காலி  துறைமுகம்  உலகின் மிகவும் பழமைவாய்ந்த துறைமுகமாகக் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. கி.பி 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்பெய்னின் புவியியலாளரும், நாடுகாண் பயணியுமான அல்லாமா முஹம்மத் அல் இத்ரீஸி அவர்கள் வரைந்த உலகப்படத்தில் 'காலி'  நகரம் 'காலிஹ்' என்று அரபுமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலிஹ்  என்ற பதம் ' கப்பல்களை நிறுத்திவைக்கும் இடம்' அல்லது ' கப்பல் கட்டும் இடம் என்று பொருள்படுகிறது. காலிஹ் என்ற பெயர் பிற்காலத்தில் காலி என்று திரிபடைந்திருக்கலாம் என்ற கருத்து அரபு அறிஞர்களுக்கு  மத்தியில் நீண்டகாலமாக நிலவிவருகிறது. 

காலித் துறைமுகத்திற்கு அருகில் உள்ள மிகவும் பிரபலமான பள்ளிவாசலாக  கச்சுவத்த பள்ளிவாசல் கருதப்படுகிறது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர்களின் கருத்துக்களுக்கு அமைய பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலுக்கு முன்னரே கச்சுவத்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கச்சுவத்த என்ற பெயர் ஹஜ்ஜிவத்தை என்ற பெயரின் நீட்சியாகும். அதாவது ஹஜ்ஜி தோட்டம் என்பது இதன் தமிழ் அர்த்தமாகும். இஸ்லாத்தின் அறிமுகத்தின் பின்னர் தூர கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து புனித மக்கா நகருக்கு ஹஜ் செய்வதற்காக சென்ற ஹஜ்ஜாஜிகள் ஹஜ்ஜிவத்தையில் சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுத்தாகவும் கப்பலில் ஹஜ் செய்வதற்காக ஜித்தா துறைமுகம் நோக்கிச் சென்ற  சர்வதேச ஹாஜிகளின் நலன் கருதி ஹஜ்ஜிவத்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
 

சீனாவின் மிங் வம்ச அரச குடும்பத்தின் (Ming dynasty) ஆலோசகர் அட்மிரல் செங் ஹே (Zheng He)அவர்கள் சீனாவில் இருந்து ஹஜ்ஜாஜிகளை கப்பல் மூலம் கி.பி 1400ம் ஆண்டு காலப் பகுதியில் (போர்த்துக்கேயர் இலங்கை வருவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர்) ஹஜ்ஜிக்காக அழைத்துச் சென்ற போது காலி ஹஜ்ஜிவைத்தைக்கு வருகை தந்ததாகவும் சுதேச சிங்கள மக்களும் இலங்கை முஸ்லிம்களும் அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததாக சீனாவின் வரலாற்றுக்குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. 

மலேசிய, இந்தோனேசிய, சீன  ஹஜ்ஜாஜிகள் ஹஜ்ஜூவத்தை பள்ளிவாசலில் இருந்தே இஃராம் கட்டியதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அல்குர்ஆனுக்கு முதலில் தமிழில் தப்ஸீர் எழுதிய இமாமுஸ் ஸைலான் செய்ஹ் முஸ்தபா பின் பாவா ஆதம் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் ஹஜ்ஜிவத்தை  பள்ளிவாசலில் இருந்தே  ஹஜ் பயணத்தை ஆரம்பித்தார்கள். ஹஜ் காலம் நெருங்கும் போது ஹஜ்ஜிவத்தை பள்ளிவாசலை நினைவுகூர்வது அவசியமாகும் 

பஸ்ஹான் நவாஸ், 
செய்தி ஆசிரியர், 
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்கருத்துரையிடுக

Blogger இயக்குவது.