கொவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தையடுத்து மிகவும் பாதிப்படைந்த குடும்பங்களை இனங்கண்டு, அந்தக் குடும்பத்துக்கு 5,000 ரூபாய் வழங்கும் செயற்பாடு, நாளையுடன் (20) நிறைவு செய்யப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வண்ணியாராச்சி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, இது தொடர்பாக தன்னுடைய அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இதுவரைக்கும் 416,764 சிரேஷ்டப் பிரஜைகள் உள்ளிட்ட 1.4 மில்லியன் குடும்பங்களுக்கும் விசேட தேவையுடைய 84,071 பேருக்கும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளாக உள்ள 25,230 குடும்பங்களுக்கும் என, மொத்தம் 7 பில்லியன் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது எள்று அவர் கூறினார்.
ஆரம்பத்தில், அரசாங்கத்தின் நிதியுதவிக்குத் தகுதியானவர்களுக்கு மாத்திரமே 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு எத்தனிக்கப்பட்டதாகவும் பின்னர், தற்போதுள்ள நிலையால், தொழிலை இழந்து, வாழ்வாதாரத்த இழந்துள்ள பல குடும்பங்கள் இருக்கின்றமை இனங்காணப்பட்டதாகவும் இந்நிலையிலேயே இவ்வாறான குடும்பங்கள் அனைத்துக்கும் இந்த நிதித் தொகை வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.