பொதுத்தேர்தல் காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வௌியிடப்பட்டது.

எனினும், அதனை நடைமுறைப்படுத்தும்போது பொது சுகாதார பரிசோதகர்களுக்கு சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

தற்போதைய நிலைமையில், தொற்றுநோய் ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருப்பதற்கு இன்று கூடிய பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், வௌியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளானது இயந்திரம் இல்லாத பஸ் போன்றது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

வழிகாட்டல்களில் உள்ள வரையறைகளைக் கண்காணிப்பதற்கு அதிகாரிகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கூட்டத்திலோ அல்லது வேறு கூட்டத்திலோ முகக்கவசம் அணியுமாறு கூறுவதற்கு சட்டப் பாதுகாப்பு காணப்பட வேண்டும். அதிகாரம் தொடர்பான பிரச்சினையைத் தீர்த்து வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுமாறு நாம் கூறினோம். அதிகாரம் வழங்குவதில் தனக்கு பிரச்சினை இல்லை என சுகாதார அமைச்சர் கூறினார். எனினும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதனை எதிர்ப்பதாகக் கூறினர். இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்டப் பேச்சுவார்த்தைகளின்போது அவர் அது குறித்து பேசாமல் காலம் தாழ்த்தினார். சுகாதார அமைச்சர் கூறிய கருத்தொன்றை ஊடகங்கள் வௌியிட்டிருந்தன. 

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என கூறப்பட்டது. இந்த நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என அதிகாரத்தை வழங்காமைக்கான காரணமாகக் குறிப்பிட்டனர். முக்கிய இரண்டு விடயங்களை நாம் கூறினோம். அமைச்சர் அவ்வாறான விடயத்தைக் கூறியிருக்காவிட்டால், அவ்வாறு கூறவில்லை என பிரதான ஊடகங்களுக்கு ஊடக அறிக்கையொன்றை அனுப்புங்கள். பொது சுகாதார பரிசோதகர்கள் தமது கடமையை ஆற்றக்கூடிய வகையில், சட்டப் பின்புலத்தை ஏற்படுத்துமாறு நாம் கூறினோம். நாடளாவிய ரீதியில், COVID-19 மாத்திரமல்ல அனைத்து தொற்றுநோய் ஒழிப்பு நடவடிக்கைகளிலிருந்தும் நாளை முதல் விலகியிருக்க தீர்மானித்துள்ளோம்

என உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.