இவ்வருடம்  ஏப்ரல் 12, 13 ஆம் திகதிகள்  தமிழ், சிங்கள புத்தாண்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வாழ் தமிழ், சிங்கள மக்கள் இந்த தினத்தை  தமது பிரதான தேசிய உற்சவமாகக் கருதுகின்றன. சித்திரையில் வருகின்ற தமிழ், சிங்கள புத்தாண்டு செழுமைகளுடன் நிறைந்த, நெல், பசுமையான மரங்களால் முழு நாடும் அழகுபெறும் ஒரு காலப் பகுதியாகும். இப் புத்தாண்டுக்காலப் பகுதியானது நாட்டின் இனங்களுக்கு மத்தியில் மட்டுமல்லாது, குடும்பங்களுக்கு மத்தியிலும் நட்பு, சமாதானம், ஒத்துழைப்பு என்பவற்றை விருத்தி செய்வதற்கு மிகுந்த வாய்ப்பாக அமைகின்ற ஒரு காலப் பகுதியாகும் என்று வடமேல் மாகாண ஆளுனர் அல்ஹாஜ் ஏ.ஜே.எம்.முஸம்மில் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கான தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

மேலும், அந்த வகையில் முழு நாடும் அற்புதமான சகோதரத்துவத்தினால் ஜொலிக்கும் சித்திரை மாதமானது, பண்டைய காலம் தொட்டுப் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களை மையமாகக் கொண்டு மகிழ்ச்சியாகக் கழிக்கும் ஒரு காலப் பகுதியாகும். எனினும், இம்முறை அவ்வாறிருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்கான காரணம் கொவிட்-19 எனும் தொற்றுநோய் எமது நாட்டை மட்டுமன்றி, முழு உலகையும் மிகவும் பயங்கரமாகப் பீடித்திருக்கின்றமையாகும். பெரும்பாலான உலக நாடுகள் போன்றே எமது நாடும் இந்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசாங்கங்களினதும் இலக்கு, தமது நாட்டையும், நாட்டு மக்களையும் இந்நோயிலிருந்து பாதுகாப்பதாகும். இதற்காக அனைத்து அரசாங்கங்களும் தம் மக்களுக்கு வழங்குகின்ற பிரதானமான சுகாதார அறிவுரை, அனைவரும் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்பதாகும். இந்த ஆலோசனையின் படியும், எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளின் ஊடாகவும், இந்த தொற்று நோயை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, மக்களின் உயிர்களைப் பாதுகாத்து, சர்வதேசத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதற்கு எமது நாட்டால் முடிந்திருக்கின்றமை மகிழ்ச்சியான ஒரு விடயமாகும்.

அந்த வகையில், விருப்பம் இல்லையென்றாலும் இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டை தமது வீடுகளிலிருந்து வெளியே செல்லாமல், குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடுமாறு அரசாங்கம் ஆலோசனை வழங்கியிருக்கின்றது. வாழ்வில் முதற் தடவையாக மிகவும் கடினமான விடயமாக இது இருந்தாலும். நாட்டையும், தேசத்தையும், தமது உயிர்களையும் இந்த மாபெரும் அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நீங்கள் இந்த அர்ப்பணிப்பைச் செய்வீர்கள் என்று நான் நம்புகின்றேன். இந்த நோயை எமது தாய்நாடு வெற்றிகொண்டால், அத்தினத்தில் இன, மத வேறுபாடுகளின்றி அந்த வெற்றியை சித்திரைப் புத்தாண்டு போல் கொண்டாடுவதற்கு உங்களுக்கும், எனக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் அதிஷ்டமான, ஆரோக்கியமான புத்தாண்டாக அமையவேண்டும் என்று உள்ளத்தால் பிரார்த்திக்கிறேன்.! என்றும் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் வடமேல் மாகாண ஆளுனர் முஸம்மில் தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.