்றுமொரு தரப்பினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களை இனங்காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

வனாத்தவில்லு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களினுள் டி56 ரக துப்பாக்கிகளும் காணப்படுகின்றன. கம்பளையிலும் மிக முக்கியமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பல சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்காக தொடர்ந்தும் பங்களிப்பு செய்து வருகின்ற தரப்பினர்களுக்கு நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள வேண்டியுள்ளது. 

எமக்கு ஏழு புலனாய்வுப் பிரிவுகள் உள்ளன. அவர்கள் கடந்த மூன்று, நான்கு வருடங்களினுள் வெளிநாட்டு புலனாய்வு சேவைகளுடன் மிகக் கிட்டிய தொடர்புகளை ஏற்படுத்தி தமது பணிகளை மேற்கொண்டு செல்கின்றனர். தற்போது அதை விடவும் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இந்த சம்பவம் தொடர்பில் பரிசீலனைகள் மேற்கொண்டு கடந்த வாரத்தில் பல சந்தேக நபர்களை இனங்கண்டு கொண்டனர். நாங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினை பலப்படுத்தி உள்ளோம். மேலும், காவல் துறையினர், முப்படையினர் துரிதமாக செயற்பட்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்தனர். இவ்வனைத்து தரப்பினருக்கும் நாட்டு மக்களின் நன்றிகள் உரித்தாக வேண்டும். 

இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருப்பது முறையாக கட்டமைக்கப்பட்ட ஒரு சிறு குழுவினர் என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும். அவர்கள் சாதாரண முஸ்லிம் இனத்தவர்கள் இல்லை. வழிக்கெட்டு சென்ற தீவிரவாத கருத்துக்கள் கொண்ட சிலர் என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது. மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவரை கொலை செய்ததன் ஊடாக அவர்கள் இந்த குற்றங்களை செய்வதற்கு ஆரம்பித்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ம் திகதி அவர்கள் இந்த தாக்குதல்களை மேற்கொண்டனர். அதன் பின்னர் மாவனல்லை புத்தர் சிலையினை உடைத்து, அமைச்சர் கபீர் ஹாஷம் அவர்களின் பிரத்தியேக செயலாளரை சுட்டனர். வனாத்தவில்லு அவர்களது பயிற்சி முகாமாக இருந்தது. இந்த அழிவுகளை அவர்கள் அதன் பின்னரே மேற்கொண்டனர். இந்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நாம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இந்நாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வீசா இன்றி பணிபுரிகின்ற ஆசிரியர்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரையும் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் முஸ்லிம் சமூகத்துடன் உரிய அமைச்சுக்கள் கலந்துரையாடி, பல்வேறு சட்டங்கள் மற்றும் எடுக்க நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானித்து, அரசாங்கத்திடம் முன்வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

முஸ்லிம் மக்கள் வழங்குகின்ற ஒத்துழைப்புகளை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்க வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கின்றேன். நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் எனும் ரீதியில் ஜிஹாத் பயங்கரவாதிகளை இல்லாதொழிப்பதற்கு ஒன்றாக செயற்படுவோம். உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் இணைந்து இந்நாட்டு எல்லையினுள் பிரவேசித்தல், வெளிச் செல்லல், பொருட்கள் தொடர்பில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள சட்ட திட்டங்களின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றனர். அதனுடன் தொடர்பான அனைத்து திணைக்களங்களும் அவற்றுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இன்டர்போல் நிறுவனத்துடன் இணைந்து தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வேலைத்திட்டத்தினையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். தற்போது அதன் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்று உள்ளோம். அடுத்த முன்னேற்ற வேலைத்திட்டங்களை துரித கதியில் நிறைவேற்றுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

உரிய பயங்கரவாத அமைப்பினை தடை செய்வதற்காக நாங்கள் தற்போது அவசர கால சட்டத்தின் ஊடாக செயற்பட்டு வருகின்றோம். இலங்கைக்கு வெளியில் இடம்பெறும் பயங்கரவாத செயல்களுக்கு, வேறு நாட்டு பயங்கரவாத குழுக்களில் தொடர்புபடுகின்ற இலங்கையர்கள் தொடர்பில் செயற்படுவது சம்பந்தமான சட்டங்கள் எமது சட்டத்தில் இல்லை. குற்றவியல் சட்டங்கள் எமது நாட்டு எல்லையினுள் மேற்கொள்ளப்படுகின்ற குற்றங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 1979ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டம் இந்த நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தென் இந்திய முகாம்களில் உள்ள நபர்களும் பின்னர் அந்த சட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதன் இரண்டாம், மூன்றாம் உறுப்புரைகளில் அது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

1974ம் ஆண்டில் இங்கிலாந்து சட்டத்தின் படி நாம் இங்கு செயற்பட்டிருக்கின்றோம். அன்று அந்த சட்டமும் வடக்கு அயர்லாந்து பயங்கரவாதிகளுக்கு மாத்திரமே செயற்படுத்தப்பட்டது.

இந்த இடைவெளியினை நிரப்புவதற்காக வேண்டி நாங்கள் மீள் பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்தில் நாம் பல அம்சங்களை உள்ளடக்கி உள்ளோம். அந்த சட்ட மூலத்தின் மூன்றாவது உறுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. 'நபர் ஒருவர், ஏதேனுமொரு இனக்குழுவினரை அச்சுறுத்துவாரெனின், இலங்கையில் அல்லது வெளிநாட்டு அரசாங்கத்திற்கு சட்ட விரோதமான முறையில் தாக்கம் செலுத்துவாரெனின், அந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிறுத்துவாரெனின், ஏதேனுமொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பாரெனின் அவர் இலங்கையிலும் குற்றம் புரிந்தவர் ஆவார்' என அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. 

புதிய சட்டத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கு முடியாமல் போனமையே, இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்குரிய சந்தேகநபர்களை, இந்த குற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னர், அவர்களுக்கு எதிராக சட்டத்தினை நிலைநிறுத்தவதற்கு தடையாக அமைந்தது. இந்த சட்டமூலத்தினை நாம் 2018ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம். தற்போது இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் உரிய குழுவில் சிக்கி இருக்கின்றது. இந்த குழுவில் இருந்து கொண்டு 'தேங்காய் துறுவாமல்' உடனடியாக இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருமாறு இங்கு நான் கேட்டுக் கொள்கின்றேன். அதனை தாமதப்படுத்தியதன் மூலம் எமக்கு இந்த பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போனது. தற்போதாவது நாங்கள் அந்த பணியினை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று நாங்கள் இன்னும் பல சட்டங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இந்த ஜிஹாத் பயங்கரவாதத்தினை உடனடியாக அழித்து விட வேண்டும். இந்த பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமல்ல முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். புத்தர் சிலைகளை உடைக்க ஆரம்பித்தனர். இந்து கோயில்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தினர். 

அவர்கள் தீவிரவாத குழுவினர் என்பதை தெளிவாக கூற வேண்டும். அவர்கள் எவ்வித மதத்தினையும் சார்ந்தவர்கள் அல்லர். அப்படியெனின் இந்த தீவிரவாதத்தினை ஒழித்து, இவ்வாறான கொள்கைகள் பரப்பப்படுவதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். தற்போது அவர்களில் பெருல்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். தற்போது எமக்கு வழமையான நிலைக்கு திரும்பக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. முப்படையினரும், காவல் துறையினரும் பொதுமக்களுக்கு அது தொடர்பில் அறிவிப்பார்கள். ஆகவே, நாம் சாதாரண வாழ்க்கையினை இயல்பான நிலைக்கு மாற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்குவோம்.            

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.