(பிபிசி தமிழ்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, நேற்றிரவு (ஜனவரி 8) இடிக்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு தூபி மற்றும் பொங்குத் தமிழ் நினைவு தூபி ஆகியவற்றையும் இடிப்பதற்கான முயற்சிகள் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டன.

எனினும், பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என பலரது எதிர்ப்புக்கு மத்தியில் மாவீரர் நினைவு தூபி மற்றும் பொங்குத் தமிழ் நினைவு தூபி ஆகியன இடிப்பது நிறுத்தப்பட்டது.

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை வெளியில் கொண்டு செல்வதற்கும் போராட்டக்காரர்கள் இடமளிக்கவில்லை.

இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

பல்கலைக்கழக நுழைவாயில் மூடப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியில் ஒன்று திரண்டுள்ளவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவம் அதிகளவில் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியை நோக்கி மக்கள் தொடர்ச்சியாக வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தின் ஆதரவுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.


2018இல் எடுக்கப்பட்ட படம்
படக்குறிப்பு,

2018இல் எடுக்கப்பட்ட படம்

இனப் படுகொலையை மூடி மறைக்கும் திட்டம் - எஸ்.கஜேந்திரன்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இனப் படுகொலையை மூடி மறைப்பதற்காகவே இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிபிசிக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.


தமிழ் மக்களை நிரந்தர அடிமைகளாக நடத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அநீதிகளை மூடி மறைக்கும் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தமிழ் போராட்ட நினைவிடங்கள் எதுவும் இருக்கக்கூடாது எனவும், அவற்றை முற்றாக நீக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

தொடரும் அநீதிகள் - சி.வி.விக்னேஷ்வரன்

சி.வி.விக்னேஷ்வரன்
படக்குறிப்பு,

சி.வி.விக்னேஷ்வரன்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதை போன்ற அநீதிகள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெறுவதற்கான ஆரம்பமே இதுவென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவிக்கின்றார்.


பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இனப் படுகொலை இடம்பெற்றதாக ஐநாவின் விசாரணைகளை நடத்த எதிர்பார்க்கின்ற தருணத்தில், இவ்வாறான அடையாளங்களை அழித்து, மக்களின் எண்ணங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பாகவே தான் இதனை பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவிக்கின்றார்.

இராணுவத்திற்கு தொடர்பில்லை - இராணுவ தளபதி

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா
படக்குறிப்பு,

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலுள்ள நினைவு தூபி இடிக்கப்பட்டமைக்கும், தமக்கும் அணுஅளவேனும் தொடர்பு கிடையாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமை குறித்து இராணுவத்தின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக விடயங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் தலையீடு செய்யாது எனவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என கூறிய அவர், அந்த விடயம் குறித்து தான் அறியவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விவகாரத்திற்கு இராணுவம் தலையீட தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் இராணுவ தளபதி கூறுகின்றார்.

பல்கலைக்கழகத்திற்குள் ஏதேனும் அமைதியின்மை ஏற்பட்டு, பொலிஸாரினால் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் மாத்திரம், தம்மால் தலையீடு செய்ய முடியுமே தவிர, வேறு எந்தவொரு விதத்திலும் தம்மால் அந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் கூறியுள்ளார்.

இரவு நேரத்தில் திருட்டு வேலைகளை செய்ய இராணுவம் ஒருபோதும் செல்லாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

நினைவுதூபி எதற்காக அமைக்கப்பட்டது?

நினைவுதூபி

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி நினைவு தூபி சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

2001ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை தமிழர் தேசத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை அமைக்கப்பட்டிருந்தது.

அந்த பிரகடனத்தை தூபியாகப் புனரமைக்கும் பணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டது.

அவ்வாறு மாணவர் ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட தூபியே 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதேபோல அங்கு போரில் உயிரிழந்த தமிழ் போராளிகள், மாணவர்களின் நினைவாக மாவீரர் நினைவு தூபியும் அமைக்கப்பட்டது.

இலங்கை போரின் போது உயிரிழக்க நேர்ந்த மக்களின் அடையாளமாக அந்த நினைவுதூபிகள் விளங்கி வந்த நிலையில், அவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அந்த நாட்டு அரசால் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

திமுக கட்சியின் தலைவர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், "ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டதற்கு எனது கடும் கண்டனங்கள். பிரதமர் அலுவலகம் இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திட வேண்டும். இது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு" என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், "ஈழப்பேரழிவை சந்தித்து நிற்கும் தமிழர்களை சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இனஅழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

மனோ எதிர்ப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

தற்போதைய  இலங்கை அரசாங்கம்  உயிர் வாழும் தமிழரை மட்டுமல்ல, உயிரிழந்த தமிழரையும் இலங்கையராக கருத மறுப்பதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதுத் தொடர்பில் டுவிட் செய்துள்ள மனோ, ''யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பணியாற்றி போரினால் மரணித்த மாணவர், ஊழியர், உறவுகளை நினைவுக்கூர்ந்து நிறுவப்பட்ட  "முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை" இடித்து தள்ளி, இன்றைய இலங்கை அரசு, உயிர் வாழும் தமிழரை மட்டுமல்ல, உயிரிழந்த தமிழரையும் இலங்கையராக கருத மறுத்து நிற்கிறது. '' எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.