மாநாடு என்ற போர்வையில் வெற்றிவிழா கொண்டாடும் பொதுபல சேனாவும், மியன்மாருடன் செய்துகொண்ட ஒப்பந்தமும்

மாநாடு என்ற போர்வையில் வெற்றிவிழா கொண்டாடும் பொதுபல சேனாவும், மியன்மாருடன் செய்துகொண்ட ஒப்பந்தமும். 

முஸ்லிம்கள்மீது தாக்குதல் நடாத்தியபின்பு மாநாடு என்ற போர்வையில் வெற்றிக் கொண்டாட்டம் நடாத்துவது பொதுபலசேனா இயக்கத்தின் நடைமுறையாகும்.

2014 இல் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம்களை தாக்கி பொருளாதாரத்தை அழித்தபின்பு சர்வதேச பயங்கரவாதியை கொழும்புக்கு அழைத்துவந்து வெற்றிவிழா கொண்டாடினார்கள்.

இன்று வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்களை தாக்கி பொருளாதாரத்தை சூறையாடிவிட்டு கண்டியில் வெற்றிவிழா கொண்டாடுகின்றார்கள். 

2018 இல் திகன, கண்டி தாக்குதலுக்கு பின்பு அரசாங்கத்தின் கெடுபிடிகளும், நீதிமன்ற வழக்குகளும் அதிகமாக இருந்ததனால் அவர்களால் கடந்த வருடம் வெற்றிவிழா கொண்டாட முடியவில்லை. 

முஸ்லிம்களுக்கு எதிராக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான பேரினவாத இயக்கங்கள் தோன்றினாலும், முள்ளியவைக்கால் வரைக்கும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதன் பின்பு பொதுபலசேனா இயக்கத்தின் எழுட்சியே மிகவும் ஆபத்தானதாகவும், இந்நாட்டு முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குட் படுத்துவதாகவும் அமைந்துள்ளது. 

மியன்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இனச்சுத்திகரிப்பினை மேற்கொண்ட 969 என்கின்ற பௌத்த தீவிரவாத இயக்கத்துடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பொதுபலசேனா இயக்கத்தினர் ஏற்படுத்திக்கொண்டனர்.

உலகில் எத்தனையோ மிதவாத பௌத்த இயக்கங்கள் இருக்கும்போது ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களை கொன்று குவித்த கொலைகார இயக்கத்துடன் பொதுபலசேனா இயக்கம் நெருங்கிய உறவினை ஏற்படுத்தியதுக்கும், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்குமான தேவை என்ன என்பதுதான் அனைவரது கேள்விகளாகும்.   

2014 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மியன்மாரின் 969 இயக்கத்தின் தலைவர் அசின் விராது தேரோ கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டதுடன், அரச விசேட பிரமுகர்களுக்கு வழங்கப்படுகின்ற “பி.எஸ்.டீ” பாதுகாப்பும் வழங்கப்பட்டது. 

969 இயக்கமானது மியன்மாரில் முஸ்லிம்களை அழித்தொழிக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான பிக்குகளையும், லட்சக்கணக்கான தொண்டர்களையும் கொண்ட பாரிய இயக்கமாகும்.

இதன் தலைவரை ஒரு பயங்கரவாதியாகவே நியூயோக்கிலிருந்து வெளிவருகின்ற ”டைம்ஸ்” சஞ்சிகை முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. 

அத்துடன் அவர் கலந்துகொண்ட நிகழ்வுகள் அரச நிகழ்வுகள் போன்றே காட்சியளித்தது. இறுதியில் நாட்டைவிட்டு செல்லும்போது தனக்கு பாதுகாப்பு வழங்கி உபசரித்ததற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு விசேட நன்றி தெரிவித்திருந்தார். 

மியன்மாரில் பல்லாயிரம் முஸ்லிம்களின் கொலைகளுக்கு உடந்தையான ”அசின் விராது” தேரோவின் வருகைக்கு இலங்கை முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தும் இந்நாட்டு முஸ்லிம்களின் உணர்வுகளை அன்றைய அரசு மதிக்கவில்லை.

களுத்துறை வன்முறைக்கு பின்பு 28.09.2014 இல் 5௦௦௦ பௌத்த பிக்குகள் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஒன்று கூட்டப்பட்ட வெற்றிவிழா கொண்டாடப்பட்டத்தில் சில அல்குரான் வசனங்களை வாசித்து அதனை ஏளனம் செய்தார்கள்.

அத்துடன் பொதுபலசேனா அமைப்புக்கும் 969 இயக்கத்துக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.

அதில் ஆசிய பிராந்தியத்தில் ‘தீவிரவாதத்தை அழித்து அமைதியை நிலைநாட்டுவது’ என்பது அந்த உடன்படிக்கையின் சாராம்சமாகும். இது முஸ்லிம்களுக்கு அச்சத்தினையும், சந்தேகத்தினையும் ஏற்படுத்தி இருந்தது.

இங்கே தீவிரவாதத்தினை அழித்தல் என்பது முஸ்லிம்களை அழிப்பது என்பதாக பொருள்படும். ஏனெனில் முஸ்லிம்களை இவர்கள் தீவிரவாதிகள் என்ரே அழைக்கின்றார்கள்.

இது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் வில்லியம் புஸ்சின் கொள்கையை தழுவியதாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Share:

No comments:

Post a Comment