தனியான சிங்கள அரசை உருவாக்க பொதுபலசேனா கோருவது ஏன் ? மியன்மாருடனான ஒப்பந்தத்தினை அமுல்படுத்த தடை எது ?

தனியான சிங்கள அரசை உருவாக்க பொதுபலசேனா கோருவது ஏன் ? மியன்மாருடனான ஒப்பந்தத்தினை அமுல்படுத்த தடை எது ?

நேற்று (07.07.2019) கண்டியில் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் மாநாட்டில் அதன் செயலாளர் ஜானசார தேரரின் உரை நாங்கள் எதிர்பார்த்ததுபோல முஸ்லிம்களுக்கெதிரான விசம கருத்தினை வெளிப்படுத்தி இருந்தது.

அதில் “நாங்கள் தனியான சிங்கள அரசை உருவாக்க வேண்டும்” என்று சிங்கள தேசத்துக்கு அறைகூவல் விடுத்திருந்தார்.

அதாவது சிறுபான்மையான முஸ்லிம், தமிழ் மக்களின் ஆதரவின்றியும், அவர்களில் தங்கி நிற்காமலும் நாங்கள் தனித்து சிங்கள அரசை அமைக்க வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கையாகும்.

இது புதிதாக விடுக்கப்பட்ட கோரிக்கையல்ல. கடந்த காலங்களிலும் இதனைத்தான் தொடர்ந்து கூறிவருகின்றார்.

மியன்மாரின் அசின் விராது தலைமையிலான 969 இயக்கத்துடன் பொதுபல சேனா அமைப்பினர் 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

“ஆசியாவில் தீவிரவாதத்தினை அழித்தல்” என்ற தலைப்பிலான அந்த ஒப்பந்தத்தினை இலங்கையில் அமுல்படுத்துவதற்கு தடையாக இருப்பது இலங்கையில் உள்ள அரசியல் சூழ்நிலையாகும்.

அதாவது தனியான சிங்கள அரசாங்கம் அமையாததுதான் அதற்கு தடையாக உள்ளது என்பது பொது பல சேனாவின் கவலையாகும்.

பொதுபலசேனா இயக்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை இலங்கையில் நடைமுறைப் படுத்துவதற்கு முன்பே மியன்மாரில் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ததில் அசின் விராது தேரோ தலைமையிலான 969 இயக்கம் வெற்றிகண்டது.

மியன்மாரில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாக்குரிமை அற்றவர்களாக இருப்பதனால், எந்தவிதத்திலும் அவர்களது தேவைப்பாடுகள் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு இருக்கவில்லை.

மேலும், அரசியல் மட்டத்தில் அவர்களுக்கு எந்தவித செல்வாக்குகளும் இல்லை. அவர்களுக்காக பேசுவதற்கு அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ எவரும் இல்லாத நிலையில் அநாதரவான சமூகமாக மியன்மார் முஸ்லிம்கள் உள்ளார்கள்.

அத்துடன் ஆட்சி அதிகாரத்தில் இராணுவத்தினதும், பௌத்த பிக்குகளினதும் செல்வாக்குகள் அதிகமாக காணப்படுவதனால், இவர்களை பகைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாத நிலைமை மியன்மார் அரசியல் தலைவர்களுக்கு உள்ளது.

அதனால்தான் அங்கு ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டும் அதற்கு எதிராக அங்குள்ள அரசியல்வாதிகள் வாய் திறக்கவில்லை.

ஆனால் அவ்வாறான அரசியல் சூழ்நிலை எமது நாட்டில் இல்லை. அதாவது முஸ்லிம்கள் தங்களது பேரம்பேசும் சக்திகள் மூலம் ஆட்சியில் பங்காளியாகவும், ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்குவதனால்தான் சிறுபான்மை சமூகமான முஸ்லிம், தமிழ் சமூகத்தில் நங்கள் தங்கியிருக்க கூடாது தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பொதுபல சேனா இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனவே மியன்மாரின் அசின் விராது தேரோவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை இலங்கையில் அமுல்படுத்துவதற்கு தடையாக உள்ளது தனியான சிங்கள அரசு அமைக்கப்படாததுதான்.

ஆகவே தனியான சிங்கள அரசாங்கத்தினை அமைப்பதன் மூலம் மியன்மாரில் நடாத்தியது போன்று முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பை மேற்கொள்வதற்காகவே தனியான சிங்கள அரசாங்கத்தினை அமைக்க வேண்டும் என்று போதுபல சேனா இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Share:

No comments:

Post a Comment