2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியானது.

அதன்படி, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 73.84 சதவீதமான மாணவர்கள் சித்தி அடைந்து உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் 63.82 சதவீத மாணவர்கள் கணித பாடத்தில் சித்தி பெற்றுள்ளதாகவும் 10,346 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 542 இணைப்பு நிலையங்களுடன் நான்காயிரத்து 989 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இந்த பரீட்சைக்கு, மொத்தமாக 7 லட்சத்து 17 ஆயிரத்து 246 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

4 லட்சத்து 33 ஆயிரத்து 189 பாடசாலை பரீட்சார்த்திகளும், 2 லட்சத்து 84 ஆயிரத்து 57 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அவர்களுள் அடங்குகின்றனர்.

இந்த நிலையில், தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, பரீட்சைப் பெறுபேறுகள் உடனடியாக பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பார்வையிடலாம் எனவும் பாடசாலை அதிபர்களுக்கு ஒன்லைன் மூலம் பெறுபேறுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அவசியமாயின் 0112784208/ 0112784537, 0113188350/ 0113140314 என்ற தொலைபேசி இலக்கங்களுடனும் 1911 துரித அழைப்பு இலக்கத்தின் மூலமும் தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.