(எம்.மனோசித்ரா)

நாட்டுக்குள்ளும் கட்சிக்குள்ளும் மீண்டும் மீண்டும் ஏகாதிபத்தியத்திற்கு கீழ்படிவதா என்று மக்கள் சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி இரு பிரதான விடயங்களுக்காக போராடவுள்ளது.
அவற்றில் முதலாவது நாட்டிலிருந்து ஏகாதிபத்திய குடும்ப ஆட்சியை ஒழிப்பதும் , அடுத்தது ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள ஏகாதிபத்திய தலைவரை அந்த பதவியிலிருந்து நீக்குவதுமாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்தோடு நாளை மறுதினம் திங்கட்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் 'உங்கள் பிரச்சினைகளை எமக்கு கூறுங்கள்' என்ற தொனிப்பொருளில் தகவல் சேகரிப்பு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் , இந்த வேலைத்திட்டத்தில் கிடைக்கப் பெறும் தகவல்களை ஜனாதிபதியிடம் கையளித்து அவற்றுக்கு தீர்வினைக் கோரவுள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

ஆட்சியிலிருப்பவர்கள் தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி மிகுந்த ஒற்றுமையுடனும் பலத்துடனும் செயற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மங்கள சமரவீர மற்றும் நிலூக்க ஏக்கநாயக்க ஆகியோர் தேர்தல் களத்திலிருந்து விலகியமை பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தேர்தலில் போட்டியிட தீர்மானித்த எந்தவொரு வேட்பாளரும் தமது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இவ்வாறான முடிவுகளை எடுக்க முடியும்.
தற்போது நாட்டு மக்கள் இளம் பிரதமர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். ஒரு குடும்பம் மாத்திரம் நாட்டை தொடர்ந்தும் ஆட்சி செய்வதா அல்லது மக்கள் ஆட்சி செய்வதா என்பதே இதற்கான காரணமாகும்.

எனவே 'வெற்றி பெறுவோம்' என்ற தொனிப்பொருளிலிலேயே ஐக்கிய மக்கள் சக்தி பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளது. திங்கட்கிழமை இந்த தொனிப்பொருளின் நோக்கங்கள் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். வெற்றி பெறுவோம் என்பது மக்களின் வெற்றியே ஆகும்.

எவ்வாறிருப்பினும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி இரு பிரதான விடயங்களுக்காக போராடவுள்ளது. அவற்றில் முதலாவது நாட்டிலிருந்து ஏகாதிபத்திய குடும்ப ஆட்சியை ஒழிப்பதும் , அடுத்தது ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள ஏகாதிபத்திய தலைவரை அந்த பதவியிலிருந்து நீக்குவதுமாகும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.