வீட்டுத்தோட்டமும் மனநலமும் - பகுதி 1

பயிர் வளர்த்து மனநிறைவு அடைவோம்



சிறந்த சிந்தனைகளாலும், நடத்தைகளாலும், தியாகங்களாலும், உயர்வான மனித உறவுகளாலும் உருவாக்கப்பட்ட நாடுதான் நாம் வாழும் இலங்கை திருநாடு. அதனால் தான் “தர்ம தேசம்” எனும் பெயரும் எமது நாட்டிட்கு கிடைத்தது. எமக்கு முன்பு வாழ்ந்த எமது மூதாதயர்கள் மனநிறைவாக வாழ வேண்டும் எனும் எதிர்பார்ப்பை இலக்காக்கொண்டு உழைத்தார்கள். அதற்காக தமது நேரத்தையும், உடலையும், உணர்வுகளையும் அர்ப்பணித்தார்கள். ஒரு உயர்வான இலக்கு அவர்களுக்கு இருந்ததால் அவர்கள் வாழ்வில் சுகம் கண்டார்கள். அவர்கள் வாழ்ந்த நாடும் சுபீட்சம் அடைந்தது.

அவர்களின் வாழ்வும், வீடும், நாடும் சுபீட்சமடைய காரணமாக இருந்த பல காரணங்களில் மிக முக்கியமான ஒரு காரணம் அவர்களை சுமந்த மண்மீது கொண்ட பற்றும் அவர்களை சுற்றியிருந்த இயற்கை அண்ணை மீது கொண்டிருந்த நெருக்கமுமாகும். அவர்களின் வீட்டையும் வீட்டுச்சூழலையும் பயன்படுத்தி, பன்படுத்தி அவற்றின் மீது முழுமையான அன்பை கொடுத்து வீட்டினதும், வீட்டுச்சூழலினதும் ஒரு பாகமாக அவர்கள் மாறினார்கள். தமக்குத் தேவையான உணவுகளை வீட்டிலேயே நட்டி தமது பிள்ளைகளை பராமரிப்பது போன்று அவற்றையும் பராமரித்து மனநிறைவு கண்டார்கள்.

அவர்கள் நட்டிய பயிரும் சூழலில் இயற்கையாகவே வளர்ந்த மரம் செடி கொடிகளும், பறவைகளும் மிருகங்களும், பூச்சி புழுக்களும் அவர்களுக்கு பிள்ளைகளாகவும், நண்பர்களாகவுமே இருந்தன. பிள்ளைகளோடு பேசுவதைப்போன்று நாட்டிய பயிர்களோடு பேசுவார்கள். அவற்றுக்கு வந்து போகும் பறவைகளோடு உரையாடுவர்கள். அவர்கள் பயிரிட்ட பயிர்களுக்கும், அவர்கள் வாழ்ந்த சூழலுக்கும் அன்பும் மறியாதையும் செய்ததால் அவைகளும் அவர்களுக்கு மனநிறைவை கொடுத்தன. தமது தோட்டத்தில் வளர்ந்த பயிர்களை பரிக்கும் போதும், சமைத்து உண்ணும் போதும் மற்றவர்களுக்கு கொடுப்பதன் மூலமும் மனநிறைவை அடைந்தனர்.

தாம் வாழ்ந்த மண் மீது பற்றும் வளர்த்த பயிர்கள் மீது அன்பும் செலுத்தி தூய்மையான ஆகாரங்களை உண்டு உடலையும் உள்ளத்தையும் காத்து மனநிறைவுடன் வாழ்ந்த மண்ணின் மைந்தர்களின் வாரிசுகள் தான் நாங்கள். அவர்களின் நிறமூர்த்தங்கள் எங்களுக்குள்ளும் இருக்கின்றன. அவர்கள் போல் எமது வீட்டுத்தோட்டத்தில் நாமும் பயிர் வளர்த்து, உண்டு, பகிர்ந்து மனநிறைவும் மன அமைதியும் அடைய இப்போதிலிருந்தே முயற்சிப்போம்.

அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.