தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள மக்கள் தயாராக இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார் கிண்ணியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டு மக்கள் தற்போது தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை. இன்றைய சூழ்நிலையில் அவர்களின் எதிர்பார்ப்பு அவர்களை இந்த கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதும் தமது குடும்பத்துக்கு தேவையான நாளாந்த உணவை பெற்றுக்கொள்வதுமேயாகும். இதை தாண்டி எதையும் யோசிக்க கூடிய மனநிலையில்  இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இல்லை.

நிதியை கையாளும் அதிகாரம் இந்த மாதத்துடன் ஜனாதிபதியிடம் இருந்து பறிபோகும். அதனை தக்கவைத்துக்கொள்ளவே விரைவாக தேர்தலை நடாத்தி முடிக்க அரசு முயற்சி செய்கிறது 19 ஆம் திருத்த சட்டத்தின்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதத்துக்குள் தேர்தல் ஒன்று நடாத்தி புதிய பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும். அவ்வாறெனின் ஜூன் முதல் வாரம் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

இத்தகைய சூழலில் ஜூன் இருபதாம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்படுள்ளதில் சட்ட சிக்கல் ஒன்று உள்ளது. ஆகவே இது தொடர்பாக நீதிமன்ற ஆலோசனையை பெறுவது பற்றி  ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து வருகிறது.

இன்று இந்த அரசின் நடவடிக்கைகளை எடுத்து பாருங்கள். பொதுமக்களின் பாதுகாப்பு பற்றி அக்கறையற்றவர்களாக நடந்துகொள்கிறார்கள். டெங்குவால் நூற்றுக்கணக்கானோர் இறந்துக்கு நாட்டை மூடினோமா ஏன் கொரோனாவுக்கு நாட்டை மூட வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு அரச உறுப்பினர்களின் அதிகார போதை தலைக்கு ஏறிவிட்டது.

தேர்தலை நடாத்த வேண்டும் என முடிவெடுத்ததும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். அரச வைத்திய சங்கத்தால் வெளியிடப்பட்ட கொரோனா பரவும் குறிகாட்டியில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசமும் சேர்க்கப்பட்டுள்ளது, முன்னாள் அமைச்சர் ரிசாத்தின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார், இரண்டு தனியார் தொலைக்காட்சிகள்கொரோனாவை முஸ்லிம் கொரோனா தமிழ் கொரோனா சிங்கள கொரோனா என்று பிரித்துள்ளனர்.

இவ்வாறு இந்த அரசு தேர்தலை நடாத்துவதிலும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்களிலும் காட்டும் அக்கறையை இந்த அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதிலும் அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதிலும் காட்ட வேண்டும். நாட்டில் இருந்து இந்த நோய் முற்றாக நீங்கும் வரை தேர்தலை நடாத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.