ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்ட​ணியை அமைப்பதற்கான முயற்சியில், இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின், நடப்பாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எதிர்த்து வாக்களிக்கவேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தி ​வருகின்றது.
இறுதி வாக்கெடுப்பில், எதிர்த்து வாக்களிக்காவிடின், புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையிலிருந்து உடனடியாக, விலகவேண்டுமென, ஒன்றிணைந்த எதிரணி பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால், இவ்விரு கட்சிகளும் இணைந்து, புதிய கூட்டணியை அமைப்பதில், இக்கட்டான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக, அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறும் இறுதி வாக்கெடுப்பின் போது, எதிர்த்து வாக்களிக்காவிடின், பேச்சுவார்த்தையிலிருந்து உடனடியாக, விலகிக்கொள்ள வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம், அந்த உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அரசியல் கூட்டணியொன்றை கட்டியெழுப்புவதற்காக, தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் ஏககாலத்தில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்தால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்விதமான பயனுமில்லையென அந்த இளம் உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
எனினும், இவ்வாறான தருணங்களில், மனமுடைந்து போகாமல், பொறுமையுடன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டுமென, அந்த இளம் உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அரசாங்கத்துக்கு எதிராகச் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, நாடாளுமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் எவ்வாறான வகையிலான விமர்சனங்களை முன்​வைத்தாவது, தேர்த​லொன்றை நடத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்‌ஷ கேட்டுக்​கொண்டார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில்,கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, இளம் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.