ரம்ஸி ராஸிக் கைது விவகாரம்: சில குறிப்புகள்
- அஜாஸ் முஹம்மத் -


(கடந்த இதழ் தொடர்ச்சி..)

முந்திய பகுதியை பார்வையிட - http://www.siyanenews.com/2020/05/blog-post_40.html

முகநூல் வட்டாரத்தில் உள்ள ரம்ஸி ராஸிக் அவர்களின் நட்புகள் பலரும் அவரது வழக்கு விடயத்தில் என்னுடன் கூட்டாகவே ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வேண்டுதலின் பேரில் அவர்களது பெயர்களை இப்போதைக்கு வெளியிடவில்லை. எங்களின் கூட்டு முயற்சியின்படியே கடந்த தவணை ஏப்ரல் 30 ஆம் தேதி ஜனாதிபதி சட்டத்தரணி திரு. எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ரம்ஸிக்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து ரம்ஸியின் கைது விவகாரம் தேசிய, சர்வதேச ரீதியாகப் பேசப்படும் நிலைக்கு மாறியுள்ளது.

மாற்றுச் சமூகங்களைச் சேர்ந்த பல்வேறு நபர்களும் ஊடக, மனித உரிமை அமைப்பினரும் இப்போது ரம்ஸிக்காகக் களத்தில் இறங்கியுள்ளனர்.

அன்றைய தினம் நீதிமன்றம் இரண்டு விடயங்களை முன்வைத்தது.

1) ICCPR இன் கீழ் இவ்வழக்கைத் தொடுக்கலாம் என்பதற்கான போதியளவு பலமான ஆதாரங்களை மன்றுக்குச் சமர்ப்பிக்குமாறு போலிஸ் தரப்புக்குச் சொல்லப்பட்டது.

2) இவ்வழக்கை ICCPR இன் கீழ் தொடுக்க முடியாது என்பதற்கான சட்டக் காரணங்களை எழுத்து மூலமாக மன்றுக்குச் சமர்ப்பிக்குமாறு சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

இதுவரை ரம்ஸிக்கு எதிராக ICCPR இன் கீழ் வழக்கை முன்னெடுக்கலாம் என நீதிமன்றம் திருப்தியுறவில்லை என்பதை அவதானிக்கலாம்.

அந்த அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் தேதி எழுத்திலான சமர்ப்பணத்தையும் மன்றில் முன்வைக்கவும் அதே வேளை பிணைகோரி மேல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகள் எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரம்ஸியின் கைதினைத் தொடர்ந்து நாம் கீழ்வரும் விடயங்களை அவதானிக்கிறோம்:

1) முகநூலில் எழுதுவோர் மிகவும் கவனமாக எழுத வேண்டும். நாம் எழுதும் விடயங்கள் சரியாக இருந்தால் மட்டும் போதாது. அவை பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட முடியாதவாறும் எழுத வேண்டும். குறிப்பாகப் பொதுவெளியில் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுள்ள சொற்கள், பிரயோகங்களைக் கவனமாகக் கையாள வேண்டும். உதாரணமாக, ரம்ஸியின் குறித்த முகநூல் பதிவில் ஜிஹாத் என்ற அரபுச் சொல்லைத் தவிர்த்திருக்கலாம். அவர் முன்வைத்த கருத்தை ஜிஹாத் என்ற சொல்லைக் குறிப்பிடாமலேயே தாராளமாக, விளக்கமாகச் சொல்லி இருக்கலாம். இது ஒரு வகையில் ரம்ஸி தானாகத் தேடிக்கொண்டுள்ள வில்லங்கமாகவே நான் காண்கிறேன். அவரைக் காப்பாற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் நாம் முன்னெடுப்போம். அதேவேளை நியாயமான சுயவிமர்சனத்தையும் செய்து நம்மைச் சரிப்படுத்திக் கொள்வோம்.

2) முகநூல் வாயிலாக பாரிய அளவிலான கருத்துப் பரவலாக்கத்தை, பிரச்சாரத்தைச் செய்ய முனைவது நடைமுறைச் சாத்தியம் குறைந்தது. அத்துடன் முகநூல் கருத்துப் பரிமாற்ற முயற்சியின்போது தனிப்பட்ட ரீதியான குரோதங்கள், வெறுப்புகள், அச்சுறுத்தல்களைச் சம்பாதித்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு தீவிரமாக முகநூலில் எழுதுவோர் தமக்குப் பக்கபலமான பாதுகாப்பான, அரசியல் - பொருளாதார ரீதியில் மிகவும் பலமான ஒரு நட்பு வட்டத்தை நிறுவிக்கொள்ள வேண்டும்.

3) ரம்ஸி கைதானது முதல் இதுவரை அவரது நட்பு வட்டத்தில் உள்ள எவருமே வெளிப்படையாக அவருக்காகப் பொதுவெளியில் குரல்கொடுக்கவோ எழுதவோ செயற்படவோ முன்வரவில்லை. மிகச் சிலரே திரை மறைவில் சில முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ரம்ஸி தனது சொந்த நலன்களுக்காகப் போராடவில்லை. சமூகத்துக்காகவே போராடி வந்தார். ஆனாலும் சமூகம் போதிய அளவு அவருக்கு உறுதுணையாகக் களத்தில் இறங்கவில்லை.

நிற்க,
ரம்ஸி விடுதலையாகும் வரை தொடர்ந்து நாம் முயற்சி செய்ய வேண்டும். அவரைப் போல சமூக வலையமைப்புகளில் தனிப்பட்ட ரீதியில் எழுதிக் கொண்டிருக்கும் திறமைசாலிகளைக் கூட்டிணைத்துப் பலமான ஒரு கட்டமைப்பாக இயங்க   ஒழுங்கு செய்ய வேண்டும்.


நன்றி: நம்மவன் மின்னிதழ் - 03
https://chat.whatsapp.com/IipV9uZsh5AF2Z4EzqIZQS

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.