''விஷேட தேவையுடைய இளைஞன் தாரிக் அஹமட் மீதான பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது, இவ்வாறானவர்களுக்கு நடக்கக்கூடிய அநீதிகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு நீதி கிடைக்க முயற்சி செய்யவேண்டும்...'' - முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா

அளுத்கம , தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான விஷேட தேவையுடைய இளைஞன் தாரிக் அஹமட் கடந்த மாதம் 25 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தவேளை பொலிஸாரினால் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இதனை சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட இரண்டு கண்காணிப்புக் கமரா காணொளிகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தச் சம்பவமானது அளுத்கம பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தாரிக் அஹமட் தனது 4 வயது தொடக்கம் மூளை வளர்ச்சி குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்திய அறிக்கைகள் கூறுகின்றன. 14 வயதினை அடைந்திருந்தாலும் 6 வயது குழந்தைக்குரிய உடலியல் தன்மைகளையே அவர் கொண்டிருந்தார் என  அறியப்படுகிறது.

கடந்த 25 ம் திகதி ஊரடங்கு வேளை,துவிச்சக்கர வண்டியில் சுற்றித்திரிந்த தாரிக், தர்கா நகரின் அம்பகஹ சந்தியை அடைந்த வேளை ,அங்கு காவலரணில் கடமையிலிருந்த பொலிஸார் தடுத்துநிறுத்தினர். விஷேட தேவையுடைய இளைஞராக இருந்தமையாலும், சடுதியாகப் பேசக் கூடிய திறனில்லாதவராக இருந்தமையாலும்  பொலிஸாரின்  கேள்விகளுக்கு அவரால் உடன் பதிலளிக்க முடியவில்லை.

இதனால் ஆத்திரமுற்ற பொலிஸார், துவிச்சக்கர வண்டியை தள்ளி அவரை வீழ்த்தினர் .கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியமையால் , சம்பவ இடத்திலிருந்த ஒருவர், இவரது பெயர் தாரிக் அஹமட் , இவர் ஒரு விஷேட தேவையுடைய இளைஞர் என்று கூறியதும் (அவர் ஒரு முஸ்லிம் என்பதை தெரிந்துகொண்டதும்) மிகவும் கடுமையாகவும், ஈவிரக்கமில்லாத வகையிலும் அவரைத்  தாக்க ஆரம்பித்தனர்.   அங்கு கடமையிலிருந்த 6 பொலிஸார் மற்றும் வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த 2 சிவிலியன்கள்  என சுமார் 8 பேரளவில் தாரிக்கை சரமாரியாகத் தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாகப் பிணைத்து  முகம், கைகள், கால்கள், முதுகு என உடம்பின் பல பகுதிகளையும் கொடூரமாகத் தாக்கினர். இத்  தாக்குதலால் தலையில் ஒரு வெட்டுக்காயம் உட்பட உடம்பின் பல பகுதிகளிலும் பல காயங்கள் காணப்பட்டன.

தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தந்தை, கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையிலும், உடல் முழுக்கக் காயங்களுடனும் துடித்துக்கொண்டிருந்த தனது மகனைக் கண்டதும் கதறியழுதார். தனது மகன் 14 வயதினை அடைந்திருந்தாலும் சிறு குழந்தைக்குரிய மன நிலையில் இருந்ததால் தனது மகனை ஒரு பூவைப் போலவே பாதுகாத்து வந்திருந்தார். மகனது நிலையைக் கண்டதும் அவரது மனது சுக்குநூறாகியது. தனது மகன் மூளை வளர்ச்சி குன்றிய ஒருவர் அவரை விடுவியுங்கள் என்று பொலிஸாரிடம்   மன்றாடினார். இதை பெரிதுபடுத்தக்கூடாது என்ற அச்சுறுத்தல்  எச்சரிக்கையுடன் தாரிக்கை அவனது தந்தையிடம் பொலிஸார்  ஒப்படைத்தனர். இந்த அச்சுறுத்தல் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கும்  அவர் கொண்டுசெல்லவில்லை. இதனால் தாரிக் மிகவும் மோசமாக பாதிப்படைந்தார்.

தெரிந்தவர்களின் அழுத்தம் காரணமாக தாரிக்கின் தந்தை  பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றார். ''மனநலம் குன்றிய இளைஞனை வெளியே நடமாட விட்டது உங்களது தவறு...'' என்று குற்றம் சுமத்தி அவரைத் திருப்பியனுப்பினர்.

அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான  உதவிப் பொலிஸ்  அத்தியட்சகர் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கும் இது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

பின்னர், நலன் விரும்பிகளின் உதவியுடன் களுத்துறை மாவட்ட பிரதிப் பொலிஸ்  மாஅதிபர் அலுவலகத்தில்  செய்யப்பட  முறைப்பாட்டினையடுத்து இளைஞனின் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தாரிக், அவரது தந்தை மற்றும் பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தருடன் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் (JMO ) மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு தாரிக்கை பரிசோதித்த JMO,   பொலிஸ் உத்தியோகத்தரிடம் ''அங்கொடைக்கு அனுப்பவேண்டியவனை இங்கே ஏன் கொண்டு வந்தீர்கள்...? இவர்களை (முஸ்லீம்) போன்றவர்களால்தான் நாம் அனைவரும் இன்று முகக் கவசம் அணியவேண்டி  வந்திருக்கிறது...இவர்களைத்தான் முதலில் தண்டிக்க வேண்டும்...!'' என்று இனத்துவேச வார்த்தைகளால் திட்டினார்.

பின்னர் அந்த JMO , சிறுவன் தாரிக் தொடர்ச்சியாக மருந்துகள் உட்கொள்கிறானா இல்லையா என்று அவர்களிடம்  விசாரிக்காமலேயே  , ''சில வாரங்களாக மருந்து உட்கொள்ளாத காரணத்தினால் சிகிச்சைக்காக அங்கொடை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு...'' தன்னிச்சையாக அறிக்கையளித்தார்.

அதிர்ஷ்டவசமாக தாரிக்கிற்கு பல வருடங்களாக மருத்துவ சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவர் அங்கு கடமையிலிருந்தார். தாரிக் தொடர்ச்சியாக மருந்துகளை உபயோகிப்பவர் என்று அவருக்கு தெரியுமாதலால் , வழக்கமான  மருந்துகளை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

இந்தச் சம்பவத்தினை பொலிஸார் இயன்றளவு மூடிமறைக்க முயன்றாலும், கண்காணிப்புக் கமரா காணொளிகள் மூலமாக உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட்டது.

அண்மைக் காலமாக பொலிஸாரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை அவதானிக்க முடிகிறது. ஊரடங்கு அமுலில்  இருந்தபோது மீறியவர்களை பொலிஸார்  கொடூரமாகத் தாக்கிய சம்பவங்கள் பலவற்றினையும் நாம் அறிகிறோம்.

இவ்வாறு இனம், மதம் என்ற வேறுபாடுகளினை அடிப்படையாக வைத்து அநியாயமிழைக்கப்பட்ட , நீதி  மறுக்கப்பட்ட  பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இருக்கிறார்கள்.

இனவாத விசக் கருத்துக்களை விதைக்கும் இவ்வாறான JMO போன்றவர்களின் அநாகரிக செயற்பாடுகள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவேண்டும்.

இதற்காகவே நான் #JusticeForThariq "தாரிக்கிற்கு நீதி கிடைக்கவேண்டும்" என்னும் தொனியில் ஒரு செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளேன். இந்த செயற்திட்டத்துக்கு நாமல் ராஜபக்‌ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் உள்ளடங்கலாக பிரபலமான அரசியல் தலைவர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் என்னுடன் மும்முரமாக இணைந்து செயலாற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேற்று காலை Twitter ஊடாக எழுப்பப்பட்ட நீதிக்கான குரல் தேசியத்தையும் தாண்டி , பல தேசங்களிலும் உசுப்பி விடப்பட்டுள்ளது, உலகளாவிய விழிப்பின் ஊடாக நீதிக்கான போராட்டம் வலுக்கிறது,

அமெரிக்காவில் பொலிஸார்  மேற்கொண்ட இனவாத செயற்பாடுகளுக்கெதிராக குரல் கொடுக்கும் நாங்கள்,  எமது நாட்டில் சிறுபான்மையினருக்கெதிராக நடத்தப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான  இனவாத செயற்பாடுகளுக்கெதிராகவும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க முன்வரவேண்டும். மேலும், இவ்வாறான இனவாத செயற்பாடுகள் நாட்டின் சிறந்த எதிர்காலத்தை பாதிக்கும் என்பதனைக் கவனத்திற்கொள்ளவேண்டும். இவ்வாறான அநியாயமிழைக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தவறினால் நாமும் குற்றவாளிகளாவோம்.

நேற்று மாலை நான் அளுத்கமைக்கு பாதிக்கப்பட்ட இளைஞன் தாரிக்கின் வீட்டுக்குச் சென்றேன். குறித்த சம்பவத்தினால் மிகவும் இறுக்கமான நிலையிலிருந்த தாரிக், எங்களைக் கண்டதும் சந்தோசமான மன நிலைக்கு மாறிவிட்டார்.எனது அருகில் அமர்ந்து என்னுடன் விளையாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மிகவும் கலகலப்பாக இருந்தார், அந்தப் பிள்ளையுடன் கழித்த அந்த சொற்ப நேரம் எனக்கு மிகுந்த சந்தோசத்தினையும், திருப்தியையும் தந்தது...

உண்மையில் அந்த ஏழை சிறுவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான குரல் ஓங்கி வரும் நிலையில் அதற்கான நியாயம் கிடைக்கும் என முழுமையாக எதிர்பார்க்கிறேன்
என முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

#JusticeForThariq


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.