கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தின் போது இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து முறையான விசாரணை நடாத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய தினம் (29) நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கடந்த நல்லாட்சியில் வழங்கப்பட்ட நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் மற்றும் அபிவிருத்திதொடர்பான பல ஒப்பந்தங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை.
அதிவேக நெடுஞ்சாலை பணிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதா? என்பதை ஆராயுமாறு குறித்த அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
கடவத்தை - மீரிகமை வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது கட்டம் மற்றும் மீரிகமை - பொதுஹர வரையான இரண்டாவது கட்டம் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த விடயம் தொடர்பில் தேவையான தகவல்களை வழங்குமாறு தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நல்லாட்சியின் கடைசி காலத்தில் நிறுத்தப்பட்ட நிர்மாணப் பணிகளை மக்கள் நலனுக்காக முன்னெடுப்பதாக வீதி அபிவிருத்திஅதிகாரசபை அதிகாரிகளிடம் உறுதியளித்தார்.
குறிப்பாக சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, தேவையான இலக்கை நோக்கி பயணிக்க அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், நெடுஞ்சாலை அபிவிருத்தியின் போது தங்கள் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கு சேவை செய்வது மிகவும் முக்கியமாக கருதி செயற்பட வேண்டும். பொது சேவைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்றும் வீதி அபிவிருத்தி அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தினார். (Siyane News)