ஆதிப் அஹமட்

இன்று கொரோனா வைரஸ் பரவல் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கையில் சமூக வலைத்தள பாவனையாளர்கள் ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய விமர்சனங்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றன. இந்த விமர்சனங்கள்  இலங்கையில் மாத்திரமல்லாது உலக நாடுகள் பூராகவும் எழுந்திருக்கின்றது. வதந்திகள் மற்றும் இன வெறுப்பு பிரச்சாரங்களுக்கு மிகப்பிரதான ஊடகமாக ஒரு சிலர் இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக்கொள்வதன் விளைவே இந்த விமர்சனங்களுக்கும் சமூக வலைத்தளங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிதைப்பதற்குமான பிரதான காரணங்கள்.அதன் காரணமாகவே இன்று சட்டங்களும் கடுமையாக்கபட்டு பொறுப்பற்ற விதத்தில் பதிவுகளை பதிவிட்ட பலரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

விமர்சனங்கள் ஒருபுறமிருக்க இந்த இலத்திரனியல் நவீன யுகத்தில் சமூக வலைத்தளங்களின் வருகையினால் இலத்திரனியல் நவீன யுகம் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றது என்பதும் யதார்த்தமான  உண்மையாகும்.  பூகோளக்கிராமம்(Global village) என்ற தத்துவ கருத்து இன்று முற்று முழுதாக உலகலாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது என்றால் அதற்கு மிகப்பிரதான காரணம் இந்த சமூக வலைத்தளங்களின் வருகையாகும்.சமூக வலைத்தளங்களின் வருகையினால் உலகில் அரசியல்,ஊடகம்,வியாபாரம், கல்வி,கலை,கலாச்சாரம் உற்பட இன்னும் பல்வேறு விடயங்களும் நவீன மயமாக மாறியிருக்கின்றது என்பது நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய உண்மையாகும். சமூக வலைத்தளங்களின் ஊடாக பல்வேறு நாடுகளில் ஆட்சி மாறியிருக்கின்றது. அதிலும் பிரதானமாக பல்வேறு நாடுகளில் சிறுபான்மை சமூகங்களாக வாழ்கின்ற பல்வேறு சமூகங்களுக்கெதிரான அடக்குமுறைகளை வெளிக்கொண்டு வருவதில் இந்த சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு அளப்பெரியது. தங்களுக்குள்ளே பல்வேறு திறமைகளை கொண்டிருந்தும் இலை மறை காய்களாக திரை மறைவில் இருந்த பலரின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவியிருக்கின்றது. அரசியலிலும் தாம் வாக்களித்த பிரதிநிதியிடம் நேரடியாகவே கேள்விகளை தொடுக்கக்கூடிய ஒரு தளத்தினையும் இந்த சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன.

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி ஊடகத்துறையில் மிகப்பெரிய பங்காற்றிக்கொண்டிருக்கின்றது.  ஊடகத்துறையில் மிகப்பெரிய பங்கினை ஆற்றிக்கொண்டிருந்தாலும் மாறாக தீங்கான விடயங்களும் இல்லாமலும் இல்லை. உலகில் பல்வேறு இடங்களிலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் கண்டுகொள்ளாத பல்வேறு பிரச்சினைகள் சமூக வலைத்தலங்களால் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களை விட விரைவாக மக்களை சென்றடையக்கூடிய வல்லமையினை இந்த சமூக வலைத்தளங்கள் கொண்டிருப்பதே ஊடகத்துறைக்கு இவை பங்காற்றிக்கொண்டிருப்பதற்கான பிரதான காரணமாகும். எனினும் இந்த விரைவுத்தன்மை என்கின்ற விடயமே வதந்திகளையும் இன வெறுப்பு கருத்துக்களையும் மக்கள் மத்தியில் பரப்பிவிடுவதற்கு ஒருசிலருக்கு சாதகமாக அமைந்து விடுவதே மிகப்பெரிய அச்சுறுத்தலாய் மாறியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக கொரோனா அச்சுறுத்தல் உலகினை ஆட்கொண்டிருக்கின்ற நேரத்தில் பெரும்பாலும் வத்நதிகள் உலாவத்தொடங்கி மக்களை அதிகம் பீதியடைய செய்ததன் காரணமாகவே சமூக வலைத்தளங்களின் மீது இத்தனை விமர்சனங்கள் அள்ளி வீசப்படுகின்றன.

சமூக வலைத்தள பாவனையாளர்களாகிய நாம் பொறுப்போடு அவ்வலைத்தளங்களை பயன்படுத்துவோமாக இருந்தால் எங்கள் கைகளில் இருக்கின்ற மிகப்பெறுமதியான ஒரு சொத்தாகவே இந்த சமூக வலைத்தளங்களை காணமுடியும்.

பதிவுகளை இடுகின்ற போது நிச்சயமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சட்ட திட்டங்களையும் குறித்த சமூக வலைத்தள நிறுவனத்தின் சட்ட திட்டங்களையும் கவனத்திற்கொள்ளவேண்டியது மிக அவசியமாகும்.

மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கவேண்டுமென்ற ஆர்வம் நாம் ஒவ்வொருவரிடத்திலும் நிச்சயமாக இருக்கும். இந்த ஆர்வம் நிச்சயமாக பிழையானது அல்ல. எனினும் நம் காதுகளை எட்டும் ஒவ்வொரு செய்திகளையும் சற்று பொறுமையாக உரிய பொறுப்புள்ள தரப்புகளுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி பதிவிடுவதன் மூலமாக  அல்லது உத்தியோகபூர்வ தகவல்கள் கிடைக்கும் வரை காத்திருந்து அவற்றை பதிவேற்றம் செய்வதன் மூலமாக சமூக வலைத்தளங்களையும் வினைத்திறன்மிக்க ஊடகமாக பயன்படுத்திக்கொள்ள நாம் ஒவ்வொருவராலும் முடியும் என்பது யதார்த்த பூர்வமான உண்மையாகும்.எனவே பொறுப்போடு செயற்பட்டு பயன்பெறுவோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.