போரா சமூக ஆசூரா தின சர்வதேச மாநாடு ; 
செப். 01 - 10 வரை கொழும்பில்

( மினுவாங்கொடை நிருபர் )

   போரா சமூகத்தினர் நடத்தும் "போரா" சமூக ஆசூரா தின சர்வதேச மாநாடு, செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல், 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை, கொழும்பு - கொள்ளுப்பிட்டியவிலுள்ள போரா சமூக பள்ளிவாசலை மையப்படுத்தி  இடம்பெறவுள்ளது.
 
    போரா சமூகத்தவரின் 2019 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய இச்சிறப்பு போரா  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, உலகெங்குமிருந்தும் 40 நாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 21 ஆம்  போரா சமூகத்தினர் இலங்கை வந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளையும், சுற்றுலாத்துறை அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்டுள்ளது. 

   கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலாத்துறை அதிகார சபை என இதனுடன் தொடர்புபட்ட நிறுவங்களின் ஊடாக இம்மாநாட்டிற்காக கொழும்பிலுள்ள சகல நட்சத்திர ஹோட்டல்களிலும் இடவசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 3000 பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

   இம்மாநாட்டில், போரா சமூகத்தின் தலைவர் கலாநிதி ஸெய்யிதினா முபாதல் (முப்படேல்) ஸைபுத்தீன் உள்ளிட்ட அந்தந்த நாடுகளின் தலைவர்களும்  கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வருபவர்கள், பத்து நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பர்.

அத்துடன், இவர்களுக்காக கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் காலி ஆகிய நகர மையங்களிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கான அறைகளையும் சுற்றுலாத்துறை அமைச்சு  ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

   ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், இலங்கையில் மிகப் பெரிய சுற்றுலாத்துறைக்கு போரா இன முஸ்லிம்கள் 40 ஆயிரம் பேர் கொழும்பில் கூடவுள்ளமை, இதுவே முதற்தடவையாகும். 

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.