(அப்ரா அன்ஸார்)

முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்க காத்திருந்தோருக்கு கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கர தாக்குதல்கள் நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டன.ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாக சில கூட்டம் சித்தரித்துக் கொண்டிருக்கிறது.மறுபுறத்தில் இந்த தாக்குதல்களை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீதும் ,முஸ்லிம் பிரதேசங்களிலும் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்கள் மிகவும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் இருக்கத்தக்கதாகவே இவ்வளவு கூத்துக்களும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் மீது மிகவும் திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.நீர்கொழும்பு,மினுவாங்கொடை,ஆகிய பிரதேசங்களிலும் குருநாகல் ,புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிர்,உடமை ,இழப்புக்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.அரசியல்வாதிகள்,பாதுகாப்புத் தரப்பினர் இந்த தாக்குதல்களுக்கு ஆசிர்வாதம் வழங்கியதாக குற்றச்சாட்டுகளும் ,ஆதாரங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் கும்பல் நடத்திய ஈஸ்டர் தினத் தாக்குதலுக்கு முஸ்லிம் சமூகத்தில் எந்தவகையான ஆதாரமும் இல்லை என்பதை முஸ்லிம்களின் எதிராளிகள் கூட அறிவார்கள்.சஹ்ரானின் சகோதரர்கள் தந்தை ,தாய் உள்ளிட்ட 15பேர் இடுப்பில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு சாய்ந்தமருதில் மறைந்திருந்த போது அவர்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்பு படையினருக்கு அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம் மக்கள் தான் வழங்கினார்கள் என்பதே உண்மை .படையினரிடம் தங்களை காட்டிக்.கொடுக்க வேண்டாம் எனக்கோரி சாய்ந்தமருது முஸ்லிம் மக்கள் முன்பாக அந்த பயங்கரவாதிகள் கட்டு கட்டாக பணத்தை அள்ளி வீசிய போதும் அதனை மக்கள் பொறுபடுத்தவேயில்லை .இவ்வாறு சஹ்ரான் கும்பலை முஸ்லிம் மக்கள் புறக்கணித்தமை காரணமாகத் தான் இத்தனை சீக்கிரத்தில் அந்த கும்பலுடன் தொடர்புபட்ட துரும்புகளைக் கூட படையினரினால் பிடிக்க முடிந்தது என்பது தான் யதார்த்தமாகும் .பாதுகாப்பு படையினரே அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.இப்படி இருக்கத்தக்கதாக சஹ்ரான் கும்பலின் கொடுரமான செயலுக்கான ஒட்டுமொத்த பழியையும் முஸ்லிம் சமூகத்தின் மீது இறக்கி வைக்கும் செயலானது நியாயமற்றதாகும்.

ஈஸ்டர் தினத் தாக்குதலை சாட்டாக வைத்து முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தெட்டத் தெளிவான அநியாயமாகும்.இந்த தாக்குதலை நடத்தியவர்களில் அநேகமானோர் கொள்ளையர்கள் என்பதை களத்திலிருந்தவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.ஈஸ்டர் தின பயங்கரவாத செயல்களால் கோபமடைந்து உணர்ச்சி வசப்பட்ட எவரும் இந்த தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பதே உண்மை.முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையொன்றை கட்டவிழ்த்து விடுவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் இந்த இனவாதிகளை களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக தர்காநகர், திகன,அம்பாறை தாக்குதல்களை நடத்துவதற்கு இவ்வாறனவர்கள்  அப்போது வேறு காரணங்களை தேடிப் பிடித்திருந்தார்கள்.அம்பாறை நகரில் முஸ்லிம் ஒருவரின் கடையில் விற்கப்பட்ட கொத்து ரொட்டியில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தை கலந்திருந்ததாக கூறி அங்குள்ள கடைகளும் ,பள்ளிவாசலும் பேரினவாதிகளால் அடித்து நொருக்கப்பட்டது.குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளருமான தயாசிரி ஜயசேகர அங்கு சென்று அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றதையும் அவர்கள் பிணையில் விடுவிக்க ஏற்பாடு செய்தார் என்பதையும் ஊடகங்கள் பகிரங்கப்படுத்தி இருந்தன.இந் நிலையில் தான் இவ்வாறு நடந்திருக்காவிட்டால் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவானவர்கள் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என்றும் அதை தவிர்ப்பதற்காகவே தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் தயாசிரி ஜயசேகர கூறியிருந்தார்.அதாவது வன்முறையாளர்களுக்கெதிராக உச்ச பலத்தை பிரயோகிக்குமாறு பாதுகாப்பு  தரப்புக்கு அரசாங்கம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஒரு பொலிஸ் நிலையத்தையே தனியாளாக சென்று காப்பாற்றியதாக தயாசிரி கூறியிருக்கின்றார்.என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். இது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தயாசிரியை அழைத்து வாக்கு மூலம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையில் தான் நடந்து முடிந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என்பது தெளிவான உண்மையாகும்.முஸ்லிம் மக்களின் வீடுகள் ,கடைகள் ,வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளன.பல இடங்களில் சொத்துக்களுக்கு அழிவை ஏற்படுத்திய இனவாதிகள் அங்கு படையினரும் பார்த்திருக்கத்தக்கதாகவே இந்த அடாவடிகள் நடந்திருக்கின்றன என்பதை அங்கு பதிவான சிசிடீவி வீடியோ காட்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன.அது மட்டுமன்றி வன்முறைகளை புரிந்த இனவாதிகளை சட்டத்தின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளையும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.தாக்குதல் நடந்த பள்ளிவாசல் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களின் வீடியோக்கள் பதிவாகிய ஹார்ட் டிஸ்க் இனை சீருடையில் வந்த படையினர் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியிருந்தார்கள்.புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் போது கொட்ரமுல்ல பகுதியில் பௌசுல் அமீர்தீன் என்பவர் இனவாதிகளால் கொல்லப்பட்டார்.தச்சுத் தொழிலாளியான அமீர்தீன் நான்கு பிள்ளைகளின் தந்தை அவரது வீட்டையும் ,வாகனங்களையும் இனவாதிகள் நாசம் செய்தார்கள்.வாளால் வெட்டப்பட்ட அமீர்தீன் கொலை செய்யப்பட்டிருந்தார்.இரண்டு நாட்கள் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் 30பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.அநேகமான பள்ளிவாசலுக்குள் இருந்த குர்ஆன் பிரதிகள் தீயிடப்பட்டிருந்தன.யுத்தம் முடிவடைந்த பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் நாட்டில் வெகுவாக இடம்பெற்று வந்தமையை நாம் அறிவோம்.ஞானசார தேரர் போன்ற பௌத்த மதகுருமார்களே இந்த வெறுப்பு பிரசாரங்களை தலைமையேற்று நடத்தி வந்தனர்.அந்த பிரசாரங்களினூடாக ஏற்பட்ட வெறி எத்தகையது என்பதை பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களை வைத்து புரிந்து கொள்ள முடிகின்றது.இத்தனைக்கும் மத்தியில் நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த விடயம் தொடர்பில் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானதாகும்.குறிப்பாக நாடு பற்றியெரிந்த சமயத்தில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நடந்த வன்முறை தொடர்பில் ஒரு கண்டனத்தை கூட அங்கிருந்து வெளியிடவில்லை எ்பது முஸ்லிம்களை ஏமாற்றியதாகவே உள்ளது.தன்னிடமிருந்த பாதுகாப்பு அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சி சார்பான ருவன் விஜேவர்தனவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றதால் நாட்டில் நடந்த வன்முறைகள் தொடர்பில் தான் தலையிட வேண்டிய  அவசியமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி நினைத்திருந்தாரோ தெரியவில்லை.சஹ்ரான் கும்பல் நாட்டில் தாக்குதலொன்றை நடத்தப் போகிறது என்று புலனாய்வு பிரிவினர் மிக துல்லியமாக தகவல்களை வழங்கியிருந்தும் கூட ஆட்சியாளர்கள் அது தொடர்பில் பொருற்படுத்தவில்லை என்பது பாரதூரமானது.அந்த வகையில் சஹ்ரான் கும்பலின் பயங்கரவாத செயல்களுக்கும் அதனை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது ஏவி விடப்பட்ட பயங்கரவாத செயல்களுக்குமான முழுப் பொறுப்புக்களையும் ஆட்சியாளர்களே ஏற்க வேண்டும் அதை விட்டு ஒட்டு மொத்த பலியையும் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்துவது அநியாயமானதாகும்.நல்லாட்சி அரசாங்கம் சமூகத்தை சரியாக வழிநடத்தும் தலைமைகளாக இருந்திருந்தால் பயங்கரவாதி சஹ்ரானையும் அவன் ,கூட்டத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க முடியும்.ஆனால் சிறுபான்மையினரை தாக்கிவிட்டு அதில் குளிர் காய்கிறார்கள்.

எல்லா திசைகளிலும் முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்கள் நடக்கின்றன.குர்ஆனை வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ,இனவாதிகள் முஸ்லிம்களின் சொத்துக்களை அடித்து நொறுக்கினார்கள் அத்தோடு உளரீதியான தாக்குதல்களும் முஸ்லிம்கள் மீது தொடரப்பட்டு வருகின்றன.ஆடை விவகாரம் தொடக்கம் கொரோனா வைரஸ் வரை இழுத்து வைத்துள்ளார்கள்.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்களின் பின்னராக குறித்த குண்டுத் தாக்குதல்களோடு தொடர்பற்ற அப்பாவி இளைஞர்கள் பலரும் கைது செய்யப்பட்டார்கள்.எனினும் ஒரு வருடம் கடந்துள்ள  நிலையில் நிலையில் இன்னமும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை .அவர்களை இழந்து அவர்களின் குடும்பங்கள் இன்று பாரிய சிக்கல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள் .குறிப்பாக எத்தனையோ இளம் திருமணம் முடித்த வாலிபர்களும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் .இவர்கள் சிறைகளில் வாடுவதன் காரணமாக அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடிக்கொண்டிருப்பது வேதனை மிகு உண்மையாகும்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது அவர்களை அவ்வாறு விடுவிப்பது பொருத்தமானதல்ல என நீதித்துறை கருதுமிடத்து அவர்களுக்கு குறிப்பிட்டளவு காலம் புனர்வாழ்வுக்குரிய ஏற்பாடுகளையாவது செய்து விடுவிக்க முடியும்.ஆனால் இவை பற்றி ஜனாதிபதி கருத்திற் கொள்ளாது, 2000ம் ஆண்டு யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு 2015ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரட்நாயவுக்கு பொது மன்னிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் வழங்கப்பட்டது.நிரபராதிகள் சிறையில் இருக்க குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது.இலங்கையில் நீதி புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இவை சான்றாகும்.கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மார்க்க சம்பிரதாயத்தின் படி அடக்குவதற்கு இவ் அரசாங்கம் தடை விதித்து மாறாக பெரும்பான்மை சமூகத்தின் சம்பிரதாயத்தின் படி எரிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமாணியில் சுற்று நிருபம் வெளியாகியுள்ளதானது இவ் அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் வைத்திருந்த நம்பிக்கையை  வழுவிலக்கச் செய்துள்ளது.ஒட்டுமொத்த உலக நாடுகளும் இக் கொடிய வைரஸினால் இறக்கும் உடல்களை புதைக்கும் போது ,அவ்வாறு புதைப்பதால் எவ்வித எதிர் திசை தாக்கங்களும் மனிதர்களுக்கு ஏற்படப் போவதில்லை என உலக சுகாதார ஸ்தாபனமும் அறிவித்த நிலையில் அறிவார்ந்த ஒரு அரசாங்கம் இவ்வாறு மூர்க்கத்தனமானமாக முடிவெடுத்துள்ளதானது இனவாதிகளை திருப்திப்படுத்தவா என்ற சந்தேகம் எழுகின்றது.

முஸ்லிம்களை கூறு போட்டு விற்கக் கூடிய இனவாத மீடியாக்களுக்கு தீனி போடுவதாகவே அரசாங்கம் உள்ளதை காணலாம்.அதாவது தெரன தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் சதுர என்பவர் நிகழ்ச்சி இடைவெளியின் போது அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடிய விடயம் சம்பந்தப்பட்ட காணொலி அண்மையில் வெளியானது.ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் கள்எளியவைச் சேர்ந்த மௌலவி அம்ஹர் ஹகம்தீன் அவர்கள் "டோக் வித் சதுர" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மத்திய தர சிங்கள சமூகத்தவர்கள் முஸ்லிம்களின் மீதான சந்தேகங்களுக்கு சதுரவின் கேள்விகள் ஊடாக பதில் கிடைத்தது.ஆனால் சதுர எதிர்பார்த்ததை அந் நிகழ்ச்சியில் அடைந்து கொள்ள முடியாமல் போனது.ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை அவர் மெல்ல மெல்ல தனது நிகழ்ச்சியின் ஊடாக வெளிப்படுத்த ஆரம்பித்தார் .ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் வீடுகளிலும் ,பள்ளிவாசல்களிலும் வாள்கள் இருப்பதாக தெரன,ஹிரு தொலைக்காட்சிகள் பகிரங்கமாக கூறின எனினும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கயைும் எடுக்கப்படவில்லை என்பதே அவர்களுடைய இனவாத ஊடக தர்மமாகும்.
பேரினவாதிகளின் கண்களுக்கு உறுத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் பெரும் நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதும் அவருடைய சகோதரர்கள் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இவை தனிநபர்கள் மீதான தாக்குதல் போல் தெரியவில்லை முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்ப்பதன் ஓர் அங்கமாகவே காணலாம்.முன்னால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் எவையும் இது வரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு இருக்க அமைச்சர் ரிசாதின் சகோதரர்களான ரியாஜ் மற்றும் ஹிஜாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இவை அரசாங்கத்தின் பலி வாங்கும் செயலாகவும்,ரிசாத் பதியுதீனின் அரசியல் மீது கொண்டிருக்கின்ற காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று சொல்வதில் ஜயமில்லை.

நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றத்திற்காக ஆறுவருட கடூழிய சிறை தண்டனையை ஒன்பது மாதங்கள் மாத்திரம் அனுபவித்த நிலையில் ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டதோடு சிறைச்சாலையிலிருந்து வந்தவுடன் "நான் சமய கடமைகளிலும் தியானத்திலும் ஈடுபட்டு  வாழ்நாளை கழிக்க போகிறேன் என்று கூறிய ஞானசார தேரர் பின்னர் தியானம் செய்து காலத்தை கழிக்கவுள்ளதை கேட்ட இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து மீண்டும் களத்துக்கு திரும்பினார்.இந்நிலையில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என உறுதிப்படுத்தும் வரை நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு பகிரங்கமாக தெரிவித்துள்ளது.குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுக்கும் என்ற பழமொழி இவர்களுக்கு பொறுத்தமானதாகும்.சமூகத்தால் புரக்கணிக்கப்பட்ட இந்த அமைப்பானது இவ்வளவு தைரியமாக செயற்பட அரசாங்கத்தின் ஆதரவு இல்லாது ஒரு போதும் முடியாது என்பது தெட்டத்தெளிவாக விளங்குகின்றது...அரசியல் அதிகார சண்டை தான் நாட்டில் இ்வ்வாறான நிலை ஏற்பட பெரிதும் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.ஈஸ்டர் தின தாக்குதல் என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத மிகக் கொடூரமான பயங்கரவாத செயற்பாடாகும் அதனுடன் தொடர்புபட்ட அனைவரும் இரக்கமின்றி தண்டிக்கப்படல் வேண்டும் .ஆனால் ஒரு தனிப்பட்ட குழு செய்த தவறிற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் குற்றம் சுமத்துவது நீதிக்கு புறம்பானது.இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு இந்த நாடு சொந்தமில்லை அவர்கள் அரேபியாவிலிருந்து வந்தவர்கள் நாங்கள் சொல்வதை கேட்டு வாழ விருப்பம் இல்லை என்றால் அரேபியாவுக்கு சென்று விடுங்கள் என்று அர்த்தப்படும் படியாக தற்போதனை கொதி நிலையான சூழ்நிலையில் சில அரசியல் வாதிகள் நாடாளுமன்றத்தில் உள்ளும் வெளியிலும் பேசியிருந்தமை முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான வேதனை உண்டாக்கியுள்ளது.சமூக செயற்பாட்டாளரும் புத்தி ஜீவியுமான அஷ்ஷெய்க் இனாமுல்லா மஸுஹூத்தின் வெளியிட்டுள்ள கருத்தானது இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் அரேபியரின் வம்சாவழியினர் என்பது திரிவுபடுத்தப்பட்ட வரலாகும்.கடல்வழி வர்த்தகத்துடன் தென்னிந்தியா ,இலங்கை பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மற்றும் மலையாளம் பேசும் கவர்னர்களுடன் அரேபியா வர்த்தகர்களுக்கு இஸ்லாத்திற்கு முன்பே இலங்கையுடன் தொடர்பு இருந்திருக்கின்றது என்பது ஆதாரபூர்வமானது.


இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் தனித்துவமும் உரிமைக் கலாசாரமும் பிரத்தியேகமானது.இதனை உறுதிப்படுத்தும் முகமாகவே மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் 1981 ம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி முஸ்லிம்களுக்கென்று உதயமாகியது.அவருடைய விடா முயற்சியினாலும், தன் உயிரை துச்சமெனக் கருதி போராடினார் என்பது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை.எனவே,காலாகாலமாக முஸ்லிம் சமூகம் நசுக்கப்பட்டு வருகின்றது.தற்போது இருக்கின்ற நிலைமை மோசமடைந்து சென்று கொண்டிருக்கின்றது இன்னும் அமைதியாக இருந்தால் மு.ஸ்லிம்களாகிய நாம் ஜவேளைத்  தொழுகைக்காக எமது இறையில்லங்களில் ஒலிக்கப்படுகின்ற பாங்கு சத்தத்தை கூட சொல்ல விடாமல் முஅத்தின்களின் குரல் வலைகள் நசுக்கப்படும் அளவுக்கு நிலைமை தலைக்கேறிவிடலாம்.கடந்தகால அரசாங்கத்தில்  முஸ்லிம்களுக்கெதிராக நடந்த இனக் கலவரங்களை சர்வதேச மயப்படுத்தி அல்லது நாட்டின் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் இங்கு  தொங்கி நிற்கத்தான் செய்கிறது.தாக்கப்படுவதும்,குரல் எழுப்புவதும் பின்பு அதை மறந்து விடுவதுமின்றில்லாமல் முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய தலைவர்களோடு இளைஞர் படையும் வலுவோடு கைகோர்த்து செயற்பட வேண்டும்.சமூக ஒற்றுமையின் மூலமே உரிமைக் கலாச்சாரத்தை வென்றெடுக்க முடியும் என்று கூறுவதில் ஜயமில்லை.

Afra Ansar
Freelance journalist

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.