அரசின் பாராளுமன்றத் தேர்தல் வியூகத்திற்கு பணியுமா கொரோனா? 🖊 KM ரினோஸ் - PAFFREL



Covid -19 கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் தலைவிரித்தாடும் இச்சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், முப்படையினரின் உதவியுடன் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உண்மையில் பாராட்டத்தக்கது. தற்போது அரசினதும் சரி, மக்களிடையேயும் சரி முணுமுணுக்கப்படும் கேள்வி பாரளுமன்றத் தேர்தல் எப்போது என்பதாகும்.

இலங்கையில் தேர்தலை நடாத்துவது தேர்தல் ஆணைக்குழுவே. ஆனால் இலங்கையின் தேர்தல் வரலாற்றில், இலங்கை ஒரு புதிய சவால்மிகு சூழலை எதிர் கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கையில் இம்மாதம் நடாத்தப்படவிருந்த பாராளுமன்ற தேர்தல் எப்போது நடைபெறும்?
 
கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின் இடம்பெற்ற உலகின் முதலாவது தேர்தலாக தென்கொரிய பாராளுமன்ற தேர்தல் கடந்தவாரம் இடம்பெற்றது. 300 உறுப்பினர்களை தேசிய அசம்பிளிக்கு தெரிவு செய்வதற்காக சுமார் 29 மில்லியன் (66%) வாக்காளரகள் வாக்களித்து அந்நாட்டு ஜனாதிபதி மூன் ஜே இன் தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றது.
 
இத்தேர்தலின் போது கொரோனா பாதுகாப்பிற்காக சமூக இடைவெளி பேணல், முகக்கவசம் மற்றும் கைகளை தூய்மைப்படுத்தல் போன்ற முன்பாதுகாப்பு நடவடிக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இலங்கை அரசும் இம்முறைமையினைப் பின்பற்ற நினைக்கிறதா என்பது தேர்தல் ஆணைக்குழுவின் முடிவிலுள்ளது. 

தேர்தல் ஆணைக்குழு முன்னர் அறிவித்ததன் படி இம்மாதம் (ஏப்ரல் 25) நடாத்தப்படவிருந்த தேர்தலானது தற்போது எமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டது. கிட்டிய எமது கால தரவுகளின்படி கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரசின் தாக்கம் இலங்கையில் குறைவடைந்துள்ளதாகவும் இலங்கை அதன் அபாய கட்டத்தை கடந்துள்ளதாகவும் அதனால் இம்மாத கடைசிப்பகுதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு நிலமைகளை வழமைக்கு கொண்டுவர முயற்சிப்பதாக சுகாதாரப் பணிப்பாளர் அறிக்கை விடுத்ததாகவும், மேலும் அரச ஊழியர்களை இம்மாத இறுதியில் மீண்டும் பணியில் அமர்த்தவும், அதேபோல பொதுப் போக்குவரத்தினை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக அரசின் தேர்தல் தொடர்பான நகர்வுகளை பொது மக்களால் ஊகிக்க முடிகின்றது. 

தேர்தல் ஆணைக்குழுவின் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தகவலின்படி மே மாத இறுதிக்காலத்திற்குள் தேர்தலை நடாத்தக்கூடிய சூழல் இல்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசபிரிய குறிப்பிட்டிருந்தார். மேலும் பாராளுமன்ற தேரத்லை நடாத்துவது குறித்து உயர் நீதிமன்றத்தை நாடவேண்டி வரும் எனவும் கூறி ஜனாதிபதிக்கு அது சம்பந்தபான கடிதம் ஏறகனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உண்மையிலேயே இலங்கைக்கு இவ்வாறான சூழல் புதிய ஒன்றாக இருப்பதால் இதற்கான தீர்மானம் இலங்கை அரசினாலும் எவ்வாறு கையாளப்படவுள்ளது என்பது சற்று சுவாரசியமே.

இலங்கை யாப்பின்படி ஜனாதிபதியினால் கடந்த மார்ச் 02ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட்டு அதன் மூன்று மாத காலத்திற்குள் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய உறுப்பினர்களுடன் ஜூன் முதல் வாரமளவில் மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும். அதனடிப்படையில் மே மாத இறுதிக்குள் பாராளுமன்ற தேர்தலை நடாத்த தற்போதைய அரசு காய் நகர்த்தலை மேற்கொண்டு வருவதாக ஏறக்னவே உள்ள தகவலின்படி எம்மால் அறிய முடிகின்றது. உண்மையில் தற்போதுள்ள சூழ்நிலையில் மே மாத இறுதிக்குள் தேர்தலை நடாத்துவது சாத்தியமா? கொரோனா சிவப்பு வலையங்களான கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம், களுத்துறை தவிர்ந்த மற்ற 19 மாவட்டங்களில் நிலைமையை ஓரளவு சீரமைத்தாலும் மற்ற 06 சிவப்பு வலைய மாவட்டங்களையும் கட்டுப்படுத்த அரசுக்குள்ள கால அவகாசம் போதுமா? அவ்வாறு சிவப்பு வலயங்கள் தவிர்த்து ஏனைய 19 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை நடாத்துவதற்கும் தேர்தல் சட்டத்தில் இடமில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதுவே பாராளுமன்ற தேர்தலில்லாமல் மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தலாக இருப்பின் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி இதற்கான இடைக்கால சட்டத்தை அல்லது தீர்மானத்தை எட்டியிருக்க முடியும். ஆனால் இது பாராளுமன்ற தேரத்ல் என்பதால் இதற்கான தீர்மானம் எவ்வாறு எட்டப்பட வேண்டும் என்பது சற்று நிதானித்தே  ஆகவேண்டியுள்ளது.

தற்போதய சூழ்நிலையில் மக்கள் அரசின் மேல் வைத்திருக்கும் நற்பெயரினை மே மாத காலத்திற்குள் பயன்படுத்த அரசு நினைத்தாலும் கெரோனா அதற்கென இடமளிக்குமா என்பது கேள்விக்குறியே.
தற்போது முன்மொழியப்பட்டிருக்கும்  கொவிட்-19 வைரசஸிலிருந்து வெளியேறுவதற்கு என யுக்தி அடிப்படையிலும் இடைப்பட்ட காலம் போதுமா என்பது கேள்விக்குறியே. எனவே முழு இலங்கையையும் வைரஸ் பரவலற்ற தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே தேர்தலை நடாத்துவதற்கான காலம் கனியும். இருப்பினும் ஜனாதிபதி தன் அதிகாரத்தின் கீழ் மீண்டும் பாராளுமன்றம் கூடும் காலத்தை 03 மாத காலத்தை விட அதிகரிப்பதற்கும் சட்டத்தில் இதுவரை இடமில்லை. அவ்வாறு உரிய காலத்திற்குள் தேர்தலை நடாத்த முடியாமல் போனாலோ உரிய திகதியில் புதிய பாராளுமன்றத்தை அல்லது பழைய பாராளுமன்றத்தை கூட்ட முடியாமல் போனாலோ எவ்வகையான தீர்மானத்தை மேற்கொள்வது என்பது சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இது சம்பந்தமான தீர்மானத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழுவும் ஜனாதிபதியின் குழுவும் அடுத்த வாரமளவில் கூடவுள்ளது. 

அந்த அடிப்படையில் ஒன்றில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தேர்தல் ஆணைக்குழு உடன்பட்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அறிவுறுத்தலோடு மே மாத இறுதிக்குள் தென்கொரியாவில் நடாத்தப்பட்டதைப் போன்று கொவிட்-19 கொரோனா தாக்கத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சிவப்பு வலய மாவட்டங்கள், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பிரத்தியேகமாக பாதுகாப்பு சாவடிகள் அமைக்கப்பட்டு நாடு பூராகவும் தேர்தலை நடாத்தி முடித்தல். அவ்வாறில்லையெனில் உரிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடாத்தப்படுவதற்கான சூழ்நிலை இடம்கொடுக்காவிடத்து மீண்டும் பழைய பாராளுமன்றத்தை கூட்டி தீர்மானம் எடுக்கப்படுவதுடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட பாராளுமன்ற தேர்தல் வர்த்தமானி, வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டு புதிய தேர்தல் வர்த்தமானி, வேட்புமனுக்கோரல் இடம்பெற வேண்டும்.

ஆகவே கொவிட்-19 கெரோனாவின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவியோடு அரசாங்கம் மேற்கொண்ட ஆளுமைமிக்க நடவடிக்கையினால் இலங்கையின் வைரஸ் பரவுகை கட்டுப்படுத்தப்ட்டிருப்பினும் தேர்தலை நடாத்த அரசு எவ்வாறானதொரு தீர்மானத்தினை மேற்கொள்ளவுள்ளது என்பதைப் பொறுத்தே “மக்களின் நலனே தற்போதய அரசின் நலனாகும்” என்ற முடிவை எட்ட முடியும். 

KM ரினோஸ் - PAFFREL

கருத்துகள்