(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன்  மிக நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்  என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அண்மித்த நாள் ஒன்றில் பிரசித்தமான ஹோட்டல் ஒன்றில் குறித்த தற்கொலைதாரியை தனியே சந்தித்து கலந்துரையாடியுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் சிஐடியின் பிரதான விசாரணைக்குழு, பிரசித்த சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இளைய சகோதரர் ரியாஜ்  பதியுதீன், சுங்க அதிகாரி ஒருவர் உட்பட 6 பேரைக்  கைது செய்துள்ளது.
நேற்றுக் காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், தற்கொலை குண்டுதாரி ஒருவருடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளமையும், தாக்குதலை அண்மித்த நாள் ஒன்றில்  பிரசித்த ஹோட்டல் ஒன்றில் குறித்த தற்கொலைதாரியை தனியே சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பிலான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதன் பின்னணியில் இருந்தமை தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர்  நுவன் வெதிசிங்கவுடன் விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்தியே அவர் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த 6 பேரும் தற்போது சி.ஐ.டி.யின் பொறுப்பில், நான்காம் மாடியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் தற்போதைய விசாரணைகளில் புதிதாக கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளார் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தகவல் தருகையில்,
கைது செய்யப்பட்ட இந்த 6 பேரில் ஒரு சட்டத்தரணியுள்ளார். சுங்க அதிகாரி ஒருவர் உள்ளார். மேலும் மூவரும் உள்ளனர். இவர்களை விட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜும் உள்ளடங்குகின்றார்.

ரியாஜ் பதியுதீன் என்ற சந்தேக நபர் ஒரு தற்கொலை குண்டுதாரியுடன் நேரடியாக தொடர்புகளைப் பேணியுள்ளார். அதேபோல், குண்டுத் தாக்குதலுக்கு மிக நெருங்கிய காலப் பகுதியில் ரியாஜ் பதியுதீன், குறித்த குண்டுதாரியுடன் கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில் தனியாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதேபோல் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், நலன்புரி அமைப்புக்கள், நிறுவனங்களை உருவாக்கி, குண்டுதாரிகளுடன் ஒன்றாகப் பதவிகளை வகித்து செயற்பட்டுள்ளனர். அந்த நிறுவனங்களில் குண்டுதாரிகள்   பணம் முதலீடு செய்துள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த நிறுவனங்களுக்காக காணிகளை இலவசமாக குண்டுதாரிகள் வழங்கியுள்ளனர். இவ்வாறான பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளானர். அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.’ என தெரிவித்தார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவிடம் கேள்விகளைத் தொடுத்து விளக்கம் கோரினர்.

கேள்வி: கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் என அறிகின்றோம். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்ன?

பதில்: அந்தச் சட்டத்தரணி இரு குண்டுதாரிகளுடன் தொடர்புகளை பேனியமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குண்டுதாரிகளுடன் இணைந்து பல அமைப்புக்கள் நிறுவனங்களில் ஒன்றாகப் பதவிகளை வகித்துள்ளார்.
குண்டுத் தாக்குதல் சம்பவங்களை திட்டமிட்டதன் பின்னணியில் அவருக்கு உள்ள சில தொடர்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதனை மையப்படுத்தியே அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கேள்வி: காணி ஒன்றை அல்லது இடம் ஒன்றை இலவசமாக வழங்கியதாகக்  கூறினீர்கள். அது குறித்து விளக்க முடியுமா?

பதில்: குண்டுதாரி ஒருவர், ஓர் அமைப்புக்கு ஓர் இடத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். குறித்த அமைப்பு இன்றும் அந்த இடத்தில் தான் இயங்குகிறது.
கேள்வி: சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்வது தொடர்பில்?

 பதில்: உங்களுக்கு தெரியும் இது மிக நீண்ட சூட்சுமமான விசாரணை ( சந்தேக நபர்களின் தொடர்படல் வலையமைப்பு அடங்கிய வரைபடம் ஒன்றைக் மடிக்கணினியில் காண்பித்து விளக்கினார்) அதனால் அவர்களை இன்றோ, நாளையோ நீதிமன்றில் ஆஜர் செய்வது சாத்தியமற்றது. முடியுமானவரை விரைவில் விசாரணைகளை நிறைவு செய்து ஆஜர் செய்வோம்.

கேள்வி: அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னர் இந்த விவகாரங்களைக் கையாண்ட விசாரணை அதிகாரிகள் சரியாக அவற்றைக் கையாளாமையால் விசாரணைகள் பாதிக்கப்பட்டதாக கூறினீர்கள், அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

பதில்: அவர்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் குறித்து முடிவெடுக்க பொலிஸ் மா அதிபர் அடுத்த இரு வாரங்களுக்குள் விசாரணையாளர்களிடம் அறிக்கை கோரியுள்ளார்.

கேள்வி: முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த விவகாரத்துடன் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் உள்ளதா?

பதில்: தற்போதைய நிலையில் அவரின் சகோதரரின் தொடர்பு குறித்தே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் அவரது சகோதரரைக் கைது செய்துள்ளோம்.மேலதிக விசாரணைகளை நாம் முன்னெடுக்கிறோம். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இந்த விசாரணைகளில், இக்குற்றத்தின் பொறுப்பு யார் மீது உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பதை தவிர, அவ்வாறான நபர்களின் தரம், அந்தஸ்து தேவையற்றவை. என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.