ஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் இறுதித் தீர்மானம் தொடர்பில் இன்று (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியுடன் வேட்பாளர் தெரிவில் அவர்களுக்குள் பாரியதொரு குழப்பம் இருப்பது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
அதே வேளை "2020 ல் சஜித் எமது ஜனாதிபதி" என்ற போஸ்டர்கள் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களால் நாட்டின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. இதுவரை காலமும் ரணிலை மீறி எதுவும் செய்ய முடியாமல் அடக்கி வாசித்து வந்த சஜித் கடந்த சில நாட்களாக ஏதோ ஒரு புது தைரியத்தில் இயங்குவது போன்று தெரிகிறது. அல்லது இதை விட்டால் இன்னொரு வாய்ப்பு தனக்கு ஏற்படாதென்ற உண்மையை சஜித் உணர்ந்திருக்கலாம்.
ஐ.தே கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உள்ளடங்கலாக செயற்குழுவில் சஜித்துக்கு பெரிதான ஆதரவுத்தளம் இல்லை. லக்‌ஷ்மன் கிரியெல்ல, ரவி, கபீர், அகிலவிராஜ் போன்ற ரணில் விசுவாசிகளும் மீண்டும் மஹிந்தவிடம் சென்று சேர முடியாது என்று உணர்ந்து கொண்ட ராஜித, சம்பிக போன்றோரும் சஜித்துக்கு எதிராகவே குரல் கொடுத்து வருகிறார்கள். மங்கள மட்டும் சஜித்தை ஆதரிக்கிறார். வழமை போன்று ஹரின் தலைமையிலான பின்வரிசை உறுப்பினர்களும் சஜித்துக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க சஜித்தை வேட்பாளராக நியமிக்க ரணில் காட்டி வரும் தயக்கத்திலும் நியாயமில்லாமல் இல்லை. கடந்த வருடம் ஒக்டோபரில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழறுபடியின் போது ஆரம்ப சில நாட்கள் சஜித் அலரி மாளிகை பக்கம் வரவே இல்லை. சுகயீனத்தை காரணம் காட்டி வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர் இரகசியமாக அவ்வப்போது மைத்திரியையும் சந்தித்து வந்தார். இறுதியில் மைத்திரியால் எதுவும் ஆகாதென்று தெரிந்த பின்னர் அல்லது இனி ரணிலை எதிர்க்க முடியாதென்று உணர்ந்த பின்னர் ரணிலின் காலில் சரணடைந்திருந்தார்.
தந்தையின் கட்சி என்ற ஒரேயொரு சென்டிமன்ட் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சஜித் எப்போதோ ஐ.தே.க. வை விட்டு வெளியேறியிருப்பார். தந்தையின் லேபலுடன் கட்சிக்கு வந்து, தனது அமைச்சின் மூலமான அபிவிருத்தித் திட்டங்களில் கூட கட்சியை விட தனது பெயரையே விளம்பரப்படுத்தும், கட்சியில் பெரிதும் பற்றுக் கொண்டிராத, கட்சி பிரச்சினைகளை சந்திக்கின்ற போது தலைமைக்கு தோள் கொடுக்காத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க கூடாதென்பதே நடுநிலையான அரசியல் பார்வையாகும்.
மேலும் அண்மைக்காலமாக மைத்திரியுடன் நெருங்கிய உறவைப்பேணி வரும் சஜித் சுதந்திர கட்சி கூட்டணியின் பொது வேட்பாளராக களமிறங்கும் எண்ணத்திலும் இருக்கிறார். ஐ.தே.க. வில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் மைத்திரியை பயன்படுத்தி அதையும் செய்ய சஜித் பின்வாங்க மாட்டார். ஆனால் சஜித் - மைத்ரி கூட்டணி தொடர்பில் ரணில் பெரிதும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மைத்திரி பற்றி நாட்டு மக்கள் கொண்டுள்ள பொது அபிப்பிராயம் ஒன்றே போதும் அந்த கூட்டணியை தோல்வியடையச்செய்வதற்கு.
இப்படி பார்க்கின்ற போது கட்சியின் உள்ளக உறவு சீர்குலையாமல் சஜித் தவிர்ந்த வேறு ஒருவரையே ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும்.
-Hisham-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.