கலாநிதி றவூப் ஸெய்ன்
சட்டத்தின் ஆட்சி (Rule of Law) ஜனநாயக விழுமியங்களில் முக்கியமானது. அதன் அடிப்படையில்தான் சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள் எனும் மற்றொரு விழுமியம் பெறப்படுகின்றது. ஆயினும் இந்த விழுமியம் பெரும்பான்மையான ஜனநாயக நாடுகளில் வெறும் கோட்பாடாகவே உள்ளது. அதற்கு ஏதுவான சில காரணிகள் அங்கு இருக்கவே செய்கின்றன.
சட்டத்தின் ஆட்சி (Rule of Law) ஜனநாயக விழுமியங்களில் முக்கியமானது. அதன் அடிப்படையில்தான் சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள் எனும் மற்றொரு விழுமியம் பெறப்படுகின்றது. ஆயினும் இந்த விழுமியம் பெரும்பான்மையான ஜனநாயக நாடுகளில் வெறும் கோட்பாடாகவே உள்ளது. அதற்கு ஏதுவான சில காரணிகள் அங்கு இருக்கவே செய்கின்றன.
ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அதன் குடிமக்கள் அல்லது பிரஜைகள் என்ற வகையில் நாட்டின் அனைத்து சட்டங்களையும் பின்பற்றுவது அவசியமானது. அதில் யாருக்கும் ஒரு துளியும் கருத்து மாறுபாடுகள் இருக்க முடியாது. அதேவேளை, ஒரு நாட்டின் சட்டங்கள் அங்கு வாழும் எந்தவொரு மக்கள் தொகுதியினதும் கலாசார, மத சுதந்திரங்களை மீறுகின்ற வகையில் உருவாக்கப்படுவதோ நடைமுறைப்படுத்தப்படுவதோ ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். மட்டுமன்றி, சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறுவதும் ஆகும்.
குறிப்பாக, பன்மைத்துவ நாடுகளில் பல்லின மக்களினதும் கலாசாரம் மற்றும் மதம் தொடர்பான சுதந்திரங்களும் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சட்டங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இலங்கை ஒரு பன்மைத்துவ சமூகக் கட்டமைப்பைக் கொண்ட நாடு என்ற வகையில், சிறுபான்மை மக்களின் அடையாளங்களையும் தனித்துவங்களையும் பாதுகாப்பது சட்டமியற்றுபவர்களின் பொறுப்பாகும்.
அனைவருக்கும் ஒரே சட்டம்
4/21 தாக்குதலுக்குப் பிந்திய விவாதங்களில் ‘அனைவருக்கும் ஒரே சட்டம்’ என்ற கோஷம் முன்பை விட மிகக் கராராக எழுப்பப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கோஷம் பலராலும் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது பேரினவாதிகள் மட்டுமன்றி, சில அரசியல்வாதிகளும் அதனை தூக்கிப் பிடிக்கின்றனர். சிறி லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள எதிர்கால அரசியல் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கோரிக்கையை சில மதகுருக்கள் அரசாங்கத்திடம் முன்வைக்கப் போவதாகத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஆதரவாக கையொப்ப வேட்டையொன்றில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இவ்விவாதத்தை பல்வேறு கோணங்களில் நம் நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில், ‘அனைவருக்கும் ஒரே சட்டம்’ என்பதற்குள் பல உள் முரண்பாடுகளும் மங்கலான விடயங்களும் உள்ளன. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் எல்லாவற்றுக்குமான தாய்ச் சட்டமாக இருந்து வருகின்றது. இந்தச் சட்டத்தினை அடியொற்றியே குற்றவியல், பயங்கரவாதம், சொத்துரிமை, காணி, போக்குவரத்து, வங்கி, வியாபாரம், பணக் கொடுக்கல் வாங்கல் என இன்ன பிற சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இச்சட்டங்கள் அனைத்தும் இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. இன, மத, பிரதேச, கலாசார வேறுபாடுகள் இன்றி அனைவர் மீதும் அவை பிரயோகிக்கப்படுகின்றன. அவ்வாறாயின், விவாதத்திற்கு வந்துள்ள “அனைவருக்கும் ஒரே சட்டம்” என்ற கோஷத்தின் உட்பொருள் என்ன?
முஸ்லிம்கள் குறித்து ஒரு வகைப் பீதியும் சந்தேகமும் பெரும்பான்மை மக்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் முஸ்லிம்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மற்றொரு பீதியே ‘அனைவருக்கும் ஒரே   சட்டம்’ என்ற இந்தக் கோஷமாகும்.
இதன் மூலம் பெரும்பான்மை மக்களிடையே முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் வேறொரு சட்டம் இருப்பதாக வியாக்கியானப்படுத்தப்படுகிறது. இந்தத் தப்பான வியாக்கியானம் முஸ்லிம் சமூகம் குறித்த ஒரு பிழையான புரிதலின் விளைவா அல்லது இனத் துவேஷத்தை வளர்க்கும் நோக்கில் முன்வைக்கப்படும் ஒன்றா என்பதை பெரும்பான்மை மக்களே பரிசீலிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் செறிவாக வாழும் சில பிரதேசங்களில் ஒரு சில இளைஞர்கள் பொதுப் போக்கு வரத்து ஒழுங்குகளை மீறிச் செயற்பட்ட சில சம்பவங்கள் கடந்த காலங்களில் ஆங்காங்கே பதிவாகியிருந்தமை உண்மையே. கல்முனை, காத்தான்குடி, பேருவளை, திஹாரி போன்ற பிரதேசங்களில் மோட்டார் சைகிள் ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிவதில்லை என்ற குற்றச்       சாட்டை போக்குவரத்துப் பொலிஸார் பலமுறை முன்வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சில சமூக வலைத் தளங்களில் பரவி கடும் விமர்சனங்களையும் எழுப்பியது. முஸ்லிம்கள் நாட்டின் சட்டங்களை மீறுகின்றனர் எனப் பிரச்சாரம் செய்து கொண்டு கலவரங்களைத் தூண்ட முயற்சிப்போர் இதனை தமக்குச் சாதமாக எடுத்துக் கொண்டனர்.
சமீபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித, பேருவளை பிரதேசத்தில் இவ்விடயம் குறித்து முஸ்லிம் மக்களோடு தான் கலந்துரையாடிய பின்னர் தற்போது தலைக்கவசம் அணியும் நிலை உருவாகி விட்டது என்று தெரிவித்திருந்தார். தற்போது அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் இந்நிலைமை மாறி விட்டது.
ஆக, இந்தப் பின்னணியிலிருந்து அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கோஷத்தைக் கிளப்புவதில் எந்த நியாயமும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பு பட்டிருந்தால் அவர்களை பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும் எனவும், சிலர் கூறி வருகின்றனர். அது ஏற்புடையதே.
எவ்வாறாயினும், முஸ்லிம் தனியார் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதே இந்தக் கோஷத்தின் உள்நோக்கம் எனில், அது மிகப் பாரதூரமான உரிமை மீறலாகும். முஸ்லிம்களின் சமய, கலாசார  தனித்துவத்தைத் துடைத்தழிக்கும் நீசத்தனமாகும்.
அளுத்கம கலவரத்திற்கு முன்பிருந்தே ஞானசார தேரர் முஸ்லிம் தனியார் சட்டத்தையும் காழி நீதி மன்றங்களையும் ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றார். தொடர்ந்தும் இக்கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்கப் போவதாக அச்சுறுத்தி வருகின்றார். பெரும்பான்மை மக்களிடையே முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த விம்பம் எத்தகையது என்பதை நாம் நாடி பிடித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், முஸ்லிம்களின் விவாக-விவாகரத்து மற்றும் வாரிசுரிமையோடு மட்டுப்படுத்தப்பட்ட தனியார் சட்டத்தை தேரர் மிகப் பிழையாக வியாக்கியானப்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே நாம் குறிப்பிட்ட அனைத்து விவகாரங்களிலும் (காணி, கல்வி, வங்கி, கொடுக்கல் வாங்கல், குற்றவியல்….) முஸ்லிம்களுக்கு தனி யானதொரு சட்டம் நடைமுறையில் இருப்பது போன்றே தேரரின் பிரச்சாரம் அமைந்துள்ளது. இதனால் சிங்கள மக்கள் முஸ்லிம்கள் தொடர்பில் மென் மேலும் வெறுப்புக் கொள்வதற்கும் பீதியடைவதற்குமான ஒரு கொதிப்பான சூழல் இங்கு திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.
நாட்டிலுள்ள சில ஊடகங்களும் இந்தப் போலிப் பிரச்சாரத்திற்கு சோரம் போகின்றன. முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் தனிச்சட்டம் உள்ளது என்பது மிகப் போலியான பிரச்சாரமாகும். கண்டியச் சட்டம் இருப்பது போல், வட மாகாண தமிழர்களுக்கு தேச வழமைச் சட்டம் இருப்பது போல, முக்குவர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு முக்குவர் சட்டம் இருப்பது போல முஸ்லிம்களுக்கு தனியார் சட்டம் இருக்கின்றதே ஒழிய, தனிச் சட்டங்கள் ஏதும் இல்லை. மேற்போந்த சமூகங்களுக்கு தனித்துவமான விவாக, விவாரத்துச் சட்டம் உள்ளது போல் முஸ்லிம்களுக்கும் விவாக விவாகரத்துச்       சட்டம் உள்ளது. ஏனைய அனைத்து விடயங்களிலும் அவர்கள் நாட்டிலுள்ள பொதுச் சட்டங்களையே பின்பற்றுகின்றனர்.
முஸ்லிம் தனியார் சட்டம் என்பதோ கடந்த 300 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் ஒன்றாகும். முஸ்லிம்கள் தமது சமய அடிப்படையில் விவாக, விவாகரத்து விவகாரங்களைக் கையாள்வதற்கு இச்சட்டம் ஒல்லாந்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆங்கிலேயரால் தொடர்ந்தும் அங்கீகரிக்கப்பட்டு, சில திருத்தங்களோடு சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையில் எதுவித தொடர்பும் இல்லை. அந்தச் சட்டம் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை. முஸ்லிம்கள் அவற்றைப் பின்பற்றுவதனால் நாட்டுக்கோ ஏனைய சமூகங்களுக்கோ எவ்வித நஷ்டமோ அச்சுறுத்தலோ பிரச்சினையோ இல்லை.
அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற பிரச்சாரம் முஸ்லிம் விரோத கோஷம் என்பதில் சந்தேகமில்லை. இக்கோஷத்தை எழுப்புகின்றவர்கள் 4/21 தாக்குதலுக்கு முன்பாகவும் இதே அழுத்தத்தோடும் துணிவோடும் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தமது வாதத்திற்கு வலிமை சேர்க்கும் நோக்கில் தனியார் சட்டத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளாது சம்பந்தமில்லாத விடயங்களை தமது போலிக் குற்றச்சாட்டுகளுடன் வெட்டி ஒட்டுகின்றனர்.
முஸ்லிம் பெண்களின் ஆடையை எடுத்துக் காட்டாகக் கொள்கின்றனர். ஒரு நாட்டின் அரசாங்கத்தினால் ஒரு சமூகத்தின் வாழ்வியல் முறை (Life Style) இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கவோ அவ்வாறு மாற வேண்டும் என்று சட்டமியற்றவோ முடியாது. கலாசார, சமய சுதந்திரங்களில் தலையிட எந்த அதிகாரமும் அரசுக்கு இல்லை என்பதை மேலே கண்டோம். எந்தவொரு அரசுக்கும் ஒரு சமூகத்தின் கலாசார மற்றும் வாழ்வியல் உரிமைகளைப் பாராதீனப்படுத்தும் அதிகாரம் இல்லை என்பதை அனைத்து சர்வதேச  சட்டங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.
சட்டத்தின் ஆட்சியும் மதகுருக்களின் உண்ணாவிரதமும்
சட்டத்தின் ஆட்சி ஜனநாயகம் உயிர் வாழ்கிறது என்பதற்கான பிரதான அடையாளமாகும். துரதிஷ்டமாக இலங்கையில் சட்டத்தின் ஆட்சி படிப்படையாக தோல்வியுற்று வருகின்றது என்பதற்கு மோசமான உதாரணங்கள் பெருகிச் செல்கின்றன. குறிப்பாக கண்டியில் ரத்ன தேரரும், காலியில் பிக்குகள் பலரும் கல்முனையில் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பிக்குகளும் மேற்கொண்ட உண்ணாவிரதங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலேபரங்கள் சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குள்ளாக்குகின்றன.
அமைச்சர் ரிஷாதும், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலியும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே ரத்ன தேரரின் உண்ணா விரதம் ஆரம்பிக்கப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை குறிப்பிட்ட தினத்தில் நண்பகல் 12.00 மணிக்குள் பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறு விலகா விட்டால் நாட்டில் மிகப் பெரும் காணிவேல் ஒன்று நடாத்தப்படும் என்றும் அகிம்சை வழிவந்த ஒரு மதகுரு கர்ச்சிக்கின்றார்.
ஒரு மக்கள் பிரதிநிதி குறித்து யாரேனும் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தால் அவற்றை உரிய முறையில் விசாரித்துத் தீர்ப்பளிப்பதற்கு காவல் நிலையங்களும் நீதிமன்றங்களும் உள்ளன. நாட்டில் ஒரு தெளிவான சட்டமும் அதற்குப் பொறுப்பான அமைச்சும் உள்ளது. அதன்படியே தீர்மானிங்கள் பெறப்பட வேண்டும். அதற்குப் பெயர்தான் சட்டத்தின் ஆட்சி. ஒரு மதகுரு தான் விரும்பிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டால் அரசாங்கம் அதற்குப் பணிந்து கோரிக்கைக்கு செவிவாய்க்கும் எனின், சட்டத்தின் ஆட்சி என்பதன் அர்த்தம் என்ன?
இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு என்கிறோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை உண்ணாவிரதங்கள் கேலித் கூத்தாக்குகின்றன. நாட்டில் ஓர் அரசாங்கமும் சட்டங்களை அமுல் படுத்தும் முகவர்களும் இருக்கின்ற நிலையில் தடியெடுத்தவர்களெல்லாம் தண்டல்காரர்கள் என்பது போல சில தனிநபர்கள் எப்படிச் செயல்பட முடியும்? முஸ்லிம்கள் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும், மத்ரஸா கல்வி முறை நீக்கப்பட வேண்டும், இவற்றையே உண்ண வேண்டும், ஹபாயாவைக் கழற்ற வேண்டும் என்றெல்லாம் கோடு கிழிக்கும் அதிகாரம் எந்தவொரு ஜனநாயக அரசுக்கும் இல்லை.
ஒரு அரசாங்கத்திற்கே இந்த அதிகாரம் இல்லாத நிலையில் தலை மழித்த ஒரு மதகுரு இந்தப் புத்தகத்தைத்தான் வாசிக்க வேண்டும், இந்த மொழியைக் கற்கக் கூடாது. இஸ்லாத்தின் இந்தப் பிரிவைத்தான் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் கர்ச்சிப்பதற்கும் சட்டாம் பிள்ளை வேலை செய்வதற்கும் அதிகாரம் எங்கிருந்து வருகின்றது?
பன்மைப் பாங்கான ஒரு நாட்டில் ஒவ்வொரு சமூகத்தினதும் கலாசார, சமய வாழ்வியல் விவாகரங்களில் பயங்கரவாதம் அல்லது தீவிர வாதம் என்ற தோரணையில் அரசு கைவைக்க முடியாது. அவ்வாறு உரிமை மீறலில் ஈடுபடும் மதகுருக்களுக்கு இடமளிக்கவும் முடியாது. அதேவேளை, முஸ்லிம்கள் தமது மத கலாசார சுதந்திரங்களை பொறுப்புடன் கையாள வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று அப்பிப்பிராயமில்லை. தாம் முஸ்லிம்கள் என்ற உணர்வு நிலை அவர்களுக்கு இருப்பது போன்று இலங்கையர்கள் என்ற உணர்வு நிலையும் இருக்க வேண்டும். ­
சட்டத்தின் முன் அவைனவரும் சமம்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது தான் சட்ட ஆட்சியின் அடித்தளமாகும். தற்போது நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் என்று கோஷமெழுப்புபவர்கள் இந்த அர்த்தத்தில் அக்கோஷத்தை எழுப்புவார்களாயின் அதனை முஸ்லிம்கள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்பர். இன்று இலங்கையில் தவறிப் போயுள்ள விடயம் இதுதான். சட்டம் பிரயோகத்தில் வேறுபடுகின்றது. முஸ்லிம்கள் பாகுபாடாக நடத்தப் படுகின்றனர். ஓர வஞ்சனையுடன் நோக்கப்படுகின்றனர். எடுத்துக் காட்டாக சட்ட விரோத வழிகளில் பணம் சம்பாதித்தல் குறித்து இன்று வைத்தியர் ஷாபிக்கு எதிராக விசாரணை நடைபெறுகின்றது. ஆனால், ஷாபியை விட இத்தகைய விசாரணை நடத்தப்பட வேண்டிய பல மோசடிக்காரர்களும் அரசியல்வாதிகளும் இங்கு தாராளமாக உள்ளனர்.
திகன கலவரத்திலும் மினுவாங்கொடை கலவரத்திலும் நேரடியாகப் பங்கு கொண்ட அமித் சிங் உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அற்ப சொற்ப காரணங்களுக்காக இராணுவத் தேடுதலின் போது கைதாகிய அப்பாவி முஸ்லிம்கள் பலர் இன்னும் சிறைச்சாலைகளில் உள்ளனர்.
மே மாதம் தலதா மாளிகை பக்கம் சென்ற இரு முஸ்லிம் இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு இரத்தம் ஓட்டப்பட்டனர். ஆனால், குருனாகல் மாவட்டத்தில் சில பள்ளி வாயலின் நடுபகுதிக்குள் ஊடுருவி அல்குர்ஆன் பிரதிகளை எரித்துச் சாம்பலாக்கியவர்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லை.
தர்மச் சக்கரம் ஆடையில் பொறிக்கப்பட்டிருந்ததாக ஒரு அப்பாவி முஸ்லிம் பெண் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால் 1915 ஆண்டிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்களில் பல நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்கள் நொறுக்கப்பட்டன. அதன் சூத்திரதாரிகளுக்கு எந்தத் தண்டனையும் இல்லை.
இந்தக் கோணத்திலிருந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தை முன்வைப்பார்களாயின் முஸ்லிம்கள் அதற்கு முழு ஆதரவு வழங்குவார்கள். அதை விடுத்து முஸ்லிம் விரோத பகையுணர்வையும் முஸ்லிம்கள் குறித்து பயத்தையும் பெரும்பான்மை மக்களிடையே பிரச்சாரம் செய்து கலவரங்களைத் தூண்டும் நோக்கிலான இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை முஸ்லிம் சமூகம் வன்மையாக எதிர்க்க வேண்டும். சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் சமய, கலாசார சுதந்திரம் மூச்சுக் காற்றுக்கு ஒப்பானது. அதனை விட்டுக் கொடுத்தால் முஸ்லிம் சமூகம் உயிர் பிழைப்பது சாத்தியமற்றுப் போய்விடும்.

நன்றி - மீள்பார்வை இணையம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.