நாடு இரண்டாவது கொவிட் அலையின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து வரும் இந்த சூழ்நிலையில் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்களைத் தவிரவுள்ள அனைத்து பிரதேச பாடசாலைகளிலும் இருக்கும் 06 - 13 வரையான வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நாளைய தினம் (23) ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எனினும் சரியான விஷேட திட்ட ஏற்பாடுகள் இல்லாமல் இவ்வாறு பாடசாலைகளை நாளை ஆரம்பிப்பதற்கு நாட்டிலுள்ள ஆசிரியர் சங்கங்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்திருந்ததுடன், திங்கட்கிழமை (அதாவது நாளை) பாடசாலைகளை ஆரம்பிப்பதாயின் 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களை மாத்திரம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தன.

எனினும், கல்வி அமைச்சானது நாளைய தினம் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த அனைத்து பிரதேச பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக நாளை திறக்கப்படும் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் எமது சியன நியூஸ் இணையம் சார்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்கவை தொடர்பு கொண்டு இது குறித்து வினவினோம்.

"முதலாவது கொரோனா அலையின் போது மூடப்பட்ட பாடசாலைகள் மீள திறக்கும் போது கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. அதாவது முதல் கட்டத்தில் உயர் தர வகுப்புக்கள் மட்டும் ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் கட்டம் கட்டமாக பாடசாலைகள் திறக்கப்பட்டன. அதற்கு முன்னர் பாடசாலைகளில் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

ஆனால் இம்முறை கடந்த வியாழன் (19) கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தூக்கத்தில் இருந்து திடீரென விழித்து எழும்பியவர் போன்று "பாடசாலைகள் திங்கட்கிழமை திறக்கப்படும்" என்று அறிவித்தார். இடையில் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்கிடையில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிரவுள்ள அனைத்து பிரதேச பாடசாலைகளிலும் தொற்று நீக்கல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? அதற்கான அவகாசம் உள்ளதா? தரம் 06 - 13 வரை பெருந்தொகையான மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவார்கள். 


மினுவாங்கொட கொத்தணி, பேலியகொடை கொத்தணி போன்று பாடசாலை கொத்தணி ஒன்று உருவாகி விடக்கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

பாடசாலைகளை ஆரம்பபிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு ஒத்துழைப்பதற்கு ஆசிரியர் சங்கம் என்ற வகையில் நாங்கள் தயார். ஆனால் நாங்கள் கோரிக்கை விடுப்பது, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அது தொடர்பில் முறையான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். 

மேலும் ஒன்றை குறிப்பிட வேண்டும். மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் மாணவர்கள் செல்கிறார்கள். மேல் மாகாணத்தின் எல்லையிலுள்ள பாடசாலைகளும் திறக்கப்படுகின்றன. அவை குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அரசாங்கம் பாடசாலைகளை திறப்பது குறித்து அறிவித்திருந்த போதும், முன் பள்ளி ஆசிரியர்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. தெளிவில்லாமல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது" என்று மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.