20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக தொகுதிகளுக்கு பொறுப்புக்கூறும் பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் நோக்குடன் கலப்பு தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்  செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒருவருக்கு புதிய அரசியல் திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றம் செல்ல முடியுமா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், நாம் முதலில் சிந்தித்து பார்க்க வேண்டும். ஏன் அதனை அதாவது இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு எதிராக இதனை செய்தார்கள் என்று! நாட்டின் நலனுக்காக இதனை செய்தார்களா?. அரசியல் கலாசாரம் சட்டம் முதலானவற்றை சிந்தித்து பார்த்து இதனை செய்யவில்லை உண்மையில் போலியான நடவடிக்கையே இது. ராஜபக்ஷ குடும்பம் ஒரு போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்துடனேயே இதனை மேற்கொண்டனர். தூரநோக்குடன் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் அல்ல. தனிப்பட்டவரை கேந்திரமாகக்கொண்டே இது கொண்டுவரப்பட்டது என்றார்.

புதிய திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம் தேசிய  பட்டியலில் ஒருவர் விலகுவதன் மூலம் அந்த பட்டியல் ஊடாக பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றம் செல்வாரா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், அது அரசியல் தீர்மானம். அது உரிய நேரத்தில் தீர்மானிக்கப்படும். நாடு குறித்து சிந்தித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.

துணை பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித உத்தியோக பேச்சுவார்த்தையும் இல்லை. அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

19ஆவது அரசியலமைப்பில் காணப்படும் நெருக்கடிகளை சீர்செய்வது இதன் நோக்கமாகும். அப்போதைய இந்தத் திருத்தத்தினால் நாட்டின் பாதுகாப்பு, ஜனநாயகம், பொருளாதாரம் என்பனவும் சீர்குலைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.