தாம் உற்பத்தி செய்யும் அரிசிக்கு, தாம் கோரும் உத்தரவாத விலையை அரசாங்கம் நிர்ணயிக்க மறுக்குமானால் அடுத்த வாரம் முதல் அரிசி உற்பத்தியிலிருந்து விலகி இருக்கப் போவதாக இலங்கை அரிசி உற்பத்தியாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இலங்கையில் மிக விரைவில் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொலன்னறுவை, கிரித்தலை - அக்போ ஹோட்டலில் இன்று விஷேட ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி இலங்கை அரிசி உற்பத்தியாளர்களின் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெற்ற குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை அரிசி உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம கருத்து வெளியிடுகையில்,

' நாட்டரிசிக்கு 110 ரூபாவும் சம்பாவுக்கு 130 ரூபாவும் கீரி சம்பாவுக்கு 160 ரூபாவும் விலை நிர்ணயம் செய்யுமாறு, வாழ்க்கைச் செலவு தொடர்பிலான அமைச்சரவை உப குழுவுக்கு எழுத்து மூலம் இதற்கு முன்னர் அறிவித்தோம்.

சங்கம் என்ற ரீதியில் நாம் முன் வைத்த கோரிக்கைக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. குறித்த கோரிக்கையை நாம், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினருக்கும் அநீதி நடக்கா வண்ணமே நாம் முன் வைத்தோம்.

கூறுவதற்கு கவலையாக உள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அரிசி தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் கரணமாக, பிரதான அரிசி உற்பத்தி ஆலைகள் 1000 இல், 750 ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

இலங்கையில் நெல் உற்பத்தி செய்யப்படும் பிரதான மாகாணங்களில், இம்முறை அவர்களின் விளைச்சலில் 55 வீதம் விற்பனை செய்யப்படாமல் அவர்களில் பொறுப்பிலேயே உள்ளது.

அரசாங்கம், விவசாயிகளுக்கும், சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளுக்கும் வர்த்தமானி ஊடாக விதித்த கட்டுப்பாடுகளே அவர்கள் அவ்வாறு செய்ய காரணமாகும். அவசர கால நிலைமைகளின் கீழ், நுகர்வோர் அதிகார சபை ஊடாக முன்னெடுக்கப்படும் அத்து மீறல்களுக்கு அவர்கள் இவ்வாறு பதிலளிக்கின்றனர்.

தற்போது அரிசி நுகர்வோருக்கு, போதுமான அளவு கிடைப்பதில்லை. விரைவில் நாட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படலாம். அதற்கு முன்னர் எமக்கு அரசாங்கத்துடன் அவசரமாக கலந்துரையாடல் ஒன்றினைப் பெற்றுத் தாருங்கள். ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டை நிவர்த்தி செய்யுமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகின்றோம். என தெரிவித்தர்.

இதன்போது கருத்து வெளியிட்ட இலங்கை அரிசி உற்பத்தியாளர்களின் சங்கத்தின் செயலர் முதித்த பெரேரா,

' இலங்கையில் ஒரு நாளைக்கு 50 இலட்சம் கிலோ முதல் 60 இலட்சம் கிலோ வரையில் அரிசி நுகரப்படுகிறது. அவ்வரிசியை உற்பத்தி செய்ய நாளொன்றுக்கு ஒரு கோடி கிலோ நெல் வேண்டும். மேலும் 5 மாதங்களுக்கு தேவையான நெல் இலங்கையில் உள்ளது.

எனினும் அரசாங்கத்திடம் மேலும் 50 இலட்சம் கிலோ அரிசி மட்டுமே இருப்பில் உள்ளது. அது ஒரு நாளைக்கு கூட போதாது. நெல், அரிசி என்பன தனியார் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமேயே உள்ளன. அரசாங்கத்தின் வர்த்தமானிகளால், தற்போது அரிசி உற்பத்தியாளருக்கு கிலோ ஒன்றுக்கு 6 ரூபா நட்டம் ஏற்படுகிறது. இது தொடர்பில் நியாயமாக ஆராய்ந்து பாருங்கள். உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரை பாதிக்காத விலை சூத்திரமொன்றுக்கு நாம் வர வேண்டும். என தெரிவித்தார்.

எம்.எப்.எம்.பஸீர், வீரகேசரி 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.