இக்கட்டுரை 2018ஆம் ஆண்டில் இதே தினத்தில் நவமணியில் வெளிவந்தது(அட்டாளைச்சேனை மன்சூர்)  

செப்டம்பர் 16 வந்துவிட்டால் நினைவேந்தல் என்றும் நமது தலைவர் என்று அவருடன் ஒன்றித்தவர்கள், அவரோடு இரண்டரக் கலந்தவர்கள் ஏன் முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் மத்தியில் நினைவூட்டப்படுகின்ற ஒருவர்தான் நமது முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினதும், பின்நாளில் தேசிய ஐக்கிய முன்னணி என்கிற கட்சிகளின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள். அதுமாத்திரமன்றி தேர்தல் காலங்களில் மேடைகளிலும், சுவர்களின் ஒட்டப்படுகின்ற அனைத்து தேர்தல் பிரச்சார ஒட்டிகளிலும் தலைவர் அவர்களின் போட்டோக்கள் தொங்கும். அவ்வாறு தொங்கவிடப்படுகின்ற அனைத்து நபர்களுக்கும் தலைவனாக, தளபதியாக, அரசியல் வழியினைக் காண்பித்தவராக, அரசியலைக் கற்பித்த ஆசிரியராகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றார். ஆனால் அவர் விட்டுச் சென்ற  தடயங்களை மீண்டும் புத்தாக்கம் கொடுத்து இனக்க அரசியலிலும் தனித்துவமான அரசியலை மேற்கொண்ட தலைவர் அஷ்ரப் அவர்களின் கட்சிக்கொள்கைகளுக்கு ஏற்ப அதனைமுற்று முழுதாக பின்பற்றுகின்ற அவரால் உருவாக்கப்பட்ட கட்சிகள் காணப்படுகின்றதா என்றால் அதில் நிறைவான குறைபாடுகள் காணப்படுவதாகவே பலராலும் நோக்கப்படுகின்றன.

உண்மையில் கிழக்கில் அதுவும் முஸ்லிம்களின் தனித்துவம்;;; தேசிய அரசியலில் முஸ்லிம்களின் நிலை, யுத்தத்தின் பின்னரான காலங்களில் முஸ்லிம்களின் நிலைமை, தென்கிழக்கு அலகு அல்லது முஸ்லிம் சுயாட்சி அல்லது இணைந்த அல்லது பிரிந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் தம்மை ஆளுகின்ற அரசியல் உரிமை எவ்வாறு காணப்படவேண்டும் என்கிற விடயங்களை அவர் மரணத்தின் பின்னராக காலங்களில் நிலைத்து நிற்கிறதா அல்லது அவை மறைந்துவிட்டனவா என்று பார்க்க வேண்டியிருக்கிறது. உண்மையில் தலைவர் அஷ்ரப் அவர்கள் அடிக்கடி கூறுகின்ற ஒருவார்த்தையிது. அதாவது என் மரணத்தின் பின்னர் இக்கட்சி தூய்மையற்று தனிநபர்களி;ன் கைகளுக்குச் சென்று கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்படுமாக இருந்தால் அப்போது இக்கட்சியை அழித்துவிடு இறைவா என்று தன்னைப் படைத்த இறைவனிடம் பிரார்த்திப்பதை பல கூட்ட மேடைகளில் உரையாற்றியிருப்பதை அனைவரும் அறிவார்கள். அந்த அடிப்படையில் அவரது கூற்றை இறைவன் அங்கீகரித்திருக்க வேண்டும் என்பதனால்தான் ஒரு கட்சியிலிருந்து பல கட்சிகள் உருவாகியிருக்கின்றன. ஒருமித்து தலைவர் அஷ்ரப் அவர்களால் வழிப்படுத்தப்பட்டு, இனவாதம், மதவாதம், பிரதேச வாதம் அனைத்தையும் உடைந்தெரிந்துவிட்டு தேசியக் கட்சி ஒன்றின் ஊடாக நாட்டை சீர்படுத்த முயன்ற தலைவர் அஷ்ரபின் எண்ணக்கருக்கள் இப்போது என்னாச்சு என்று கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.

அவரால் புடம் போடப்பட்டவர்களில் பலர் தம்மை விடுவித்துக்கொண்டு கட்சியை விட்டொதுங்கி இருக்கின்றனர். சிலர் அதே சாயலில் தானும் இருந்துவிட்டு இறுதிவரைக்கும் அவரது கொள்கைகளுக்கு மாற்றமின்றி அன்றைய போராளியாகவே இருக்கின்றனர். சிலர் அவரை முற்றாக மறந்துவிட்டு தானும் தனது குடும்பமும், தனது தொழிலும் என்றும், சிலர் வெவ்வேறான கட்சிகளை உருவாக்கி கட்சி வியாபாரம் செய்கின்ற நிலைகளுக்குள்ளும் தள்ளப்பட்டு இன்று மரம் எங்களுக்கு வரம் என்று கூறிய கட்சியின் வியாபகம் சுருங்கி ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் நின்றுகொண்டிருக்கின்றதா என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அவரால் மிக முக்கியமாக ஆரம்பிக்கப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறையில் சிறந்த பலனைத் தருகின்றன. அதேவேளை சில திட்டங்கள் இட்ட இடத்திலிருந்து நகரமுடியாமல் தத்தளிப்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

குறிப்பாக ஒலுவில் துறைமுகம் தொடர்பாக அவரால் மிக முக்கியமாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் இன்று பெயரளவில் காணப்படுகிறது. அன்று துறைமுகத்திற்காக பெறப்பட்ட காணிகளின் பெறுமானம் இன்னும் முடிவுறாமலே இருக்கின்றது. ஒலுவில் பிரதேசத்தையும் தாண்டி இன்று நிந்தவூர் போன்ற பிரதேச கரையோரங்கள் கடலுக்கு அடிமையாகி நிலம் கடல் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்ற காட்சியை நாம் நேரில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. என்னதான் பாரிய கல் அணைகட்டுக்கள் போடப்பட்ட போதிலும் கடலின் சீற்றத்தினால் ஒலுவில் பிரதேசத்தின் தென்னை வளம் முற்றாக முடிவுறுத்தப்படும் அளவுக்கு இன்று பல ஏக்கர் நிலங்களைக் காணவில்லை. கடலுக்குள் சென்றதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை இழந்து நாதியற்றுப்போன நிலையில் அந்த மக்கள் தமக்குரிய நஷ்டயீட்டினை எதிர்பார்க்கின்றனர். அதேபோன்றொரு நிலைதான் கடற்றொழிலாளர்ளுக்கும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் ஊடாக தலைவரின் தாரகை மந்திரமாக தென்கிழக்கின் விடிவெள்ளியாக, தென்கிழக்கு கிடைப்பதாக இருந்தால் ஒரு தலைநகராக ஒலுவிலைக் கனவு கண்டவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள். இந்தக் கனவினை மெய்ப்பிக்க வேண்டியது அவரின் வாரிசுகளின் கடமையாகும். நடைபெறுகிறதா? தேர்தல் காலங்களில் மாத்திரம் வருகை தந்து வீராவேசம் பேசுகின்ற கட்சியரசியல் வாதிகளாகவே இன்றை அரசியல் வாதிகள் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் காணப்படுவதாக நமது ஊடக நண்பர் ஒருவர் தெரிவி;த்தார்.

கல்விக்கு எப்போதுமே முன்னுரிமை கொடுத்துவந்த அமைச்சர் அஷ்ரப் அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தை உருவாக்கினார். அவர் அதனை உருவாக்குகின்றபோது அவருடைய அன்றைய எதிராளிகள்  எள்ளி நகையாடினர். அதே எதிராளிகள் அவரின் இலக்கினை உணர்ந்து இன்று வாயாரப் போன்றுகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தி;ன் ஊடாக முஸ்லிம் தேசியம் மற்றும் மக்களுடைய பொருளாதாரம் விவசாயம், கலாச்சாரம், வரலாறு, பண்பாடு, அறிவியல், மருத்துவம், தொழினுட்பம், இலக்கியம், அரசியல்...இப்படி ஏதாவது துறைகளில் அது ஆற்றிய வினைத்திறனுள்ள பங்களிப்பு என்ன என்று அன்று தலைவரோடு ஒட்டி உறவாடி இன்று தனித்துவத்திலிருந்து விலகியிருக்கின்ற பலர் கேட்கின்ற வினாக்கள் இவை. அவருடைய இலக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் மூவின மக்களுக்கான பீடங்கள் பொத்துவிலிலும், தீகவாபியிலும், திருக்கோவில் போன்ற பிரதேசங்களிலும் அமையப்பெறவேண்டும் என்று கூறியிருந்தார். அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்குள் இருக்கின்ற பாலமுனை வைத்தியசாலையை தரமுயர்த்தி அதனை வைத்தியர்கள் பயிற்சிபெறுகின்ற அளவுக்கு மிகப்பெரியதொரு வைத்தியசாலையாக, தென்கிழக்கின் வைத்திய பீடமாக கனவுகண்டார். அந்தக் கனவுகளை மெய்ப்பித்துக் கொடுக்க வேண்டியவர்கள் அவருடைய பணியினை முன்னெடுக்கின்றவர்கள் அல்லது அவரை இன்றும் நினைவுகூருகின்றவர்கள், அரசியலுக்குள் பின்ணிப்பிணைந்திருக்கின்றவர்கள் ஏன் கனவினை மெய்ப்பிக்காமல் இருக்கின்றனர் என்கிற கேள்விகளையும்; இன்றை தருணத்தில் நினைவூட்டப்பட வேண்டியிருக்கிறது.

மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூ அஷ்ரப் அவர்கள் 1948 ஆம் ஆண்டு பிறந்து 2000ம் ஆண்டில் தனது 52வயதை அடைவதற்குள் மரணம் அவரைச் சுவைத்துக் கொண்டது. மரணம் பிறந்த அனைவருக்கும் உள்ள ஒரு விடயமாகும். அதனை தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. இடையில் வந்தாலும் அது இறைவனின் பக்கமுள்ள விடயமாகும். ஆக 11 ஆண்டுகள் அரசியில் கொடிகட்டிப்பறந்து, தனக்குப் பின்னர் இந்த சமூகத்;திற்கான எத்தனையோ வழிகளை விழிமேல் வைத்துவிட்டுச் சென்றிருக்கின்றார். நீண்டு நெடுகாலம் வாழவேண்டும் என்பதற்கான பலவற்றை செய்தும் காண்பித்திருந்தார். அரசியலில் ஞானத்தைப்பெற்றவர் போன்று குறுகிய காலத்திற்குள் ஆயிரமாயிரம் சேவைகளையும், உதவிகளையும், சமூகத்தின்மீது மிக உறுதியான தளத்தையும் இட்டுச்சென்றிருந்தார். முஸ்லிம் சிறுபான்மையினமாக இருந்தபோதிலும் அவர் அதனை உறுதிப்படுத்தி தேசியத்திற்குள் சங்கமிக்கும் வகையில் அவர் பாராளுமன்றத்தில் பல மணிநேரம் சகவாழ்வின் அர்த்த புஷ்டியான விடயங்களை முன்மொழிந்தபோது எள்ளிநகைத்து அதனை தீயிட்டு கூக்குரல் இட்டவர்கள் எங்கே? அவர்கள் எல்லோருமே இன்று ஆளும் கட்சியோடு சங்கமித்து இன்னும் முடிவான தீர்வை கொடுக்க முடியாமல் இருக்கும் நிலைமை இன்றும் தொடர்கின்றனவே!

இன்னும் இதன் பின்னரும் முஸ்லிம் சமூத்துக்குத் தேவையான பலநூற்றாண்டு கால அரசியலின் மிக உறுதியான பாதையை அமைத்து அதில் ஓட்டுவதற்குரிய அனைத்தையும் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள். ஆனால் இன்று என்ன நடைபெறுகின்றது என்றால் அது ஒருபுறமிருக்க அதற்கு எதிரான பல செயற்றிட்டங்களே நடைபெறுகின்றன. இலங்கை முஸ்லிம்களுக்கு நாடுமுழுவதிலுமிருந்து எதிர்ப்பலைகள் பேரினவாத சக்திகளால் மூட்டப்படுகின்றபோது அமைச்சர் அஷ்ரப் அவர்களுடைய வழியை ஒதுக்கிவிட்டு வேறொரு முறையில் பயணிப்பதன் காரணமாக மீண்டும் நஷ்டத்தையே காணவேண்டியிருக்கிறது. ஆகையினால் இன்றைய நாளில் அவருடைய தடங்கள் அவர் இந்த சமூகத்தின் நலன் கருதி மேற்கொண்ட இணக்க அரசியல் ஊடாக கிடைக்க வேண்டிய அபிவிருத்திகள், வேலைவாய்ப்புக்கள், தனித்துவம், இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று கிடைக்கின்றபோது முஸ்லிம்களின் நிலை, குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் நிலை போன்றவற்றை எல்லாம் சீர்படுத்த அவரின் முன்யோசனைகளையும் இணைத்துக் கொண்டு முஸ்;லிம் அரசியல்வாதிகள் ஒன்றுசேர்ந்து பயணிக்க வேண்டியிருக்கிறது.

இன்று அவர் விட்டுச் சென்ற கட்சி பலகூறுகளாக உடைந்துபோன நிலையில் யாரை யார் வெல்வது என்று தேர்தல் மேடைகளில் அவரால் வளர்த்தெடுத்தவர்களே மக்களின் வாக்கை எப்படி பெறலாம் என்பற்காக இல்லாத பொல்லாததையெல்லாம் கூறி மக்களை சீரழிக்கின்ற ஒரு மோசமான கருத்தாடல்களையா தலைவர் இவர்களுக்குக் கூறிவிட்டுச் சென்றிருக்கின்றார் என்றும் யோசிக்கச் செயயும் அளவுக்கு நிலைமை இருக்க இன்று அனைவருமே நினைவேந்தப்படுகின்றார் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள். எனவேதான், தலைவர் அவர்களை இலங்கை அரசியல் வராற்றிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வரிசையில் தனியிடத்தை தான் பெற்ற ஒரு வரலாற்று நாயகனாகவே இன்று மட்டுமல்ல இந்நாட்டில் முஸ்லிம்கள் உள்ளவரை நினைவேந்தப்படுவார் என்பதே யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அவர்தான் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் அரசியலை பலமுறை தூசுதட்டி பக்கம்பக்கமாய் புரட்டிப் போட்டவர். பேரினவாத கட்சிகளுக்குப் பின்னால் அலையாய் அலைந்துகொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடிவெள்ளியாய் உதித்திருந்தார். இஸ்லாமிய அரசியலை கலந்து புதியதொரு அரசியலுக்கான வழியை அமைத்து அதில் பலதரப்பட்ட வெற்றிகளையும் கண்டார். சிலர் பொறுக்க முடியாமல் வெளியேறினர். அவ்வாறு வெளியோர் எல்லோருமே இன்று தலைவர் அவர்களை தலைவர் என்று கூறும் அளவுக்கு அவரின் கருத்தாடல்கள், உறவாடல்கள், மனிதாபிமானச் செயற்பாடுகள், அபிவிருத்திகள் அனைத்தும் அமைந்திருந்தன. அதனை இன்றைய நாளில் நினைவுகூர்ந்து அவரின் அரசியல் தடங்களையாவது ஞாபமீட்டிக்கொள்வதன் ஊடாக அவருடைய வாழ்வின் அர்த்த்தை பலமாக்குவதற்கு உதவவேண்டியது அனைவரினதும் கடமையாகும். அந்தவகையில் அனைவராலும் ஒப்பற்ற தலைவரின் வழியில் நின்று இதயசுத்தியுடன் ஒன்றுபட்ட முஸ்லிம் அரசியலை நோக்கிய பயணத்தை இன்றைய நாளிலிருந்தாவது கைக்கொள்ள முஸ்லிம் மதத்தலைவர்கள் வழிநடாத்துவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர் நடுநிலைவாதிகளாக இலங்கைவாழ் முஸ்லிம்கள். மொத்தத்தில் இன்றும் என்றும் முன்னாள் அமைச்சர் அஷ்ரப் அவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.