( மினுவாங்கொடை நிருபர் )

   யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை, நவம்பர் மாதம்  முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

   இதேவேளை, போக்குவரத்துச் சேவையை ஆரம்பிப்பதற்கு சில விமான சேவை நிறுவனங்கள் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ. நிமல்சிறி குறிப்பிட்டுள்ளார்.

   நாளாந்தம் குறித்த விமான சேவைகளை முன்னெடுக்கவும் இந்த நிறுவனங்கள் இணங்கியுள்ளன.

   50 நிமிடம் முதல் ஒரு மணித்தியாலத்திற்குள் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான  விமானப் பயணம் அமையும் என்றும்  பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

   இது தவிர,  மேலும் சில விமான சேவை நிறுவனங்களும் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் மேலும் பல விமான சேவைகளை  ஆரம்பிக்க முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக,  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரினால் 27 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட நிலையில், 
சென்னையிலிருந்து புறப்பட்ட முதலாவது விமானம் இலங்கை நேரப்படி, காலை 10.15 மணி அளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.